Tuesday, July 23, 2013

Philosophy

Philosophy -தத்துவம் 

நம் வாழ்க்கையில் நம்மோடு தொடர்புடைய இரண்டு முக்கிய நிகழ்வுகள் நம்மைக் கேட்கப்படாமலேயே ,நமக்குத் தெரியாமலேயே நடக்கின்றன .ஒன்று நம் பிறப்பு -வாழ்க்கையின் தொடக்கம் ,மற்றொன்று நம் இறப்பு -வாழ்க்கையின் முடிவு.இவ் விரு நிலைகளுக்கும் இடைப்பட்ட காலமே ஒருவருக்கு தன் விருப்பம் போல வாழக் கொடுக்கப்பட்டுள்ளது .அதை நல்லதாக்கிக் கொள்வதும் அல்லதாக்கிக் கொள்வதும் அவரவர் நடத்தையில் தான் இருக்கிறது .
வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலருக்கு கரும்பாக இருக்கின்ற வாழ்க்கை வேறு சிலருக்கு வேம்பாகக் கசக்கின்றது .சிலரது வாழ்க்கை பாடம் ,பலரது வாழ்கையே பாரம் .சிலருக்கு வாழ்க்கை புரியாத புதிர் .வெகு சிலருக்கு அதுவே விடை.சிலருக்கு வாழ்க்கை ஒரு மாயம் ,சிலருக்கு அது வர்ண ஜாலம் .
ஒவ்வொருவரும் அவரவர் அனுபவங்களுக்கு ஏற்ப வாழ்க்கை என்றால் என்ன என்பதை இப்படிச் சொல்லியிருக்கின்றார்கள் .எவரும் வாழ்கையின் மெய்ப்பொருளை முழுமையாகச் 
சித்தரித்துக் கூறவில்லை .ஒருவருடைய எண்ணங்களுக்கு ஏற்பவும் ,ஈடுபாட்டிற்கு ஏற்பவும் வாழ்க்கை விவரிக்கப்பட்டதால் வாழக்கையின் உன்னத நிலையை முழுதுமாக உணராது போய்விட்டோம் ..எல்லோருடைய கருத்துகளிலிருந்தும் ஒரு  குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் கலந்து பெற்ற ஒரு கலப்பினம் வாழ்க்கையை ஓரளவு சரியாக விவரிக்கலாம் .உண்மையில் வாழ்க்கை என்பது மிக மிக இனிமையானது .இந்த வர்ணனைகளுக் கெல்லாம்  அப்பாற்பட்ட தன்மை கொண்டது .அவற்றைச் சரியாகப் புரிந்து கொள்வதில் தான் ஒருவருடைய வாழ்க்கையின் இனிமை இருக்கிறது .பெரும்பாலானோர் வாழவேண்டும் என்ற கட்டாயத்திற்காக வாழ்வது போல வாழ்கின்றார்கள் வாழ்க் கையை வாழ்க்கையாக வாழ்க்கைக்காக வாழ்வதில்லை .நம் எல்லோருக்கும் கிடைத்தற்கரிய ஒன்று கிடைத்திருக்கின்றது என்று சொன்னால் அது மனித வாழ்க்கைதான். 'அரிதரிது மானிடராய்ப் பிறத்தலரிது என்று இச் சமுதாயம் மனிதப் பிறப்பின் சிறப்பை மேன்மைப் படுத்திக் கூறுகின்றது .இப்படிக் கிடைத்த அறிய பிறப்பை வீணாக் கலாமா .நம்முடைய வாழ்க்கையை நாமே சிறப்பூட்டாவிட்டால் யார் அதைச் செய்யமுடியும் ?


No comments:

Post a Comment