Sunday, July 7, 2013

Sonnathum Sollaathathum

சொன்னதும் சொல்லாததும் 




சுய உந்துதலால் அளவில்லாத திறமையைப் பெற்று உலகை அசத்திக் காட்ட முடியும் என்பதற்கு அமெரிக்காவின் ஜார்ஜ் வாசிங்டன் கார்வர் (George Washington Carver) என்ற வேளாண் துறை விஞ்ஞானி மிகச் சரியான எடுத்துக்காட்டு .
மிக ஏழ்மையான நீக்ரோ   குடும்பத்தில் பிறந்தவர்; பெற்றோர்கள் அடிமைகள்;இளம்வயதிலேயே தாயையும்,தந்தையையும் இழந்தவர். படித்துப் பட்டம் பெறுவதற்கு பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. படிக்கும் போதே பலவகையான வீட்டு வேலைகளைச் செய்வதற்கான திறமையை வளர்த்துக் கொண்டார்.இது கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் உயர் கல்வி பெறுவதற்குத் தேவையான பணத்தைச் சுயமாகச் சம்பாதிக்க பேருதவியாக இருந்தது 

அடிமைப் பெற்றோர்களுக்குப் பிறந்தாலும்,முயன்றால் ஒருவர் M.S.,D.Sc.,Ph.D.,போன்ற பல பட்டங்களைப் பெறமுடியும்  என்று உலகிற்கு உணர்த்திக் காட்டியவர்.விவசாய ரசாயனத் துறையில் வல்லவர். பருத்திக்கு மாற்றுப் பயிராக நிலக்கடலை,சோயாபீன்ஸ்,இனிப்பு உருளை போன்றவற்றைப் பயிரிடும் முறையையக் கண்டுபிடித்தவர்.இவையாவும் ஊட்டச் சத்து மிக்கவையாக இருந்ததால் .உணவுப் பண்டங்கள் செய்யும் தொழிற்சாலைகள் பயனடைந்தன.பண்ணைப் பணியாளர்கள் உழைப்பதற்குத் தேவையான ஊட்டச் சத்தை எளிதாக ,மலிவாகப் பெறமுடிந்தது .நிலக்கடலையைக் கொண்டு செய்யக்கூடிய 100 க்கும் மேற்பட்ட உணவுப் பண்டங்கள் செய்யும் முறையை உலகிற்கு அறிமுகப் படுத்தினார் .இவரை கருப்பு லியனார்டோ என்று புகழ்ந்து டைம் இதழ் வர்ணித்துள்ளது .இவருடைய கண்டுபிடிப்புக்களால் ,அழகு சாதனப்  பொருட்கள்,சாயம்,வர்ணம்,பிளாஸ்டிக்,LPG ,மற்றும் வெடி பொருளாகப் பயன்படும் நைட்ரோ கிளிசரின் போன்ற உற்பத்தித் தொழில்கள் வளர்ச்சியடைந்தன .
இவருடைய அளவில்லாத திறமையைப் பார்த்து தாமஸ் ஆல்வா எடிசன் இவர்க்கு அதிக ஊதியத்துடன் கூடிய ஒரு வேலை கொடுத்தார். பலர் அதுபோல முன்வந்தனர் .எனினும் இவர் தான் ஆரய்ச்சி செய்து வந்த நிறுவனத்திலேயே தொடர்ந்து பணியாற்ற விரும்பினார்.தன்னுடைய உழைப்பு முழுவதும் மனித குல நலனுக்குப் பயன்படுத்த அந்த நிறுவனம் உகந்த இடமாக இருந்ததால் அதை விட்டு விலகிச் செல்ல அவர் மனம் விரும்பவில்லை 
1864 - 1943 வரை வாழ்ந்த அவர் மிகச் சிறந்த மனித நேய மிக்கவர் .
அவர் பின் வரும் இளைஞர்களுக்கு பல நல்ல அறிவுரைகளை வழங்கிச் சென்றுள்ளார் .”உயர்ந்த,உறுதியான கண்ணோட்டம் இல்லாத போது மனதில் நம்பிக்கை தோன்றுவதில்லை” என்றும்
“முன்னேற்ற முயற்சிகளுக்கும் ,சாதனைகள் புரிவதற்கும் குறுக்கு வழி எங்கும் இல்லை” என்றும் “வாழ்கையில் ஒரு சாதாரண செயலை அசாதாரணமான வழியில் செய்யும் போது ,நீ உலகையே உன் உள்ளங்கைக்குள் அடக்கிவிடுகின்றாய்” என்றும் அவர் சொன்னவார்த்தை கள்காலத்தால்அழியாதவை.
கார்வர் சிறுவனாக இருந்தபொழுது அவர் கடவுளைப் பார்த்து ,கடவுளே எனக்கு இந்தப் பிரபஞ்சத்தின் இரகசியத்தை  சொல்லமாட்டாயா என்று கேட்டாராம் ,அதற்கு கடவுள் அது யாருக்கும் சொல்லக்கூடாத எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் என்றாராம்..அப்படியானால் சரி, இந்த நிலக்கடலையின் ரகசியத்தையாவது சொல்லக்கூடாதா என்று இவர்  கேட்க அதற்கு கடவுள்ஜார்ஜ் அது உன்னளவே உன்னுள்ளே இருக்கிறது” என்றாராம்.
விழித்துக் கொண்டே கனவு கண்டதால் கார்வரால் சாதனை படைக்க முடிந்தது.


No comments:

Post a Comment