Wednesday, September 5, 2012

Eluthatha kaditham


எழுதாத கடிதம். சமுதாயமக்கள் முதலில் வறுமையால் வாடாமல் வாழவேண்டும்.அது உறுதியான பின்பு அடிப்படை வசதிகளுடன் கவலையின்றி வாழவேண்டும் அதன் பின்னர் கூடுதல் வசதிகளைப் பெற்று மகிழ்ச்சியாக வாழவேண்டும்.நாட்டின் வளமும்,செல்வமும் சமமாக மக்களிடையே பங்கிடப்பட முடியாததால் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளினால் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொள்ளவும், எல்லையின்றி மேம்படுத்திக் கொள்ளவும் தவறான வழிகளில் ஈடுபடுகின்றார்கள் .நேரிடையாகச் செய்தால் இனமறிந்து கொண்டு விடுவார்கள் என்று இப்பொழுதெல்லாம் தவறுகளை மறைமுகமாகவும், அரசாங்கத்தின் கூட்டணியோடும் மறைமுகமான அனுமதியுடனும் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். செல்வமும் வசதிகளும் ஒரு சிலரிடையே குவிவதைத் தடுத்து, எல்லோருக்கும் சமப் பகிர்வு என இல்லாவிட்டாலும் ஓரளவு கிடைக்கும் படி செய்வதற்காக உருவாக்கப் பட்ட அமைப்பே அரசாங்கம். இது மக்களால் மக்களுக்காக மக்களைக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட அமைப்புத்தான் என்றாலும் சராசரி மனிதனின் தேவைகளை முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது பூர்த்தி செய்யக் கூடிய அமைப்பாக இல்லை.சமப் பகிர்வு என்று சொல்லிவிட்டு அரசியலுக்குள் நுழைந்தவர்கள் எல்லோரும் தனக்கென ஒதுக்கிக் கொள்ளும் மனப் போக்கை சமுதாய மக்களை விட அதிகம் பெற்றுள்ளார்கள் . தேர்தல் என்பது தேர்வு அதில் வெற்றி என்பது இதைச் செய்வதற்கு மக்கள் கொடுக்கும் வாய்ப்பு என்று இவர்கள் நம்புவதால் இன்றைக்கு ஏராளமானோர் அரசியலில் புகுந்துள்ளனர். போட்டியால் மக்களிடையே இருந்த அதே ஏற்றத் தாழ்வு அரசியலில் புகுந்தோரிடமும் இருப்பதால் மக்களை மறந்தவர்களாக மாறி வருகின்றார்கள். மக்கள் ஏமாந்து விட்டால் ,மக்கள் தான் விழிப்போடு இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் .விழிப்போடு இருக்க வேண்டுமானால் அது பற்றிய குறைந்த பட்ச அடிப்படை அறிவு அவசியம்.ஒரு சிலர் ஒரு சிலவற்றில் விழிப்போடு இருக்க முடியும் ஆனால் எல்லோரும் எல்லாவற்றிலும் அப்படி இருக்கவே முடியாது.மக்களை விழிப்போடு இருக்கவேண்டும் என்று எச்சரித்து விட்டதோடு தன்கடமை முடிந்து விட்டது என்று அரசாங்கம் கைகளைக் கட்டிக் கொள்வதால் மக்களை ஏமாற்றுவது மக்களுக்கு எளிதாகிறது. சீட்டுப் பணம் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு, கோழிப் பண்ணை,ஈமு கோழி பண்ணை,தேக்கு மரம் வளர்ப்பு,போலித் தங்கம்,போலி உற்பத்திப் பொருட்கள்,நில மோசடி,உயர்ந்த கூலிக்குத் தரக் குறைவான வேலை, குறைந்த கூலி கொடுத்து அதிக வேலை,பணம் இரட்டிப்பு,கிரெடிட் கார்டு தில்லுமுல்லு,செல் போன் மற்றும் கம்பியூட்டர் தில்லுமுல்லுகள் என பட்டியல் முடிவில்லாமல் நீண்டுகொண்டே இருக்கிறது.இதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு மக்களை விட அரசுக்குத்தான் உள்ளது. மக்கள் வாழவேண்டியவர்கள் அரசு ஆளவேண்டியவர்கள் .மக்கள் எதைப்பற்றியும் கவலைப் படாமல், அதையெல்லாம் கவனித்துக் கொள்ள நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் தன்னுடைய பணியை மட்டும் செய்யும் போது சமுதாயம் மகிழ்ச்சியுடன் வாழ்கிறது அரசாங்கம் மக்களுடைய நலனைக் காக்கும் என்ற நம்பிக்கையைப் பெறாத போது மக்களிடையே ஏற்படும் மனக் குழப்பத்தால் ஒவ்வொருவரும் ஒரு வரம்பு மீறிச் சிந்திக்கவும் செயல்படவும் துணிவு கொள்கின்றனர்.இது நாட்டின் ஒட்டு மொத்த நலனைச் சீர்குலைக்கும். மக்கள் ஏமாற்றப் படுவதைத் தடுக்க அரசாங்கம் எல்லா வகையாலும் முயலவேண்டும்.இதை அரசாங்கம் செய்யத் தவறினாலும் அல்லது அரசாங்கமே மக்களை ஏமாற்றினாலும் நீதியை நிலைநாட்ட வேண்டியது நீதிமன்றங்களே .பழங் காலத்தில் அரசர்களே தலைவனாகவும் நீதிபதியாகவும் இருந்தார்கள். மக்கள் ஆட்சியில் அப்படி இல்லை என்பதால் அரசாங்கத்தை நீதிமன்றங்களும்,நீதிமன்றங்களை அரசாங்கமும் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்வது மக்களை விட சமுதாயத்திற்கு நல்லது.அப்பொழுதுதான் தன்னைத் தட்டிக் கேட்பதற்கும் ஆள் இருக்கின்றார்கள் என்ற பயத்தில் எந்த சமுதாய அமைப்பும் சமுதாயத்திற்கு எதிராக மறைமுக வேலைகளில் ஈடுபடுவதும் ,ஊக்குவிப்பதும் தடுக்கப்படும். எல்லோருக்கும் வேலை வாய்ப்பை அரசாங்கம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.அப்பொழுதான் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்கையை நிலைப்படுத்திக் கொள்ள மாற்று வழிச் சிந்தனைகளை விட்டு விடுவார்கள்.

No comments:

Post a Comment