Friday, June 21, 2013

Vethith Thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள் -பல்லாடியம் (Palladium) – கண்டுபிடிப்பு

பிளாட்டினம் மற்றும் அத் தொகுதியைச் சேர்ந்த பிற உலோகங்களுடன் பல்லாடியம் சேர்ந்து கிடைக்கின்றது .நிக்கல் -செம்பு கனிமங்களுடனும் இணைந்து காணப்படுவதுண்டு .
1803 ல் டபிள்யு .வுல்லாஸ்டன் என்ற இங்கிலாந்து நாட்டு வேதியியலார் கச்சா பிளாட்டினக் கனிமத்தை இராஜ திராவகத்தை உபரியாக எடுத்துக்கொண்டு அதில் கரைத்து அதனுடன் பாதரச சையனைடைச் சேர்க்க மஞ்சள் நிறத்தில் ஒரு வீழ்படிவு தோன்றியது .கரைசலை கந்தகம் மற்றும் போராக்ஸ் உடன் சேர்த்து சூடு படுத்தி  பல்லாடியம் என்ற புதிய உலோகத்தை அவர் பிரித்தெடுத்தார் .பல்லாடியத்தை வீழ்படியச் செய்ய தேர்வு செய்த மிகச் சரியான வேதிப் பொருளான பாதரச சையனைடு வுல்லாஸ்டன் முயற்ச்சிக்கு முழு வெற்றியைத் தேடித் தந்தது .ஏனெனில் இது பிளாட்டினம் தொகுதியைத் சேர்ந்த பிற உலோகங்களை வீழ் படியச் செய்வதில்லை .
பண்புகள் 
 Pd  என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய பல்லாடியத்தின் அணுவெண் 46, அணு எடை 106.4 ,அடர்த்தி 12000 கிகி/கமீ .இதன் உருகு நிலையும் ,கொதி நிலையும் முறையே 1825 K ,3473 K  ஆகும்.இவ் வுலோகம் கண்டுபிடிக்கப்பட்ட போது பாலாஸ் (Pallas) என்ற குறுங்கோளை விண்ணில் கண்டறிந்தனர் .இதனால் மனம் கவரப்பட்டதால் இந்த உலோகம் பல்லாடியம் என்ற பெயரைச் சூட்டிக் கொண்டது .
இது எஃகு போன்ற வெண்ணிறத் தோற்றங் கொண்டது .இது காற்று வெளியில் மங்கிப் போவதில்லை .பிளாட்டினத் தொகுதி உலோகங்களுள் தாழ்ந்த உருகு நிலையும் ,குறைந்த அடர்த்தியும் கொண்ட உலோகம் பல்லாடியமாகும் .வாட்டிப் பதப்படுத்தும் போது (annealing) பல்லாடியம் மிருதுவானதாகவும் ,கம்பியாக அடித்து நீட்டக் கூடியதாகவும் ஆகின்றது .குளிர் நிலையில் பயன்படுத்துதல் இதன் வலிமையையும் ,கடினத் தனமையையும் அதிகரிக்கின்றது .பல்லாடியம் நைட்ரிக் மற்றும் கந்தக அமிலத்தால் தாக்கப்படுகின்றது.அறை வெப்ப நிலையில் இந்த உலோகம் வழக்கத்திற்கு மாறான ஒரு பண்பைப் பெற்றுள்ளது .இது தன் பருமனைப் போல 900 மடங்கு பருமனுள்ள ஹைட்ரஜனை உட்கிரகிக்கின்றது ஹைட்ரஜனை தூய்மையூட்டும் வழிமுறையில் இது பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது 
பயன்கள் 

நேர்த்தியாக பொடி செய்யப்பட்ட பல்லாடியம் ஒரு வினையூக்கியாக ஹைட்ரஜ னூட்ட (hyrdogenation) ,ஹைட்ரஜனிறக்க (reduction) வினைகளில் கொள்ளப்படுகின்றது .இதன் சில கலப்பு உலோகங்கள் நவரத்தின ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றன.வெள்ளைத் தங்கம் என்பது தங்கமும் பல்லாடியமும் சேர்ந்த கலவையாகும் .தங்கம் போல பல்லாடியத்தையும் மெல்லிய தடிப்புடன் கூடிய இழையாக வடிக்கமுடியும் .இந்த உலோகம் பல்லடைக்க உதவும் கலப்பு உலோக இடுபொருளாகவும் ,அறுவைச் சிகிச்சைக் கருவிகள் தயாரிக்கவும் மின் சுற்றுக்களில் தொடு சாவியாகவும் ,கைக்கடிகாரங்கள் உற்பத்தி செய்யவும் பயன் தருகின்றது 

No comments:

Post a Comment