Monday, July 1, 2013

Vethith thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள்- வெள்ளி -(Silver )-பிரித்தெடுத்தல் 

வெள்ளி தனி உலோகமாகவும் ,கனிமமாகவும் இயற்கையில் கிடைக்கக் கூடிய ஒரு தனிமம் .இயற்கையில் இது தங்கம் ,செம்பு போன்ற உலோகங்களுடன் சேர்ந்து காணப்படுகின்றது.கந்தகம்,ஆண்டிமணி, குளோரின் போன்றவற்றுடன் சேர்ந்த கூட்டுப் பொருளாகவும் கிடைக்கின்றது.வெள்ளித் தாதுக்கள் பெருமளவு கிரீஸ்,ஸ்பெயின், ஜெர்மனி,அமெரிக்கா,பெரு,மெக்சிகோ போன்ற நாடுகளில் கிடைக்கின்றது என்றாலும் அதை அதிக அளவில் பயன்படுத்துவோர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இந்தியாதான்.
வெள்ளியை ஆக்சிஜநீக்க வினைக்கு உட்படுத்தி தூய வெள்ளியை எளிதாகப் பிரிக்கலாம்.தாதுவில் இருக்கும் வெள்ளியின் சேர்மானத்தைப்  பொறுத்து பல்வேறு  வழிமுறைகளைப் பின்பற்றுகின்றார்கள் .
பண்புகள் 
இதன் வேதிக் குறியீடு Ag ஆகும்.இதற்குக் காரணமான அதன் பெயர் லத்தீன் மொழிச் சொல்லான 'அர்ஜென்டம் ' என்பதிலிருந்து பிறந்தது. 
இதற்கு மூலமாக 'பொலிவுமிக்க வெண்மை 'என்ற பொருள்படும் வட மொழிச் சொல்லான அர்ஜெண்டா என்பதையும் கூறுகின்றார்கள்.இதன் அணுவெண் 47,அணு நிறை 107.87 ;அடர்த்தி 10500 கிகி/கமீ .உருகு நிலையும்,கொதி நிலையும் முறையே 1234 K ,2453 K  ஆகும் .
தங்கம் ,பிளாட்டினம் ,போல வெள்ளியும் ஆக்சிஜனை உட்கவர்வதில்லை எனினும் உருகிய வெள்ளி ஆக்சிஜனை உட்கவருகின்றது .உருகிய வெள்ளி உறையும்  போது வெளியேறும் ஆக்சிஜனுடன் வெள்ளியும் உமிழப்படுவதைத் தடுக்க உருகிய குழம்பின் மீது கரித்தூளைத் தூவுகின்றார்கள் .ஓசோன் ,ஹாலஜன்கள் வெள்ளியை வெள்ளிக் கூட்டுப் பொருளாக்கிவிடுகின்றன.அடர் மிகு கந்தக அமிலம்,நைட்ரிக் அமிலம் தவிர்த்த பிற அமிலங்களால் வெள்ளி பாதிக்கப்படுவதில்லை.வளிமண்டலத்திலுள்ள கந்தகக் கூட்டுப் பொருளுடன் கூடி சில்வர் சல்பைடு என்ற கருமையான பூச்சை ஏற்படுத்திவிடுவதால் பளபளப்பு குன்றிப்போய் விடுகின்றது.சூடேற்றப்பட்ட உப்பு அல்லது சமையல் சோடாக் கரைசல் அல்லது அமோனியா அல்லது தையோ யூரிக் கரைசலில் போட்டால் வெள்ளி மீண்டும் பளபளப்பைப் பெறுகின்றது .வெள்ளி ,தங்கத்திற்கு அடுத்தபடியாக மிக அதிகமாக வெப்ப மற்றும் மின்சாரத்தைக் கடத்தும் திறனைப் பெற்றுள்ளது .
பயன்கள் 
பளபளப்பூட்டமுடிவதாலும் ,அரிக்கப்படாததாலும் வெள்ளியும் நகைகள் செய்யப் பயன்பட்டது .வெள்ளியைக் கொண்டு நாணயங்கள் செய்தார்கள் .நகைகள் செய்யும் போது தேவைப்படும் கடினத்தன்மைக்கு ஏற்ப சிறிதளவு செம்பையும் சேர்த்துக்கொண்டார்கள்.வெள்ளி முலாம் பூச்சு அலுமினியம் போன்ற உலோகங்களில் தோற்றப் பொலிவையும்,பயன்பாட்டுக் காலத்தையும் அதிகரித்தது.வெள்ளியையும் பாதரசத்தையும்(amalgam) சேர்த்து ஒரு இரசக் கலவையைச் செய்து அதைப்
பல்லிடுக்குகளை அடைக்கப் பயன்படுத்துகின்றார்கள். 
 ஒரு கிராம் வெள்ளியைக் கொண்டு ஏறக்குறைய இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள கம்பியை இழுக்கலாம்.பட்டு நெசவில் ஊடிழையாகக் கொண்டு அழகூட்டுகின்றார்கள்.பளபளப்பான கண்ணாடியின் பின்புறம் வெள்ளியால் பூச்சிட்டால் அதன் எதிரொளிப்புக் குணகம் 100 சதவீதத்தைத் தொடுகின்றது .மெல்லிய பூச்சு ,பாதி ஒளியை எதிரொளிக்கவும் ,மீதி ஒளியைக் கடத்தவும் செய்கின்றது.இவ்வகைக் கண்ணாடி பல ஒளியியல் கருவிகளிலும் ,கோலோகிராபி(Holography) என்ற முப்பரிமாணப் படப்பதிவு முறையிலும் பயன்படுத்தப்படுகின்றது .ஓரியல்(monochromatic) ஒளி மூலங்களைப் பெறுவதற்கும் இது துணை செய்கிறது .
சில்வர் அயோடைடு என்ற கூட்டுப் பொருள் வெப்ப மண்டலப் பகுதிகளில் மழையோடு சேர்ந்த சூறாவளி ,புயலை வலுவிழக்கச் செய்கிறது .வளிமண்டல ஈரப்பதத்தை மழைத்துளிகளாக வடிக்கும் திறனையும் இது பெற்றிருக்கின்றது .செயற்கை மழையோடு  வரும் வெள்ளி அயோடைடு தாவரங்களுக்கும் ,விலங்கினங்களுக்கும் தீங்கிழைப்பதில்லை 
சூரிய ஒளியை மட்டுப்படுத்தும் சூரியக் கண்ணாடிகள் செய்ய வெள்ளி குளோரைடு பயன் தருகின்றது .ஒளி விழும் போது கண்ணாடிப் பரப்பில் ஒளி ஊடுருவ முடியாத மெல்லிய வெள்ளிப் படலத்தை இக் கூட்டுப் பொருள் ஏற்படுத்தும்.இது ஊடுருவும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்துகின்றது.இந்த வினைக்கு எதிர் வினையால் பழைய நிலையை மீட்டுப் பெறலாம்.சிறிதளவு செம்பு கண்ணாடியோடு சேர்ந்திருந்தால் ஒளி குறையும் போது செம்பு அயனிகள் வெள்ளியைப் பழைய நிலையான வெள்ளிக் குளோரைடு நிலைக்கு எடுத்துச் செல்கின்றன.
வெள்ளிக் கூட்டுப் பொருட்கள் ஒளிக்கு மிகவும் உணர்வு நுட்பம் மிக்கதாய் இருக்கின்றன. வெள்ளி புரோமைடு ,வெள்ளி அயோடைடு போன்ற பொருட்கள் ஒளிப்படப் பதிவுத் தாளில் பயன்படுகின்றன .இது அணு ஆய் கருவியாகப் பயன்படும் அணுக்கருப் பசை(Nuclear emulsion) யிலும் சேர்ந்துள்ளது.பொதுவாக கார ஹாலைடுகள் வெப்ப ஒளிர்வைத்(thermo luminescence) தருகின்றன.இவற்றுடன் 1 % வெள்ளி குளோரைடைச் சேர்க்கும்போது உமிழ்வின் செறிவு 100 மடங்கு அதிகரிக்கின்றது .இப்பண்பு ,ஒரு பொருளின் வெவேறு வெப்பநிலைப் பகுதிகளை இனமறியப் பயன்படுகின்றது .
மின்னார் பகுப்பு மூலம் திண்மத்தில் அயனிகளின் பெயர்ச்சியால் மின் கடத்தலை   ஏற்படுத்த முடியும் ,இது மின்னார் பகுப்பு மின்கலங்களில்(electrolyte batteries) பயன்படுகின்றது .இதற்கு வெள்ளி/வெள்ளி புரோமைடு அல்லது செம்பு புரோமைடு கொண்ட மின்கலம் 0.7 வோல்ட் மின்னழுத்தத்தையும் வெள்ளி/வெள்ளி குளோரைடு கொண்ட மின்கலம் 1 வோல்ட் மின்னழுத்தத்தையும் தருகின்றது .எனினும் திண்ம மின்னார் பகுபொருள் முழுமையான மின்கடத்தாப் பொருளாக உள்ளது .இதனால் தன் மின்னிறக்கம் விளைவதற்கான வாய்ப்புள்ளது. 


No comments:

Post a Comment