Sunday, June 2, 2013

V ethith Thanimangal- Chemistry

வேதித் தனிமங்கள் -மாலிப்பிடினம் (Molybdenum) கண்டுபிடிப்பு 

மாலிப்பிடினம் பூமியின் புறவோட்டுப் பகுதியில் மிகச் சிற்றளவிலேயே கிடைக்கின்றது .இதன் செழுமை 0.004 % மட்டுமே .இது கந்தகம்,ஈயம் போன்ற தனிமங்களின் கனிமங்களிலும் தனித்து மாலிப்பிடினம் ஆக்சைடாகவும் கிடைக்கின்றது .மாலிப்பிடின ஆக்சைடு முதலில் மாலிப்பிடினம் எனப் பெயர் பெற்றது .மாலிப்பிடோஸ் என்ற கிரேக்கச் சொல்லுக்குஈயம் போன்றது’ என்று பொருள்.மாலிப்பிடின ஆக்சைடு ஈயம் போன்றிருந்ததால் அது இப்பெயரைப் பெற்றது.

1778 ல் ஷிலே என்ற வேதியியல் அறிஞரால் இவ்வுலோகம் கண்டறியப்பட்டது.எனினும் 1782 ல் தான் இவ்வுலோகம் உண்மையிலேயே தனித்துப் பிரிக்கப்பட்டது.மாலிப்பிடினம் இயற்கையில் தனித்து உலோகமாகக் கிடைப்பதில்லை.செம்பு,டங்ஸ்டன் போன்ற உலோகங்களைப் பிரித்தெடுக்கும்போது மாலிப்பிடினம் துணை விளைபொருளாகக் கிடைக்கின்றது .மாலிபிடிக்
டிரை ஆக்சைடு அல்லது அல்லது அம்மோனியம் மாலிபிடேட்டை ஹைட்ரஜன் ஏற்றம் மூலம் கிடைக்கும் பொடியிலிருந்து மாலிப்பிடினத்தைப் பெறலாம்.
பண்புகள் 
Mo  என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய மாலிப்பிடினத்தின் அணுவெண் 42,அணு எடை 95.94. இதன் அடர்த்தி 10200 கிகி /கமீ .இதன் உருகு நிலையும்,கொதி நிலையும் முறையே 2893 K ,4873 K  ஆகும் .
வெள்ளி போன்று வெண்ணிறமுடைய மாலிப்பிடினம் வேதி வினைகளில் அதிகம் ஈடுபடுவதில்லை.அதனால் பெரும்பாலான அமிலங்களினால் பாதிக்கப்படுவதில்லை.ஹைட்ரோ குளோரிக் அமிலம்,நீர்த்த கந்தக அமிலம் மற்றும் ஹைட்ரஜன் புளூரைடு இவற்றில் கரையாத மாலிப்பிடினம் மிதமான செறிவுள்ள நைட்ரிக் அமிலம்,இராஜ திராவகம் ,குளோரின் நீர் மற்றும் சூடான அடர்மிகு கந்தக அமிலம் ஆகியவற்றில் கரைகிறது .உயர் வெப்ப நிலைகளில் ஆக்சிஜனேற்றம் பெறுகிறது ,உருகிய கார உலோகங்களுடன் எளிதில் வினை புரிந்து 
 மாலிபிடேட்டுகளை உண்டாக்குகின்றது .இதன் உருகு நிலை ஆஸ்மியம், டங்ஸ்டன்,டான்டலம் தவிர்த்த பிற உலோகங்களைக் காட்டிலும் மிகையானது .இதன் மீள் திறன் (elasticity) மிகவும் அதிகம். உயரளவு உருகு நிலை கொண்ட கலப்பு உலோகங்களின் உற்பத்திக்கு இது சேர்மானப் பொருளாக விளங்குகின்றது .
பண்புகள் 
தொடக்க காலத்தில் மாலிப்பிடின உப்புக்கள் எழுதுவதற்குரிய ஸ்லேட்(Slate) தயாரிக்கப் பயன்பட்டன.மாலிப்பிடின சீவல்கள் வேக நெடுக்கை மாற்றி (Gear) யில் உராய்வுறும் பகுதிகளுக்கிடையே  சாலப் பொருத்தமான திண்ம நிலை மசகுப் பொருளாகச் செயல்படுகின்றது.உயர் வெப்பநிலையில் மாலிப்பிடினம் டை சல்பைடு ,மாலிப்பிடின நீரிலி (anhydride) ஆகிவிடுகின்றது.டை சல்பைடு மென் படலத்தை ஏற்படுத்துவதற்கு முன்னால் உயர் வெப்ப நிலையில் உள்ள பாஸ்பேட் தொட்டியில் பொருளை முக்கி எடுத்து பின்னர் டை சல்பைடு மென் படலத்தை ஏற்படுத்த,அது பாஸ்பேட் படலத்தில் ஊடுருவி தடிப்புக் குறைந்த ஒரு மெல்லிய மென்படலத்தை ஏற்படுத்தி அதை மசகுப் படலமாகச் செயல்படுத்துகின்றது.இது உயரளவு அழுத்த விசைகளைத் தாங்கக் கூடியதாக இருப்பதால் திடீர் வேக அகத் தடை ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.இதே காரணத்தினால் மாலிப்பிடினைட் மென் படலம் வெட்டுங் கருவிகள்,வெட்டுங் கைவினைக் கருவிகள் பழுதடையாமல் பாதுகாத்து அவற்றின் பயன்தரு காலத்தை நீட்டிக் கொடுக்கின்றது .
மாலிபிடினம் எக்ஸ் கதிர் குழாய்களில் முக்கியமான தாக்கு இலக்காகப் பயன்தருகின்றது .விரை வேக எலெக்ட்ரான்கள் இந்த இலக்கால் தடுத்து நிறுத்தப்படும்போது அதன் ஆற்றலின் ஒரு சிறு பகுதி எக்ஸ் கதிர்களாக வெளிப்படுகின்றது.மேலும் மின்முனைகளுக்கு வலுவூட்டியாகப் பயன்படுகின்றது .இதற்குக் காரணம் மாலிபிடினத்தின் உயர் உருகு நிலை மற்றும் கண்ணாடியை இறுகப் பற்றிக் கொண்டு மிகச் சரியாகப் பொருந்திக் கொள்ளும் தன்மை போன்ற பண்புகளே ஆகும் 
விறைப்புத் தன்மை ,அரிப்பெதிர்ப்பு போன்ற பண்புகளினால் மாலிபிடினம் படித்தர எடைக் கற்கள் 
செய்யப் பயன் தருகின்றது உயர் வெப்பநிலை அளவீட்டிற்கு மாலிப்பிடினம் -டங்க்ஸ்டன் கம்பிகளால் ஆனா வெப்ப மின் இரட்டை(Thermocouple) அநுகூலமாயிருக்கிறது .மின்னிழை ,பிரகாசமான மின்னிழை விளக்குகளில் மாலிப்பிடினமும்,டங்ஸ்டனும் கலந்த கலப்பு உலோகம் நன்மை அளிக்கிறது .
தூய மாலிபிடினம் கடினமாக இருந்தாலும் அடித்து மெல்லிய கம்பியாக நீட்டக் கூடியது .எனினும் மிக மிக நுண்ணிய அளவில்,பத்தாயிரத்தில் ஒரு பங்கு என்ற அளவில் கூட ஆக்சிஜன் அல்லது ஹைட்ரஜன் கலந்திருந்தால் நொறுங்கும் தன்மையுடையதாகின்றது.கலப்பு உலோகங்களைத் தயாரிக்க மாலிப்பிடினம் இணக்கமாக இருக்கிறது .கலப்பு உலோக எக்கு உயர் வேகத்தில் இயங்கும் இயந்திர உறுப்புகள் ,பீரங்கிக் குழாய்,கவச வண்டிகள் ,துப்பாக்கிகள் செய்யப் பயன்படுகின்றது .குரோமிய -மாலிப்பிடின எஃகால் .உறுதியான உலோகக் குழாய்களைச் செய்யவும் ,இழப்பின்றி இரு குழாய்களை ஒன்றிணைக்கவும் முடியும் .கோமோ குரோம் (கோபால்ட் -மாலிப்பிடினம் -குரோமியம் )
என்ற கலப்பு உலோகம் அறுவைச் சிகிச்சைக் குரிய கருவிகள் தயாரிக்கவும் உடல் உறுப்புகளுக்கான 
  செயற்கை உறுப்புக்களைத் தயாரிக்கவும் பயன்படுகின்றது. உடல் தீங்கிழைக்கும் எந்த வினைகளிலும் ஈடுபடாததால் அறுவைச் சிகிச்சை மருத்துவ முறைகளுக்கு இது உறுதுணையாக இருக்கிறது
சூரிய ஒளிக் கண்ணாடிகளில் மாலிப்பிடினம் பயன்படுகிறது கண்ணாடியில் சிறிதளவு மாலிப்பிடினத்தைச் சேர்க்க சூரிய ஒளியில் நீலம் பாய்ந்தது போல ஒளி ஊடுருவல் திறம் குறைவாகவும் ,இரவில் நிறமற்ற கண்ணாடியாகி உடுருவல் திறம் அதிகமாகியும் காணப்படும் .வேதியியல் வழிமுறைகளிலும் கச்சா எண்ணெய்களைப் பகுத்துப் பிரிக்கும் வழிமுறைகளிலும் மாலிப்பிடினம் டிரை ஆக்சைடு ஒரு வினையூகியாகச் செயல்படுகின்றது .மட்பாண்டங்களில் மாலிப்பிடினம் நீல நிறமேற்றுவதற்குப் பயன் தருகின்றது .தவிரவும் துணி ,பட்டு ,கம்பிளி ,பீங்கான் ,நெகிழ்மம் (plastic) மற்றும் தோல் பொருட்களுக்குச் சாயமேற்றவும் மாலிப்பிடினம் பயன் படுத்தப்படுகின்றது ,

விளை நிலத்தில் மாலிப்பிடினச் சேர்மங்களை ச் சிறிதளவு இடும்போது பயிரின் விளைச்சல் அதிகரிக்கின்றது .நைட்ரஜன் தன்மையமாதலைத் தூண்டுவதால் இது இயலுவதாகின்றது என்றும் குளோரோபில் என்ற பச்சையம் ,புரோட்டீன்கள் ,வைட்டமின்கள் உற்பத்தி செய்வதற்குரிய வினைகளுக்கு இந்த மாலிப்பிடினம் உதவுகிறது என்றும் கண்டறிந்துள்ளனர்  

No comments:

Post a Comment