Monday, September 3, 2012

Vethith thanimangal-Chemistry


வேதித் தனிமங்கள் -பொட்டாசியம் -கண்டுபிடிப்பு பொட்டாசியம் எரிமலைப் பாறைகளில் சிலிகேட்டாக எங்கும் பரவலாகக் காணப்படுகின்றது .பூமியில் மேலோட்டுப் பகுதியில் இதுவும் சோடியமும் ஏறக்குறைய ஒரே செழுமையைப் பெற்றுள்ளன .பொட்டாசியத்தின் செழுமை எடையில் 2 .35 % இது செழுமை வரிசையில் ஏழாவதாகும்.கிரானைட் கற்களில் பொட்டாசியம் ஓரளவு சேர்ந்திருக்கிறது .கடல் நீரில் சிறிதளவு பொட்டாசியம் இருக்கிறது. சோடியம் மற்றும் பொட்டாசியச் சேர்மங்களை மக்கள் தனிமங்களை அறிவதற்கு முன்பிருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர்.இவற்றின் கார்போனேட்டுக்கள் பழங்காலத்தில் சலவைத் தொழிலில் பயன்படுத்தப்பட்டன .இந்த கார்போனேட்டுக்களைப் பொதுவாக காரங்கள் (alkali) என அழைத்தனர் .சோடியம் காபோனேட்டை சோடா என்றும் பொட்டாசியம் கார்போனேட்டை பொட்டாஷ் என்றும் பெயரிட்டனர். 1807 ல் சர் ஹம்ப்ரி டேவி என்ற இங்கிலாந்து நாட்டு வேதியியலார் பொட்டாஷ்ஷை உருக்கி நீர்மமாக்கி அதை மின்னார் பகுத்து பொட்டாசியத்தை தனித்துப் பிரித்தார் .பொட்டாசியம் எதிர் மின் வாயில் படிந்திருந்தது இது கடல் பாசியின் சாம்பலிலிருந்து பெறப்பட்டதால் பொட்டாசியம் என்ற பெயரைப் பெற்றது.காரத்திற்கு அரேபிய மொழியில் 'காலியம் ' என்று பெயர். இதன் முதல் எழுத்தே பொட்டாசியத்திற்கு வேதிக் குறியீட்டைத் தந்தது . பண்புகள் பொட்டாசியம் இலேசான,மென்மையான வெள்ளி போன்று வெண்ணிறத்துடன் ஆனால் சற்று நீலம் பாய்ந்த பொலிவுடன் கூடிய உலோகமாகும்.காற்று வெளியில் சட்டென மங்கி விடுகிறது.அறை வெப்ப நிலையில் மெழுகு போன்றிருக்கிறது.இதைக் கம்பியாக நீட்டவும்,தகடாக அடிக்கவும் முடிகிறது.இது நேர் மின் வாய் நாட்டமிக்கது(electro positive). நீரை வெடிச் சத்தத்துடன் பகுத்து ஹைட்ரஜனை வெளியேற்றி பொட்டாசியம் ஹைட்ராக்சைடை உற்பத்தி செய்கிறது.இந்த வினையில் மிகுந்த அளவு வெப்பம் வெளிப்படுவதால் ஹைட்ரஜன் எரிகிறது.பொட்டாசியம் தீ சுவாலையுடன் வெடிக்கிறது.வேதி வினைகளின் அடிப்படையில் இது சோடியத்தை ஒத்தது என்றாலும் அதைவிட வினைதிறமிக்கது. பொட்டாசியம் கிளர்ச்சியுடன் ஹாலஜன்கள்,கந்தகம் மற்றும் ஆக்சிஜனுடன் இணைகிறது.சூடுபடுத்தப்பட்ட பொட்டாசியம், ஆக்ஸிஜனைக் கொண்டுள்ள எல்லா வளிமங்களையும் பகுக்கின்றது. நிலையான போரான்,சிலிகான் ஆக்சைடுகள் மற்றும் மக்னீசியம், அலுமினியத்தின் குளோரைடுகள்கூட விதி விலக்கில்லை.சோடியம் போல பொட்டாசியமும் மண்ணெண்னைக்குள் முக்கி பாதுகாப்பார்கள். நீரில் உடனடியாக தீப்பற்றி எரிகிறது. பொட்டசியத்தின் அணு எண் 19,அணு எடை 39.10 .இதன் அடர்த்தி 860 கிகி/கமீ.இதன் உருகு நிலையும்,கொதி நிலையும் முறையே 336.8,1033 K ஆகும். பயன்கள் மின்னணுவியல் துறையில் எலெக்ட்ரான் வால்வுகளைஉண்டாக்கும் போது பல்புக்குள் சிறிதளவு பொட்டாசியத்தை இடுவார்கள். பல்பை மூடிய பின் இது ஆக்சிஜனை எடுத்துக் கொள்வதால் உயரளவு வெற்றிடம் உள்ளே ஏற்படுகிறது.வால்வு வெள்ளிப் பூச்சிட்டது போலத் தோன்றுவது இதனால்தான். பொட்டாசியம் ஹைட்ராக்சைடு என்பது பொட்டாஷ்.பொட்டாசியம் குளோரைடு கரைசலை மின்னாற்பகுத்தும் அல்லது பொட்டாசியம் கார்போனேட் மற்றும் சுண்ணாம்பு நீரிலிருந்தும் இதைத் தயாரிக்கலாம்.இது மென்மையான சோப்பு தயாரிக்கவும்,இதோடு வினை புரியாத வளிமங்களை வறட்சியூட்டவும் பயன்படுகிறது இது விவசாயத்திற்குத் தேவையான உரங்களின் உற்பத்தி முறையில் முக்கியப் பங்கு வகிக்கிறது . பொட்டாசியம் குளோரைடு பொட்டாஷ் உற்பத்திக்கும் ,பொட்டாசியம் புரோமைடு ஒளிப்படச் சுருள்களுக்குத் தேவையான ஒளி உணர் வெள்ளி புரோமைடு உற்பத்திக்கும் பயன் தருகின்றன.பொட்டாசியம் புரோமைடு மருத்துவத் துறையில் மயக்க மூட்டியாக ப் பயன் படுத்தப் படுகிறது .பொட்டசியம் குளோரேட் குளிர் நீரில் குறைவாகவும் சுடு நீரில் உடனடியாகவும் கரைகிறது.இது ஒரு வலிமையான ஆக்சிஜனூட்டிப் பொருளாகும்.பொட்டசியம் குளோரேட்டும்,பாஸ்பரசும் கலந்த கலவை பலத்த ஓசையுடன் வெடிக்கிறது.குளோரேட்டை கந்தகத்துடன் கலக்க மோதும் போது வெடிக்கிறது.அடர் மிகு கந்தக அமிலத்துடன் வினை புரிந்து வெடிக்கக் கூடிய குளோரின் பெராக்சைடை விளைவிக்கின்றது. பொட்டசியம் குளோரேட்,ஆக்சிஜன் உற்பத்தி முறையில் பயன் படுகின்றது. இது வான வேடிக்கைக்கான வெடிகள்,தீக்குச்சிகள்,ஒளிப் படத்திற்கான மின்னல் விளக்குகளுக்கான பொடிகள் போன்றவைகள் தயாரிக்கப் பயன் படுகிறது.தொண்டைக்கு இதமளிக்கும் மருந்துகளில் சிறிதளவு குளோரேட் இருக்கும்.பொட்டாசியம் கார்போனேட் கண்ணாடி, மென் சோப்பு தயாரிக்கவும்,பொட்டாசியம் நைட்ரேட் துப்பாக்கிக்கான வெடி மருந்து தயாரிக்கவும் பயன்படுகின்றன. சோடியமும்,பொட்டாசியமும் சேர்ந்த கலப்பு உலோகம் வெப்பப் பரிமாற்று ஊடகமாகப் பயன் படுகிறது.ஈனுலைகளில் இதன் நீர்மத்தை குளிர்விப்பானாகப் பயன்படுத்துகின்றார்கள் .

No comments:

Post a Comment