Monday, July 8, 2013

Vethith thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள் -காட்மியம் -கண்டுபிடிப்பு 
காட்மியத்தின் கண்டுபிடிப்பு மிகவும் எதேச்சையானது .ஜெர்மன் நாட்டில் வேதிப் பொருள் விற்பனைக் கூடங்களின் ஆய்வாளரான ஸ்ட்ரோமேயர் (F.Stromeyer) துத்தநாக கார்போனேட்டில் உள்ள வேற்றுப்பொருளிலிருந்து 1817 ல் காட்மியத்தைக் கண்டுபிடித்தார் .நீலம் பாய்ந்த சாம்பல் நிற உலோகமாக இருந்த அதற்கு காட்மியம் எனப் பெயரிட்டார் .துத்தநாக கார்போனேட்டுக்கு கிரேக்க மொழியில் காட்மியா என்று பெயர். இதே  காலத்தில்   இப் புதிய உலோகத்தைப் பற்றி ஆராய்ந்த ஜெர்மன் நாட்டு வேதியியல் அறிஞர்கள் மஞ்சள் நிறத்தை முதன்மைப்படுத்தி மெலினியம் என்று பெயரிட்டனர். கலாப்ரோத்(M.Klaproth) என்ற வேதியியல் விஞ்ஞானியைக் கௌரவப்படுத்தும் முகமாக கலாப்ரோதியம் என்றும் ,விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டு வியப்பூட்டியதால் அதன்பொருட்டு யுனோனியம் என்றும் பலவாறு பெயரிட்டாலும் காட்மியம் என்ற பெயரே நிலைத்து நின்றது .பிற பெயர்கள் வழக்கொழிந்து போயின .
காட்மியம் இயற்கையில் தனித்துக் காணப்படுவதில்லை.பெரும்பாலும் துத்தநாகக் கனிமத்துடன் சேர்ந்து காணப்படுகின்றது நீர்ம நிலையில் துத்தநாகத்தை விட காட்மியம் அதிகமாக ஆவியாகக் கூடியதாக இருப்பதால் பன்முறை காய்ச்சி வடித்தல் மூலம் காட்மியம் ஆக்சைடைப் பிரித்தெடுத்து மின்னாற்பகுப்பினால் தூய்மையூட்டலாம் .
பண்புகள்
Cd என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய காட்மியத்தின் அணுவெண் 48 ,அணு நிறை 112.40. தூய காட்மியம்,மென்மையான டின் போன்று வெண்மையானது.இது காற்று வெளியில் மெதுவாக ஆக்சிஜனேற்றம் பெறுகிறது .சூடுபடுத்தினால் காட்மியம் ஆக்சைடு பழுப்பு நிறப் புகையாக வெளியேறுகின்றது .இது துத்தநாகத்தைப் போல பல ஒத்த வேதிப் பண்புகளைக் கொண்டுள்ளது .
பயன்கள் 
காட்மியம் தாழ்ந்த உருகு நிலை கொண்ட கலப்பு உலோகங்களைக் தயாரிக்கப் பயன்படுகின்றது .71oC  உருகு நிலை கொண்ட வுட் கலப்பு உலோகம் 50:25:12.5:12.5 என்ற விகிதத்தில் பிஸ்மத் ,ஈயம்,டின்,காட்மியம் கொண்டது.இதன் உருகு நிலையை அதில் சேர்ந்துள்ள தனிமங்களின் சேர்க்கை விகிதத்தை மாற்றி தக்கவாறு மாற்றலாம் இது தீ விபத்து முன்னறிவிப்பான் போன்ற தன்னியக்கக் கருவிகளில் பயன்படுகின்றது .சுழல் வட்டுக்களில்(bearings) குறைந்த உராய்வுக் குணகம் மற்றும் வெடிப்புக்கு ஆளாகாத இயல்பு காரணமாகக் காட்மியக் கலப்பு உலோகம் பயன்படுகின்றது மின் முலாம் பூச்சு வழி முறையிலும் காட்மியம் நன்மை தருகிறது .
காட்மியத்தின் மற்றொரு பயன் காட்மிய படித்தர மின்கலாமாகும் (Weston Cadmium cell).இம் மின்கலத்தை மின்சுற்றில் பயன்படுத்தும் நிலையிலும் ,தனித்த நிலையில் பெற்றிருந்த அதே மின்னழுத்தத்தை மாற்றமின்றிப் பெற்றிருக்கின்றது 20o C  வெப்ப நிலையில் இதன் மின்னழுத்தம் 1.0186 வோல்ட் ஆகும் .காட்மியம் பயன்படுத்தப்படும் மற்றொரு வகை மின்கலம் காட்மியம் சில்வர் ஆக்சைடு மின்கலமாகும் .
காட்மியம் நியூட்ரான்களை உட்கிரகிக்கும் வாய்ப்பை அதிகம் பெற்றிருப்பதால்,அணு உலைகளில் கருப்பிளப்பு வினைகள் நடைபெறும் வீதத்தைக் கட்டுப்படுத்த அனுகூலமிக்கதாய் இருக்கிறது .காட்மியத்தின் உருகு நிலை 321oC  என்பதால் தாழ்ந்த வெப்ப நிலைகளில் செயல்படும் அணு உலைகளில் மட்டும் பயன்படுத்தலாம் .உயர் வெப்ப நிலைப் பயன்களுக்கு காட்மிய கலப்பு உலோகத்தைப் பயன்படுத்துகின்றார்கள்.
15 % இன்டியம்,5 % காட்மியம்,80 % வெள்ளி இவற்றால் ஆன கலப்பு உலோகம் இதற்குப் பெரிதும் பயன்படுகின்றது .இதன் நியூட்ரான் உட்கவர் திறன் காட்மியத்தைவிடவும் அதிகமானது .காட்மியத்திற்குப் பதிலாக போரான் என்ற தனிமத்தையும்  நியூட்ரான் உட்கவர்தலுக்குப் பயன்படுத்தலாம் 
காட்மியம் சல்பைடு ஒரு மஞ்சள் நிறமியாக வர்ணங்கள் ,நெகிழ்மங்கள்(Plastic) உற்பத்தித் தொழிலில் பயன்படுகின்றது .இதன் நிறத்தை மெல்லிய மஞ்சள் முதல் ஆரஞ்சு வரை மாற்றிக் கொள்ள முடிகிறது.காட்மியம்-கந்தகம்-செலினியம் இவற்றின் கலவையால் காட்மியச் சிவப்பு என்ற சிவப்பு நிறமிப் பொருளைப் பெறலாம் .காட்மிய நிறமிப் பூச்சுக்கள் துருப்பிடிப்பதைத் தடுக்கின்றன .பிளாஸ்டிக்குகளுக்கு வலிமையூட்டி கதிரியக்கம் மற்றும் ஆக்சிஜனேற்றம் இவற்றால் ஏற்படும் சிதைவைத் தடுக்கின்றன .வண்ணக் குழல் விளக்குகளில் வண்ண மூட்ட பயன்தருகின்றது. சில காட்மியக் கூட்டுப் பொருட்கள் கருப்பு-வெள்ளை தொலைக்காட்சிப் பேழைகளில் ஒளி உமிழ்வு ஒளிர்வானாகப்(phosphors) பயன்படுகின்றன .வண்ணத் தொலைக் காட்சிப்  பேழைகளிலும் நீலம் மற்றும் பச்சை நிறங்களுக்காகப் பயன்படுகின்றன .

காட்மியமும் அதன் கூட்டுப் பொருட்களும் நச்சுத் தன்மை கொண்டவை .இதனால் தசைவலி ,இடைவிடாத இருமல் ,தோல் சுருக்கம் போன்றவை ஏற்படுகின்றன .தாவரங்களில் காட்மிய நச்சூட்டம் ஒளியியல் தொகுப்பாக்கதைப் பாதிக்கின்றது .பச்சையத்தை செயலிழக்கச் செய்தும் உயிர்ச் செல்களின் செயல்பாட்டை மட்டுப்படுத்தியும் அதன் வளர்ச்சியைச் சீர்குலைக்கின்றது. 

No comments:

Post a Comment