Wednesday, September 19, 2012

Vinveliyil Ulaa


விண்வெளியில் உலா கடக ராசி மண்டலமும் அண்டை வட்டாரங்களும் கான்சர் 60 விண்மீன்கள் அடங்கிய இந்த வட்டார விண்மீன் கூட்டத்தில் குறிப்பிடும் படியான சிறப்புகள் ஏதுமில்லாத இராசி மண்டல விண்மீன் கூட்டங்களில் இதுவும் ஒன்று. இது ஜெமினிக்கும் லியோவிற்கும் இடையில் உள்ளது.12 ராசி மண்டல விண்மீன் கூட்டங்களில் இதுவே மிகவும் மங்கலான கூட்டமாகும் உலா வரும் தோற்ற வீதியில் சூரியன் ஜூலை 20 முதல் ஆகஸ்டு 10 வரை இப்பகுதியைக் கடக்கிறது. கிரேக்க புராணத்தில் பல தலை கொண்ட ஹைட்ராவுடன் ஆன போரில் ஹெர்குலஸ்ஸின் பாதத்தில் மிதிபட்டு இறந்ததாகக் கூறுவார்கள்.ஜூபிட்டர் எனும் ரோமப் பெருந் தெய்வத்தின் மனைவியான ஜூனோ என்ற வீரமிக்க அழகு தேவதை ஹைட்ராவைக் காப்பாற்ற நினைத்து ஒரு நண்டை ஏவி விடுகின்றாள்.அதன் காட்சிப் பின்னணியே கான்சர் வட்டார விண்மீன் கூட்டத்தைச் சுட்டும் உருவமானது. சீட்டா (ξ) கான்சரி ஒரு பல்மீனாகும் (Multiple star).ஒரு சிறிய தொலை நோக்கியால் காணும் போது இது தோற்றப் பொலி வெண் 5.1 மற்றும் 6.2 கொண்ட இரட்டை விண்மீனாகத் தெரிகிறது .இவை ஒன்றையொன்று 60 ஆண்டு காலத்திற்கு ஒரு முறை சுற்றி வருகின்றன. 1781 ல் வில்லியம் ஹெர்சல் இது ஒரு மும்மீன் எனக் கண்டறிந்தார். .இன்றைக்கு இது 5 விண்மீன்களால் ஆன ஒரு கூட்டமைப்பு எனக் கண்டறிந்துள்ளனர் மங்கலான இவ்வட்டாரத்தில் காமா(γ) மற்றும் டெல்டா(δ) கான்சரி இரண்டும் இருப்பதற்குள் பிரகாசமிக்க விண்மீன் களாகும். டெல்டா கான்சரியை பூச நட்சத்திரம் என்பர். இவை இரண்டிற்கும் நடுவில் M.44 என்று பதிவு செய்யப்பட்ட ஒரு நெபுலா வடிவ விண்மீன் வெறும் கண்களுக்குக் கூட புலப்படுகிறது. பழங்காலத்தில் இதை எப்சிலான் கான்சரி எனக் குறிப்பிட்டார்கள்.இதை எவ்வளவு நுணுகி ஆராய்ந்த போதும் இதன் கட்டமைப்பைத் தெரிந்து கொள்ள முடியாதிருந்தது. உண்மையில் 520 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள எப்சிலான் கான்சரி ஒரு விண்மீனில்லை.அது ஒரு தனித்த கொத்து விண்மீன் கூட்டமாகும். இது பார்பதற்கு தேன் கூடு போல இருப்பதால் தேன் கூடு கொத்து விண்மீன் கூட்டம் என்றும் குறிப்பிட்டனர். மேகத் துளி போன்றிருந்த இதன் தன்மையை முதன் முதலாகக் கண்டறிந்தவர் கலிலியோ. அவருடைய கண்டுபிடிப்பான தொலை நோக்கியில் தேன்கூடு பிரிந்து மங்கலான பல விண்மீன் களாகத் தெரிந்தது.இதில் மொத்தமாக சுமார் 100 விண்மீன்கள் 16 ஒளி ஆண்டுகள் நெடுக்கில் அமைந்துள்ளன. இவற்றின் தோற்ற ஒளிப்பொலிவெண் 6 முதல் 11 வரையில் உள்ளன.பல வெப்ப மிக்க பெரு விண்மீன் களாகக் காணப்படுகின்றன என்றாலும் நமது சூரியனைப் போன்று ஓரளவு குளிர்ச்சியான விண்மீன்களும் கலந்திருக்கின்றன. இதன் வடவெல்லையில் தோற்ற ஒளிப்பொலிவெண் 4.7 கொண்ட காமா கன்சரியும் தென் கோடியில் தோற்ற ஒளிப் பொலி வெண் 3.9 கொண்ட டெல்டா கன்சரியும் உள்ளன.2600 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள கான்சர் வட்டாரத்தில் M.67 (NGC 2682) எனப் பதிவு பெற்ற மற்றொரு தனித்த கொத்து விண்மீன் கூட்டமுள்ளது. இது ஆல்பா கான்சரிக்கு வலப்பக்கம் சற்று தள்ளியுள்ளது.M.44 யை விட அதிக அளவில்,சுமார் 200 விண்மீன்களைக் கொண்டுள்ளது.நெடுந்தொலைவு காரணமாக இது மங்கலாகவும் ,சிறியதாகவும் தெரிகிறது. இதன் விட்டம் 15 ஒளி ஆண்டுகள். இதில் ஒளிப்பொலிவெண் 4 முதல் 14 வரையுள்ள விண்மீன்கள் அடங்கியுள்ளன. தேன் கூடு போல இதிலும் பல வெப்ப மிக்க பெரு விண்மீன்கள் உள்ளன. இவ் வட்டாரத்தில் 46 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ரோ (ρ) கான்சரி என்ற விண்மீனுக்கு கோள்கள் இருக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளனர்.அக்கோள் நமது வியாழனின் நிறையைப் போல் ௦.9 மடங்குடன் 16 மில்லியன் கிலோமீட்டர் ஆரமுடைய வட்டப்பாதையில் சுற்றி வருவதாகக் கண்டறிந்துள்ளனர்.

No comments:

Post a Comment