Thursday, September 20, 2012

Mind Without Fear


Mind without fear என் நண்பரும் அவர் மனைவியும் சாய்பாபா பக்தர்கள். ஒவ்வொரு வியாழக் கிழமையும் சாய்பாபா பஜனைகளில் கலந்து கொண்டு அவர்களால் இயன்ற நல்ல காரியங்களைச் செய்வார்கள்.ஒரு சமயம் அந்த நண்பரைச் சந்திக்க அவருடைய வீட்டிற்குச் சென்றிருந்தேன்.அப்போது பெங்களூருவில் வசித்து வந்த அவருடைய மகள் தொலைபேசியில் அவருடன் பேசினார்.பின்னர் அந்தச் செய்தியை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அவருடைய பேத்தி பள்ளியில் தேர்வு எழுதும் போதெல்லாம் தாத்தாவும் பாட்டியும் இங்கே சாய்பாபா பஜனையில் பிரார்த்தித்துக் கொண்டதால் நல்ல மதிப்பெண் வாங்கினாளாம். இப்பொழுது எதோ ஒரு போட்டித் தேர்வு எழுதப் போகிறாளாம்.அதில் முழு வெற்றி பெற வரும் வியாழக் கிழமை சாய்பாபா பஜனையில் கூட்டுப் பிரார்த்தனையில் வேண்டிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதை பெருமிதமாகக் கூறினார். தெய்வ நம்பிக்கையை விட மனித நேயத்தை அதிகம் சிந்திக்கின்றவன் நான்.சிலருக்கு மனிதநேயத்தை வெளிப்படுத்த தெய்வம் தேவைப்படுகிறது. வெறும் தெய்வ நம்பிக்கை ஒருபோதும் பெருமையில்லை. அவரிடம் எதையோ சொல்ல நினைத்தேன்,ஆனால் முடியவில்லை.ஏனெனில் கெடுதல் இல்லா அவருக்கு மகிழ்ச்சி தரும் அந்த கடவுள் நம்பிக்கையை நான் கெடுத்து விட விரும்பவில்லை. நீண்ட கால நட்பையும் இழக்க விரும்பவில்லை. உண்மையில் இப்படிப் பட்ட வேண்டுதல்களினால் யாருக்கும் யாதொரு பயனும் இல்லை என்பதை நான் புரிந்து வைத்திருக்கிறேன்.வளர்ந்து வரும் திறமையை குறைந்துக் கொள்ள இது நாளடைவில் வழி வகுக்கும்.தேர்வுக்கு முன்னர் பாடத்தில் மொத்தமுள்ள 50 வினாக்களையும் நன்கு படித்திருந்தால் ஒரு மாணவர் தேர்வு முடியும் வரை கடவுளைப் பற்றி ஒருபோதும் நினைக்க மாட்டார்.ஆனால் சரியாகப் படிக்காவிட்டால் தேர்வுக்குப் போகும் முன் கடவுளை விழுந்து விழுந்து வேண்டிக்கொள்வார்.அதாவது நம்முடைய திறமையில் நமக்கு முழு நம்பிக்கை இல்லாத நிலைகளில் நாம் கடவுளைப் பற்றி அதிகம் சிந்திக்கின்றோம்.தொடக்க காலங்களில் பொதுவாக பிள்ளைகள் அவர்களுடைய பணிகளில் கவனமாக இருப்பார்கள்,விருப்பமாக ஈடுபடுவார்கள்.அதனால் வெற்றி அவர்களுக்கு அவர்களுடைய திறமையால் வெகு இயல்பாகக் கிடைக்கும்.ஆனால் நாம் கடவுளை வேண்டிகொண்டதால் பெரு வெற்றி கிடைத்ததாகக் கூறுவோம்.காலப் போக்கில் ஒருவருடைய கவனத்தை எளிதாக ஈர்க்கக் கூடிய சமுதாயச் சூழலில் தன் திறமையை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகளில் ஒரு தொய்வை ஏற்படுத்திக் கொண்டு விடுவார்கள். கடவுளை வேண்டிக் கொண்டால் தனக்கு வெற்றி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள இது வழிவகுக்கும்.அகத் திறமை வளர்வதற்குப் பதிலாக புற நம்பிக்கைகளே ஒரு மாற்று வழியாக உள்ளத்தில் புகுந்து கொண்டு நிலைப்பட்டு விடும். உங்களுடைய வெற்றி உங்கள் திறமையால் மட்டுமே கிடைத்ததாக இருக்கவேண்டும். கடவுள் நம்பிக்கையால் கிடைத்த பரிசாக இருக்கக் கூடாது. உண்மையில் இது கடவுள் அவநம்பிக்கை இல்லை. ஏனெனில் திறமை என்பது உன்னுள்ளே இருக்கும் அகக் கடவுள்.அகக் கடவுள் மீது நம்பிக்கை வைக்காமல் புறக் கடவுள் மீது நம்பிக்கையை வளர்த்துக் கொள்வது காலப் போக்கில் திறமைகளை குறைத்து விடும்.திறமைகளை வளர்த்துக் கொண்டு விட்டால் வாழக்கையில் எந்தநிலையிலும் அச்சம் ஏற்படவழியில்லை. திறமை இல்லாதவர்கள்,திறமைகளைச் சரியாக வெளிப்படுத்தத் தெரியாதவர்கள்,அகத் திறமைக்கு புற மூலங்களைத் தேடுபவர்கள் இவர்களே காலப் போக்கில் வாழும் நம்பிக்கையை இழந்துவிடுகின்றார்கள் .

No comments:

Post a Comment