Wednesday, June 19, 2013

Eluthaatha Kditham

எழுதாத கடிதம் 
நேர்மையைப் பற்றிப் பேச இன்றைக்கு யாருக்குமே முழுமையான தகுதியில்லை. மிக நேர்மையானவர் என்று சொல்லப்படுபவரை இரகசியமாய் ஆராய்ந்து பார்த்தால் அவருடைய நேர்மை
படு மோசமாகத்தான் இருக்கும் .ஒரு மனிதனுக்கு இரண்டு முகங்கள் உண்டு. ஒன்று எலோருக்கும் முன்னால் தோன்றுவது ,மற்றொன்று தனித்திருக்கும் போது வெளிப்படுவது .முன்னது அரிதாரம் பூசப்பட்டது, சூழ்நிலைக்கு ஏற்ப வேஷம் போடக்கூடியது .பின்னது மனிதனின் உண்மையான தோற்றத்தை க் காட்டக் கூடியது என்றாலும் அது பெரும்பாலும் மறைக்கப்பட்டு விடுவதால்,ஒரு மனிதனைப் பற்றிய உண்மையான தோற்றத்தை அறிந்து கொள்ள முடிவதில்லை .
நேர்மையை நேர்மையால் மதிப்பிடும் நிலை மாறி நேர்மையை நேர்மையின்மையால் அளவிட்டறியும் போக்கு இன்றைக்கு சமுதாயத்தில் மிகுந்து வருகிறது ." யார்தான் இலஞ்சம் வாங்கவில்லை ,நீ மட்டும் உத்தமனாய் இருந்து என்ன பிரயோஜனம்.இதென்ன ஊர் உலகத்தில நடக்காததா ' இப்படிச் சொல்லச்சொல்ல நேர்மையின்மை  மறைமுகமாக சமுதாயத்தில் தூண்டப்படுகின்றது .தவறான உதாரணங்களாலும்,அறிவுரைகளினாலும் சரியானவைகள் கூட காலத்தால் தவறானவைகளாக மாற்றம் பெறுகின்றன .  
 சமுதாயப் பொறுப்புணர்வுள்ளவர்கள் நேர்மையின் அவசியத்தை புரிந்திருப்பார்கள் .நேர்மையின் அழிவு சமுதாயப் பொறுப்புணர்வின் அழிவையே சுட்டிக்காட்டுகின்றது.விசாலமான சமுதாயப் பொறுப்புணர்வு ,வெறும் சமூக உணர்வாகி இன்றைக்குஅதுவும்  குறுகிப் போய் தன் உணர்வாகி விட்டது.சமுதாயத்தில் வாழ்ந்தாலும் சமுதாயம் வாழ நினைப்பதில்லை .இதன் வெளிப்பாடே நேர்மையின்மையின் விஸ்வரூபம் .
நேர்மையும் ,நேர்மையின்மையும் பழக்கத்தினால் நிலைப்படும் மனிதப் பண்புகளே .நேர்மையினால் சமுதாய நலத்தின் மூலம் தனி மனிதர்களின் நலம் காக்கப்படுகின்றது .இதனால் சமுதாயத்திற்கு சட்டத்தால் கொடுக்கமுடியாத ஒரு பாதுகாப்பு கிடைக்கின்றது.நேர்மையின்மையால் தனிமனிதன் உடனடி ஆதாயம் பெறலாம் .ஆனால் அது சமுதாயத்தை மெல்ல மெல்லச் சீரழித்து விடும் .இறுதியில் தனி மனிதர்களையும் விட்டுவைப்பதில்லை .
நேர்மையின்மை சமுதாயத்தில் விரைந்து பரவும் . ஒருவருக்கு நோய் என்றால் வைத்தியம் பார்க்கலாம் ஊருக்கே நோய் என்றால் என்ன செய்யமுடியும். 
நேர்மைக்கும் நேர்மையின்மைக்கும் இடையே நடந்த ஒரு போராட்டம் .நேர்மையை நிலை நாட்ட சட்டம் நேர்மையின்மைக்குத் தண்டனை கொடுத்தது .ஒவ்வொரு நாளும் 10,000 ருபாய் அபராதம். நேர்மையின்மை முதல்  நாள் 1 பைசா .இரண்டாம் நாள் 2 பைசா ,மூன்றாம் நாள் 4 பைசா, அடுத்த நாள் 8 பைசா எனத் தவறு செய்கிறது.நேர்மையின்மையை பைசாவால் அளவிடும்போது அது ஒரு பெரிய குற்றமாகத் தெரிவதில்லை .ஆனால் 30 வது நாளில் செய்த தவற்றின் அளவு 53 இலட்சத்தி 68 ஆயிரத்தி 709 ரூபாய் 12 காசுகள் .மொத்த தவற்றின் அளவு இதைபோல இரண்டு மடங்கு .இதில் கண்டுகொள்ளப் பட்டு தண்டிக்கப்பட்டதின் அளவுவெறும்  3 லட்சம் மட்டுமே .

கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் அப்புறம் கண்டுகொள்வதற்கு சரியான காரணம் சொல்லமுடியாது .எது நீண்ட நாள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதோ அது சமுதாயத்தால் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டதாகக் கருதப்பட்டுவிடும்.நிலை பெற்றுவிட்ட பின்பு எதையும் வலிமையான எதிர்ப்பின்றி மாற்றம் செய்யமுடிவதில்லை .

No comments:

Post a Comment