Tuesday, June 25, 2013

Eluthaatha Kaditham

எழுதாத கடிதம் 
இயற்கைச் சீற்றத்தினால் பேரழிவுகள் ஏற்படும்போதெல்லாம் நாட்டிற்குப் பேரிழப்பு விளைகிறது .இயற்கைப் பேரழிவுகளை ,விஞ்ஞானம் மெத்த வளர்ந்த இந்நாளில் ஓரளவு முன்கூட்டியே அறியமுடியும் எனினும் துல்லியமாக வரையறுக்க  முடியாததால் பதிப்புக்களை முழுமையாகத் தவிர்த்துக் கொள்ளமுடிவதில்லை .

சுனாமி ஒரு முறை தென் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கியபோது பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியாமல் கொந்தளிக்கும் கடலுக்குப் பலி கொடுத்தோம்.மீண்டுமொரு சுனாமி நல்லவேளை வரவில்லை .ஒருவேளை மீண்டுமொரு சுனாமி வந்திருந்தால் ,நாம் எந்த அளவிற்கு பாடம் கற்றுக்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக மேற்கொண்டுள்ளோம் என்பது தெரியவரும். சுனாமி பாதுகாப்புக் குழு அமைத்தல் ,பேரிடர் வரும்போது கூட்டம் கூட்டுதல் ,நிவாரணம் என்று ஒரு பெரிய தொகையை ஒதுக்குதல் மட்டும் சுனாமிக்கு எதிராக மக்களுக்குப் பாதுகாப்பு அளித்துவிடமுடியாது .ஒவ்வொரு முறையும் பாதிப்பு ஏற்படும்போது அதைப்பற்றி விரிவாகப் பேசுகின்றோம் ஆனால் பதிப்புக்களினால் ஏற்படும் இழப்பை நாம் பெருமளவு தவிர்த்துக் கொள்ள முடியாத நிலையே இன்னும் நீடித்து வருகிறது. ஒரே மாதிரியான பேரிடர் மீண்டும் மீண்டும் வந்தாலும் இழப்புக்களில் குறைவு என்பதேயில்லை.சொல்லப்போனால் அது பிரிதொரு வழியில் இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது.குளிரூட்டப் பட்ட அலுவலக அறைகளில் இருந்துகொண்டு உரையாடுவதாலும் ,தன்னலமிக்க திட்டங்களை மட்டும் அனுமதித்து நிதி ஒதுக்கீடு செய்வதாலும் ,அந்த நிதி திட்டத்திற்கே முழுமையாச் செலவிடப் படாமல் காணாமற் போய்விடுவதாலும் நம்முடைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பிற்பாடு முழுப் பயன் தருவதில்லை .உத்தரகாண்டில் நிலச்சரிவுகள் ஏற்படும் இடங்களை முன்கூட்டியே இந்த மேலாண்மைக் குழு இனமறிந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இவ்வளவு இழப்பும் சேதமும் ஏற்பட்டிருக்காது .இழப்புக்குப் பிறகு பாதுகாப்பு என்பதைவிட இழப்புக்கு முன் பாதுகாப்பே புத்திசாலித்தனமானது . நோக்கம் உண்மையானதாக இருந்தால் செயலும் உண்மையானதாக இருக்கும் .இனி வரும் நோக்கங்களும் செயல்களும் உண்மையானதாக இருக்க வேண்டிக்கொள்வதைத் தவிர இந்த மக்களால் வேறு என்ன செய்யமுடியும் ?

No comments:

Post a Comment