Monday, July 29, 2013

Sonnathum Sollaathathum

சொன்னதும் சொல்லாததும் 
இன்றைய அறிவியல் உலகில் ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) அறியாதவர்கள் யாருமிலர் .அந்த அளவிற்கு அவர் உலகப் புகழ் பெற்றவர் .ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்குப் பிறகு மிகச் சிறந்த அறிவியல் மேதை என்று பெருமைப் படுத்தப்பட்டவர் .
இவர் கொள்கை இயற்பியலில் சிறந்து விளங்குகின்றார்.பொதுச் சார்புக் கொள்கை (General theory of Relativity) மற்றும் குவாண்டம் கொள்கை(Quantum theory) யில் ஆர்வம் கொண்டு ஆராய்ச்சி செய்து வருபவர்.இவர் எழுதிய  "A brief history of time " என்ற நூல் மிகவும் புகழ் பெற்றது .நேரமும்,வெளியும் கூட சார்பியல் மாற்றங்களுக்கு உட்பட்டவையே என்பதை உணர்ந்து கொண்டவர்களால் மட்டுமே இவருடைய ஆழமான கருத்துக்களைப் புரிந்து கொள்ள முடியும் 
1942 ஜனவரி 8 ல் இங்கிலாந்து நாட்டில் பிறந்தவர் .1963 ல் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டார்.அதன் பிறகு இவரால் நடக்கமுடியாமல் கால்கள் முடங்கிப் போயின.மாற்றுத் திறனாளி போல தள்ளு வண்டியில் செல்ல வேண்டியதாயிற்று.நோய்க்காக சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது அவர் இன்னும் இரண்டாண்டுகள் மட்டுமே உயிர் வாழ்வார் என்று மருத்துவர்கள் கூறினார்கள் .இருப்பினும் அவர் மனம் தளர்ந்து போய்விடவில்லை ,வாழ்கையே போய்விட்டது என்று சும்மாவே காலத்தைக் கழிக்கவும் இல்லை.வெறுத்துப் போய் வாழ்கையை முடித்துக் கொள்ளவும் இல்லை.வாழ்கையை மேலும் சுவாரசியமாக்கிக் கொள்ள அவர் அறிவியலுக்கு தன்னை முழுதுமாக அர்பணித்துக் கொண்டார் .அவருடைய அந்த தணியாத தாகமே அவர் உயிருக்கு இன்னும் நீர் வார்த்துக் கொண்டிருக்கிறது.விதியை வென்று புன்னகைக்கும் மதியை வெகு சிலரிடம் மட்டுமே பார்க்க முடியும். அவர்களுள் ஸ்டீபன் ஹாக்கிங்கும் ஒருவர்.
சிறுவயதில் பள்ளியில் படிக்கும் போதே வயதுக்கு மீறிய பல அறிவியல் விஷயங்களைப் பற்றிப் பேசினார் .அப்போதே அவர் ஒரு அறிவியல் மேதை என்றும் அறிவியல் பைத்தியம் என்றும் எல்லோராலும் வர்ணிக்கப்பட்டார்.1963 ல் கேம்பிரிட்ஸ் சென்று ஆராய்ச்சிகளில் ஈடுபடலானார். பின்னர் இங்கிலாந்திலுள்ள சில கல்லூரிகளை பேராசிரியராகப் பணி புரிந்தார் .1979 ல் கேம்பிரிட்ஸ் பல்கலைக் கழகத்திலேயே பேராசிரியராக நியமிக்கப் பட்டார் .அரிய ஆராய்சிகளில் சிறந்து விளங்கியதால் ராயல் சொசைடியில் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார் .
மாற்றுத் திறனாளிகள் மனம் வைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை எடுத்துக் கூறும் சான்றாக இவர் வாழ்கை விளங்குகிறது .”அறிவு நுட்பம் என்பது ,மாற்றங்களை இனமறிந்து ஏற்றுக்கொள்ளும் மனிதப் பக்குவம்தான்” என்று இவர் கூறுவார் .

" நான் மரணத்தைக் கண்டு பயப்படவில்லை ஆனால் மரணம் என்னருகில் இருப்பதால் நான் சாவின் விளிம்பில் இருக்கின்றேன்அதற்கு முன் நான் முடிக்க வேண்டும் என்று விரும்பும் செயல்கள் பல இருக்கின்றன " என்று இவர் கூறுவதைக் கேட்கும் போது வாழ்க்கை சில காலமே என்றாலும் அதிலும் செயற்கரிய செயலைச் செய்து சாதனை படைக்க முடியும் என்றே எண்ணத் தோன்றுகிறது .

No comments:

Post a Comment