Friday, July 5, 2013

Eluthaatha Kaditham

எழுதாத கடிதம் 
மாட்டிக் கொள்ளாதவரை திருடர்கள் கூட நல்லவர்கள் தான்;கொலைகாரர்கள் கூட அறக்காவலர்கள் தான்,லஞ்சம் வாங்குபவர்கள் கூட யோக்கியர்கள் தான் .இந்த உண்மையை இந்தியாவில் எல்லோரும் நன்கு புரிந்துவைத்துக் கொண்டு வாழ்கையில் பயன்படுத்தி வளமடைந்து வருகின்றார்கள் .இதில் அரசியல்வாதிகள் ஒரு படி மேலே. இதற்குக்  காரணம் ஒருவர் மாட்டிக் கொள்ளும் பொறிகள் எல்லாம் அவர்கள் கைவசமே என்பதுமட்டுமில்லாமல் ,வேண்டும்போது அவற்றைச் செயலிழக்கச் செய்யும் தந்திரமும் அவர்கள்  தெரிந்து வைத்திருக்கின்றார்கள் .
எல்லோரும் உள்ளூர என்ன நினைக்கின்றார்கள் என்றால் குற்றங்கள் செய்யலாம் ,தெவிட்டும் மட்டும் செய்யலாம் .மாட்டிக்கொள்ளாதவாறு செய்து முடித்துவிட்டால் அது குற்றமேயில்லை ,போற்றப்படுதலுக்குரிய ஒரு அறிவு நுட்பம் .தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்ளும் ஒரு மறைமுகச் செயல் .
வாழ்க்கைப் போராட்டத்தில் உலகிலுள்ள எல்லா உயிரினங்களும் இதைத்தான் செய்கின்றன.விலங்கினங்களை  இயற்கை அனுமதிக்கும் போது ,அந்த அனுமதி மனிதர்களுக்கும் பொருந்தும் என்று மனிதர்கள் எண்ணத் துணியும் போது இது போன்ற விபரீதங்கள் உட்புகுந்து கொள்கின்றன. மிருகங்களின் உலகில் ஒருவர் ஒருவரை கொன்று இரையாக்கிக் கொள்ளலாம் ,இனப்பெருக்கத்திற்காக ஜோடியுடன் சேர சண்டைபோட்டு எதிரியை வீழ்த்தலாம் .மாற்றானுடைய குட்டிகளைக் கொல்லலாம் .அங்கே எதுவுமே தப்பில்லை ,தப்புச் செய்தவர்களுக்குத் தண்டனையுமில்லை .

ஆனால் மனித சமுதாயம் என்பது வேறு.அது நாகரிகத்தின் சின்னம் .எல்லோரும் சம வாய்ப்புடன் வாழும் இனிய சூழலை ஏற்படுத்தி வாழ்வோரும் வாப்போவோரும் தொடர்ந்து வாழும் நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சியாகும். கொடுப்பவர்கள் கொடுக்க வேண்டியதையெல்லாம் கொடுக்காமல் இருப்பதால் எடுப்பவர்கள்  எடுக்கக் கூடாதையெல்லாம் எடுத்துக் கொள்கின்றார்கள் .இந்த அநாகரிக வளர்ச்சி நம்மை நாமே அழித்துக் கொள்வதற்குத்தான் வழிவகுக்கும். 

No comments:

Post a Comment