Sunday, March 31, 2019

சிறந்த மாணவர்களாக வளர்வது எப்படி ? - 19

சிறந்த மாணவர்களாக வளர்வது எப்படி ? 
கற்பது எளிதில்லாமல் போவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. எதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை விட எதைக் கற்றுக் கொள்ளக் கூடாது என்பதைப் பற்றி அதிகம் சிந்திப்பதும், எதையும் விரைந்து கற்றுக்கொண்டு விடவேண்டும் என்று கற்பதில் அவசரம் காட்டுவதும் , கற்பதின் முக்கியத்துவத்தை உணராமல், இயந்திர கதியில் பிறருக்காகப்  படிப்பதும் ஒரு சில முக்கியக் காரணங்களாகும் . இதனால் கற்றுக்கொள்ள வேண்டியதைத் தவறவிட்டுவிட்டு , கற்றுக் கொள்ளக்கூடாதனவற்றைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களே அதிகரிக்கின்றன.  நேர்மறையான எண்ணங்களை விட்டுவிட்டு எதிர்மறையான எண்ணங்களை வலிந்து விடாப்பிடியாக வைத்திருப்பதால் நேர்மையான கல்வியைப் பெறுவதில் அகத் தடைகள் ஏற்படுவதைத் தடுத்துக் கொள்ள முடிவதில்லை .இதை ஒரு வேத காலக் கதையொன்றால்  புரிந்து கொள்ளலாம் . 
ஒரு இளைஞன் அந்தரத்தில் மிதத்தல், நீரின் மேல் நடத்தல்,  தீயை விழுங்குதல் , முன் ஜென்ம நிகழ்வுகளைக் கூறுதல்,எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்னறிவித்தல்  போன்ற  தெய்வீக சக்திகளைப் பெறவேண்டும் என்றும் அதைக்கொண்டு சமுதாயத்தில் பேறும் புகழும் சம்பாதிக்க வேண்டும் என்றும்  விரும்பினான். அவற்றைக் கற்றுத்தரக்கூடிய குருவை த் தேடித்தேடி அலைந்தான்.நீண்டகாலமாக  அவன் எதிர்பார்த்த மாதிரி அவனுக்கு ஒரு குரு கிடைக்கவில்லை .கடைசியில் ஒரு துறவி அவனுக்கு  " இது போன்ற தெய்வீக சக்திகளைக் கற்றுத்தரக்கூடிய ஒரு குரு திபெத்தின் இமயமலை அடிவாரத்தில் உள்ள புத்த மடாலயத்தில் இருக்கின்றார் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரைப் போய் பார்த்தல் ஒருவேளை உன் விருப்பம் நிறைவேறலாம் "  என்று ஒரு யோசனை கூறினார் .   கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் நடைப்பயணமாகவே பல மாதங்கள் சென்று இறுதியில் அந்த புத்த மடாலயத்தைச் சென்றடைந்தான் . தலைமைக் குறுவைச் சந்தித்து தன் விருப்பத்தைக் கூறினான் . அவரும் அதைக் கேட்டுவிட்டு " தெய்வீக சக்திகள் தெய்வங்களுக்கு மட்டுமே உரியவை . தெய்வீகப் பண்புகளைப் வளர்த்துக் கொண்ட  மனிதர்களால் மட்டுமே அப்படிப்பட்ட சக்திகளைப் பெறமுடியும் , மற்றவர்கள் அதைக் கற்றுக் கொண்டாலும் விரைவில் இழந்துவிடுவார்கள் " என்றார் . அந்த இளைஞன் கீழே விழுந்து குருவை வணங்கி " நான் இதைக் கற்றுக்கொள்ள  நெடுந்தொலைவு கடந்து வந்திருக்கின்றேன் , தாங்கள் மறுக்காது கற்றுத்தர வேண்டுகின்றேன் " என மன்றாடினான். குருவும் அவனுக்குக் கற்றுத்தர சம்மதித்து  மறுநாள் விடியற்காலையில் 4 மணிக்கு ஆற்றில் நீராடி, புத்தரை வணங்கிவிட்டு வரச் சொன்னார் . அவனும் அப்படியே வர, குருவும் தெய்வீக சக்திகளைப் பெறுவதற்கான மந்திரங்களை அவன் காதில் மெல்லக் கூறினார்.  கொஞ்ச நேரம் தியானித்து விட்டு , " இந்த மந்திரத்தை எப்பொழுது உச்சரித்தாலும் பிழையில்லாமல் உச்சரிக்க வேண்டும். தவறினால் அந்த மந்திரத்தை மறந்து போவாய் என்றும் மந்திரத்தை உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் பாம்பை மட்டும் நினைக்கக் கூடாது ஏனெனில் அது தேவர்களிடமிருந்து தெய்வீக சக்திகளை விழுங்கிவிடக் காத்துக் கொண்டிருக்கின்றது ."  என்றார் . சில நாட்களுக்குப் பிறகு  குருவிடம் விடை பெற்றுக்கொண்டு  ஊருக்குத் திரும்பினான். வரும் வழியிலேயே அந்த மந்திரங்களை சோதித்துப் பார்க்க விரும்பி , பிழையில்லாமல் உச்சரிக்க வேண்டுமே என்ற மன அழுத்தத்தில் , பாம்பைப்பற்றி நினைக்கூடாது என்று சொன்னாரே என்று பாம்பை  நினைத்துக் கொண்டே மந்திரங்களைப் பிழையோடு உச்சரிக்க , அவன் ஊர் போய்ச் சேர்வதற்கு முன்னரே கற்றுக்கொண்ட தெய்வீக சக்திகளை இழந்துவிட்டான்.கற்றுக் கொள்ளும் போது , கற்றுக் கொள்ள வேண்டியவற்றோடு ,கற்றுக்கொள்ளக் கூடாதன வற்றையும் கற்றுக் கொள்வதால் , அவைகளின் குறுக்கீட்டால்  கற்றதைப் பயன்படுத்த முடியாத நிலையே ஏற்படுகின்றது. 

Saturday, March 30, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 18

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
இசைக் கருவிகளை மீட்டி இசைக்கத்தெரியா விட்டாலும் வாழ்க்கையின் எந்தப் பருவத்திலும் இசையை ரசிக்கலாம் .இசை உள்ளுணர்வுகளோடு எளிதில் உறவாடக் கூடியது . உள்ளுணர்வு என்பது ஒரு மனிதனைத் தன் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவரக்கூடிய ஒரு அற்புதமான சக்தியைக் கொண்டுள்ளது. அன்பு, காதல் என்பதெல்லாம் உள்ளுணர்வுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் .அதனால் அவற்றின் தாக்கம் பிற  குணங்களை விட வலிமையானதாக இருக்கின்றது . இதை மொசார்ட் விளைவு தெளிவு படுத்துகின்றது    
மொசார்ட் (Wolfgang Amadeus Mossart )ஆஸ்ட்ரியா நாட்டில் 1756 பிறந்து 1756 – 1791 காலத்தில் வாழ்ந்த ஒரு மாபெரும் இசை மேதை . 1993 ல் ரௌச்சர் (Rauscher) என்பார் மொசார்ட்டின் சொனாட்டா(Sonata)(K448) இசையை 10 நிமிடம் கேட்டால் சாதாரணப் பொருட்களுடன் தொடர்புடைய காலம் மற்றும் இடம் பற்றிய கற்பனைத் திறன் தற்காலியமாக மேம்படுகிறது என்று கூறினார். இந்த அக நிலை மாற்றம் 10 -15 நிமிடங்களுக்கு மட்டுமே இருந்தது . சில ஆராய்ச்சியாளர்கள் அதை உறுதி செய்தாலும் வேறு சிலர் இதை ஒப்புக் கொள்ள மறுத்தனர். இசையில் மயங்கி தன் மனதைப் பறிகொடுத்துவிட்டு மகிழ்ச்சியால் துள்ளி எழும்போது ஏற்படும் உற்சாகமே இப்படி வெளிப்படுகின்றது என்றும்,நுகர் உணர்வு இல்லாவிட்டால் இப்படி நிகழ வழியில்லை என்றும், மொசார்ட் விளைவு என்று ஒன்றும் இல்லை என்றும் இவர்கள் கூறினார்கள். இதனால் ஆராய்ச்சியாளர்கள் எலிகளை வைத்து மொசார்ட் இசையின் தாக்கம் எவ்வாறு இருக்கிறது என ஆராய்ந்தனர். எலிகளின் சுறுசுறுப்பு இசை கேட்ட பின் இயல்பு நிலையைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. ரசிப்புத் தன்மை ,திறன் வளர்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்திருக்கவில்லை எனக் கண்டறிந்தனர்.சிறு வயதுக் குழந்தைகளுக்கு இசைப் பயிற்சி அளித்த போது அவர்கள் இசைப்பயிற்சி பெறாத குழந்தைகளை விட செயல் திறன்மிக்கவர்களாக இருந்தனர்.இதை PET எனப்படும் பாசிட்ரான் உமிழ்வு வரைபடம் காட்டி(Positron emission tomography ) மூலமும் காந்த ஒத்ததிர்வு வரைபடம் காட்டி மூலமும் மூளையை விரிவாக ஆராய்ந்தனர். இசை கேட்டு ரசிக்கும் போது மூளையின் பல பகுதிகள் ஒரு சேர தூண்டப்படுகின்றன. இசையின் சுருதி,தாளம்,பண்திறம் அதிர்வெண், ஒத்ததிர்வு, சுரம்,ஒலிப்பண்பு,ஏற்ற இறக்கம் போன்ற பல இயற்பியல் தன்மைகள் மூளையின் வெவேறு பகுதிகளினால் உணரப்படுகின்றன. அதாவது இசை மூளையின் பல பகுதிகளை சட்டென உறக்க நிலையிலிருந்து இயக்க நிலைக்கு உயர்த்தி விடுகின்றது. அது போல ஒரு பொருளைக் கொண்டு வினையாற்றும் போதும் மூளையின் வேறு பல பகுதிகள் தூண்டப்படுகின்றன. இப் பகுதிகள் யாவும் இசை உணர் பகுதிகளுடன் மேற் பொருந்தியிருக்கின்றன (ovrerlap) .இதனால் இசை கேட்டுக் கொண்டே வினையாற்றும் போது செயல் திறன் வெகுவாக மேம்படுகின்றது எனக் கண்டறிந்துள்ளனர். ஆடிப் பாடி வேலை செய்தா அலுப்புத் தெரியாது .இசை கேட்டுக் கொண்டே வேலை செய்தாலும் உற்சாகம் குறையாது. இதனால்தான் துணி துவைப்பவர்கள், தேய்ப்பவர்கள் ,தைப்பவர்கள் ,கட்டட வேலை செய்பவர்கள், இயந்திரங்களை இயக்குபவர்கள் எனப் பலதரப்பட்ட தொழிலாளிகள் சினிமாப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே அலுப்புத் தெரியாமல் வேலை செய்கின்றார்கள் போலும். காதலர்களுக்கு இசை காதலை வளர்க்கும் மயக்கும் மொழி.கோகுலத்தில் கண்ணன் தன் குழலோசையால் பசு மாடுகளைக் கவர்ந்தான். பாம்பாட்டி தன் மகுடியால் பாம்புகளை மயக்கிப் பிடிப்பார். இசைக்கு இறைவனும் அடிமை என்று பக்திப் பாடல்களைப் பாடுவார்கள்.இசையால் தாவரங்களின் வளர்ச்சி முடுக்கப்படுகின்றது எனப் பலரும் சொல்லக் கேட்டிருக்கின்றோம். இசைக்கும், உயிரினங்களுக்கும் ஒரு உள்ளார்ந்த தொடர்பு இருப்பதையே இவை தொட்டுக் காட்டுகின்றன. 
உணர் திறனைக் கொண்டு நினைவாற்றலை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கு மொசார்ட் விளைவு ஒரு சான்று .கவிதை மற்றும் வேற்று மொழி கற்றுக் கொள்ளுதல் போன்றவற்றில் திறன் மேம்படுகிறது. சிறிது நேரமே மொசார்ட் இசையை கேட்டாலும் குழந்தைகளின் செயல் திறன் பெரிதும் மேம்படுகின்றது. கற்பனைத் திறனில் குறிப்பிடும்படியான தற்காலிய மாற்றமும், கணக்குப் போடுதல்,சதுரங்கம் விளையாடுதலில் புத்திசாலித்தனமும்,குழப்பமின்றி விரைந்து செயல்படும் தன்மையும் ஏற்படுகின்றன .வலிப்பு நோய்(epilepsy) உள்ளவர்கள் இசையால் ஓரளவு குணமடைகின்றார்கள்.இசை,நரம்புகளின் மூலம் நடைபெறும் செய்திப் பரிமாற்றங்களை ஒழுங்குபடுத்துவதால் இந்த உடலியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன எனக் கண்டறிந்துள்ளனர். 
அதற்காக எல்லா  நேரமும் இசையை ரசிக்கிறேன் என்று சினிமாப் பாடல்களையே கேட்டுக்கொண்டிருக்காதீர்கள் . அது இசையும் பாடலும் சேர்ந்தது. பாடல் வரிகளின் தாக்கம் சில சமயங்களில் மிகுந்து ,தவறான பாதையில் துணிந்து செல்ல தூண்டிவிட்டு விடும். பல சினிமாப் பாடல்கள் பொருந்தாக் காதலைத் தூண்டிவிடக் கூடியதாக இருக்கின்றன .காதில் காதருகு (Ear phone) ஒலிப்பான்களை வைத்துக் கொண்டு  உரத்த ஒலியுடன் பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருக்காதீர்கள் . மெல்லிய ஒலியில் கொஞ்ச நேரம் கேட்கலாம். .உரத்த ஒலி காதைச்  செவிடாக்கிவிடும்  .தொடர்ந்து கேட்டால் செவிப்பறை கிழிந்து காயம் கூட ஏற்படலாம்.  எந்தப் பழக்கத்தையும் கற்றுக் கொள்ளலாம் ஆனால் அதற்கு அடிமையாகி விடக்கூடாது. உறுதியான மனம் உள்ளவர்களால், சுய ஒழுக்கத்தைப் போற்றுபவர்களால்  மட்டுமே இது முடியும் . 

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? - 17

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ?
உங்கள் பேச்சு கேட்போருக்கு ஏதாவதொரு வகையில் பயன் தரத் தக்கதாக இருக்கவேண்டும். அப்போது தான் உங்கள் பேச்சு கவனிக்கப்படும். பயனில்லாத பேச்சுக்கள் பிறரால் காதுகொடுத்துக் கேட்கப்படுவதில்லை. அது தொடரும்போது ஒருவர் தன சுய மதிப்பை இழக்கநேரிடும்.
மதிப்பூட்டிய  கருத்தாழமிக்க  பேச்சு (Value added speech) மிக முக்கியம். அதைப் பழகிக் கொள்ளாவிட்டால் சராசரி மனிதனைப் போல நாமும் வாழ்ந்து விட்டுப் போக நேரிடும்.பொதுவாக பெரும்பாலானோரின் பேச்சு 5 % வீதம் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். மீதி 95 % பயனற்றவையாகவே இருக்கும். அதனால் யாருக்கும் யாதொரு பயனும் விளைவதில்லை. இந்த 95 % ல் 2௦ சதவீதம் தவிர்க்க இயலாதது. மீதி 80 சதவீதம் தேவையில்லாதது. இந்த 80 % குறைத்துக் கொண்டால் பேச்சு பயனுள்ளதாக,எல்லோராலும் விரும்பத்தக்கதாக இருக்கும். எவ்வளவுக்  கெவ்வளவு நம் சொல்லும்,செயலும் பயனுள்ளதாக இருக்கின்றதோ அவ்வளவிற்கு அவ்வளவு நம்முடைய மதிப்பு சமுதாயத்தில் அதிகமாக இருக்கும்.
வெற்றிகரமான பேச்சாளராக உருவாவது எப்படி என்பதை  success  என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்களே சுட்டிக் காட்டுவதாக சிப் ஹீத் ( Chip Heath) மற்றும் டென் ஹீத் (Den Heath) எழுதிய Made to  stick  என்ற சுய முன்னேற்றத்திற்கான நூலில் குறிப்பிட்டுள்ளார்கள் .வெற்றியின் ரகசியம் வெற்றிக்கான ஆங்கில வார்தைக்குள்ளேயே இருப்பதை வாழ்க்கையில் வெற்றி பெறத்  துடிக்கும் இளைஞர்கள் உணரத்  தவறுவதில்லை.
s  என்றால் பொருளைக் குறிக்கும் subject
முதலில் எதைப் பற்றி பேசப் போகின்றோம் என்பதில் ஒரு தெளிவு இருக்கவேண்டும். இதற்கு முன் கூட்டியே அதை பற்றி தெரிந்து வைத்திருக்கவும் ,தயார் செய்து கொள்ளவும் வேண்டும். அது பற்றி ஒன்றும் தெரியாமல் , முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் ,எல்லாம் தெரிந்தது போலப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் .அது ஒருவருடைய அறியாமையை விரைவில் வெளிப்படுத்திக் காட்டிவிடும் .ஒருவர் தன் சுய மதிப்பை இழப்பதற்கு  அவரே காரணமாகி விடுகின்றார் .
யாருக்காகப் பேசுகின்றோம் , எவ்வளவு நேரம் பேசுகின்றோம் என்பதைப் பொறுத்து  கருத்துக்களையும், செய்திகளையும் கூறவேண்டும் .மாணவர்கள்  என்றால் குறைந்த அளவு , அறிஞர்கள் என்றால் கொஞ்சம் புள்ளி விவரங்கள் . ஒரே செய்தியை காரணமில்லாமல்  மீண்டும் மீண்டும் கூறுவதைத் தவிர்க்க வேண்டும் .
 U என்றால்  பயன்தரு தன்மை , பயன்பாட்டுடைமையைக் குறிக்கும்  utility ,usefulness
வித்தியாசமாகச் சிந்திப்பதில்லை தவறில்லை என்றாலும் நடைமுறைக்கு ஒவ்வாத விஷயங்களினால் பயனில்லை. வித்தியாசமாகச் சிந்தித்தால் அதை நடைமுறைப்படுத்தும் வழிமுறையையும் தெரிந்திருக்க வேண்டும். அதுவும் பொருளாதாரச் சிக்கனமுள்ளதாக இருக்கவேண்டும். பழையனவற்றில் உள்ள குறைபாடுகளை நீக்கவும்,புதிய அனுகூலங்களைத் தருமாறும் இருக்கவேண்டும். கருத்துக்கள் முரண்பாடாக இருந்தால் எதிர்ப்புக்களை சமாளிக்க வேண்டிவரும் . முரண்பாடு அவசியம் என்று நினைத்தால் அதற்கான வலுவான காரணத்தையும் கூறவேண்டும். பொதுவாக எல்லோருக்கும் ஏற்புடைய கருத்துக்களைக் கூறுவதே நல்லது.   புதிய கருத்துக்கள் பின் வரும் சமுதாயத்தினருக்கு வழிகாட்டுதலாக இருக்கவேண்டும். 
S என்றால்  எதிர்பாராதது என்ற பொருள் தரும் Unexpected
இதற்கு யாருக்கும் தெரியாத புதிய செய்திகளைச் சொல்லவேண்டும் என்று அர்த்தமில்லை. பழைய செய்தியையே புதிய தோற்றத்‌தில், கோணத்தில்,'நச்'சுன்னு மனதில் பதியுமாறு சொல்ல வேண்டும். பட்டிமன்றத்‌தில் பேசுபவர்களைக் கவனித்தால் இந்த அணுகு முறை உங்களுக்கு கைவசப்படும்.புதுமைப்படுத்தி செய்திகளைச் சொல்லும் போது கேட்போரை வெகு எளிதில்,இயல்பாக எவ்விதக் கூடுதல் முயற்சியுமின்றி கவரமுடிகின்றது. எதிர்பாராமல் கிடைக்கின்ற நன்மை அதிக மகிழ்ச்சியைத் தரும். அது போல எதிர்பாராத செய்திகளும் மனதில் இனிய தாக்கத்‌தை ஏற்படுத்தும். அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தால் கேட்போருக்கு ஆர்வம் வருவதில்லை.
பெரும்பாலான இளைஞர்கள் சமூக,சரித்திர நாவல்களை விட துப்பறியும் நாவல்களை அதிகம் படிக்க விரும்புகின்றார்கள். இதற்குக் காரணம் அதில் தான் எதிர்பாராத திருப்பங்கள்,போராட்டங்கள் எல்லாம் இருக்கும். நெடுந்தொடர் நாடங்களில். ஒவ்வொரு நாளும் ஒரு எதிர்பாராத திருப்பத்துடன்(Suspense) முடிப்பார்கள். எனென்றால் அப்போதுதான் அந்தத் தொடரை மக்கள் மறுநாளும் பார்க்க வேண்டும் என்று ஆர்வப்படுவார்கள் என்பதைப் போல நம்முடைய பேச்சிலும் திடீர் திருப்பங்கள் இருக்க வேண்டும்
C (1) என்றால்  தெளிவு  மற்றும் உறுதியான என்ற பொருள் கூறும் Clear and concrete
சொல்லப்படும் விஷயங்கள் தெளிவாகவும்,புரியும்படியாகவும் இருக்கவேண்டும். பிறரால் புரிந்து கொள்ள முடிந்தால் மட்டுமே அதனால் பயன் இருக்கும். பயன் இருந்தால் மட்டுமே உங்களுடைய பேச்சை பிறர் ஆர்வத்துடன் கேட்பார்கள். சொல்வதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லுங்கள். அப்படிச் சொல்ல வேண்டுமானால் சொல்லவேண்டிய கருத்துக்களில் தெளிவும், புலமையும் இருக்கவேண்டும். அதுவே ஒருவருடைய  பேச்சுக்கு உயிர் மூச்சாகின்றது. குழப்பம் இருக்குமானால், இரு வேறுபட்ட சிந்தனைகள் பேச்சிலும் வெளிப்பட்டு தடுமாற்றத்தை ஏற்படுத்திவிடும்.சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்று சொல்வார்கள். எனவே சட்டியை முதலில் நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். சட்டி என்பது இங்கே உங்கள் மூளை.உங்கள் விருப்பத் துறை சார்ந்த விஷயங்களை உங்கள் மூளையில் சேமித்து வையுங்கள். திரும்பத்  திரும்ப நினைவுபடுத்தி கருத்துக்களை மெருகூட்டிக் கொள்ளுங்கள் . தொடர்ந்து பொது மக்களுக்கான நூல்களையும் செய்தித் தாள்களையும் படிக்கும் பொழுது தான் இந்த வாய்ப்புக் கிடைக்கும் .
C (2) என்றால் நம்பகத்தன்மை கொண்ட என்ற பொருள் தரும்  credible
C என்றால்  confidence (நம்பிக்கை), clarity .compitable (முரண்பாடின்றி ஏற்றுக்கொள்ளுதல்) என்றாலும் நம்பகத் தன்மை முக்கியமானது. சொல்லும் எந்தக் கருத்துக்கும் ஒரு நம்பகத் தன்மை இருக்கவேண்டும் .இதற்கு இயல்வாழ்க்கைச் சான்றுகள், பொன் மொழிகள், பழமொழிகள்,இலக்கிய வரிகள். அறிஞர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் போன்றவற்றை எடுத்தாளலாம். நம்பகத் தன்மைக்காக புள்ளி விவரங்களைக் கூறலாம் என்றாலும் அது கேட்போரின் தகுதியைப் பொருத்தது. பொது மக்கள் என்றால் புள்ளி விவரங்கள் அதிகம் தேவையில்லை. தொழிநுட்ப வல்லுநர்கள் என்றால் தேவையான புள்ளி விவரங்களும் இருக்கலாம்.
E என்றால்  (தனிச்சிறப்பானது) extraordinary , (வசீகரமானது) enchanting என்று குறிப்பிட்டாலும் (உணர்ச்சிமயமானது ) emotional முக்கியமானது.
நம்முடைய பேச்சு மற்றவர்களின் உள்ளத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் அது உயர்வாகக் கருதப்படும். எந்த சினிமா நம் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகின்றதோ அது நீண்ட நாட்களுக்கு நம் மனத்தை விட்டு அகழுவதில்லை.
நம்முடைய உணர்ச்சி மற்றவர்களின் உணர்ச்சியோடு ஒத்ததிர்ந்து போக குரலில் ஏற்றத் தாழ்வுகள் ,இடைவெளி இருக்க வேண்டும்.
S என்றால் Story
எந்தக் கருத்தைக் கூறினாலும் அதைக் கேட்போர் உள்வாங்கிக் கொள்வதற்கு ஒரு சிறந்த வழி அக்கருத்தை வழியுறுத்தி ஒரு கதையைப் புனைந்து கூறுவதுதான். உண்மைச் சம்பவங்கள் ஏற்படுத்தும் தாக்கம் இன்னும் அதிகமாக அழுத்தமாக இருக்கும்.
S என்றால் Sense of humour
நகைச்சுவையை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. கதையை நகைச்சுவை உணர்வோடு கூறினால் அது நல்ல பலனை அளிக்கும். பட்டிமன்றங்களில் பேச்சாளர்கள் நகைச் சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
பேச்சு யாருக்காக இருந்தாலும் சுருக்கமாக(Short) , எளிமையாக (Simple) இருக்க வேண்டும். சொல்வதை எப்போதும் புரியும்படிச் சொல்லுங்கள். அவசரப்பட்டு வார்த்தைகளை அடுக்குமொழியில் அள்ளிவிடாதீர்கள். தெரிந்ததை மட்டும் சொல்லுங்கள். தெரியாததை பற்றி மூச்சு விடாதீர்கள் . சொல்வதை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லப் பழகிக்கொள்ளுங்கள் .விளக்கம் கேட்கப்படும் போது மட்டும் விவரம் கூறுங்கள் .கூடுதல் செய்திகள் தனக்குத் தெரியும் என்பதற்காகச் சொல்வதை விட்டுவிடுங்கள். தேவையற்ற செய்திகளைச் சொல்ல அதிக நேரம் எடுத்துக் கொண்டால் பின்னர் முக்கியமான செய்திகளைச் சொல்ல நேரம் கிடைக்காமல் போய் விடலாம்.

Friday, March 29, 2019

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? - 16

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? 
மாணவப் பருவத்திலேயே பேச்சுத் திறமையை வளர்த்துக் கொள்வது நல்லது. .தவறுகளைத் திருத்திக் கொண்டு சிறந்த போச்சாளனாக உருவாக இது தொடர்ச்சியான  அனுபவத்தைத் தரும். இதற்கு நண்பர்களுடன்  உலக நடப்புக்களை மனம்விட்டுப் பேசலாம். பாடம் சம்பந்தமான விஷயங்களை கலந்துரையாடல்  மூலம் ஐயங்களைத் தெளிவு படுத்திக்கொள்ளலாம். இது கூச்சத்தைப் போக்கி எந்தச் சூழ்நிலையிலும் பேசுவதற்கான தைரியத்தைத் தரும் . சொல்லவேண்டிய கருத்தை பிறருக்குத் தெளிவாகப் புரியச் சொல்லும் தன்மையை இது வழங்குகின்றது . இது பணிபுரியும் போது தனக்கு க் கீழ் வேலைசெய்யும் அலுவலர்களிடம் செய்யவேண்டிய வேலைகளைத் தெளிவாகச் சொல்லி வேலை வாங்குவதற்கு பயனளிக்கும் . பேச்சுத் திறமை மொழிப் புலமையை வளர்க்கின்றது. மொழிப் புலமை பேச்சுத் திறமையை வளர்க்கின்றது .மொழிப் புலமை அதிகரிக்கும் போது ,  முன்னோர்களின் இலக்கிய படைப்புக்களில் ஆர்வம் ஏற்பட்டு  நன்னெறிகளை உள்வாங்கிக் கொள்ளும்  வாய்ப்புக் கிடைக்கின்றது .பேச்சுத் திறமை பல அறிஞர்களின் நட்பை அறிமுகம் செய்வதால்  வாழ்க்கையில் முன்னேறுவதற்கான பல புதிய வாய்ப்புக்கள்  கிடைக்கின்றன . வட மாநிலங்களில் , வெளிநாடுகளில் வேலை வாய்ப்புத் தேடுபவர்கள் பிற மொழிகளில் புலமையை வளர்த்துக் கொள்ளவேண்டும். இரண்டு மொழிகள் தெரிந்த மனிதன் இரண்டு உழைப்பாளிக்குச் சமம். ஒப்பிட்டால்  சிந்திக்க அவனுக்கு இரண்டு மூளைகள்,செயல்பட நான்கு கைகள்.
வெறும் விதாண்டா வாதம் பேச்சுத் திறமையாகிவிடாது. சமுதாய நியாயங்களுக்கு உட்பட்டுப்  பொருள் பட பேசுவது சமுதாயத்தில் நன்மதிப்பைத் தரும் ..        சித்திரமும் கைப்பழக்கம்  செந்தமிழும் நாப்பழக்கம்  என்று சான்றோர்கள் கூறுவார்கள். பயிற்சி எடுத்துக் கொள்ளக்  கொள்ள பேச்சுத் திறமை தானாக வளரும் என்பது இவர்கள் அறிவுரை. இலக்கியச் சிந்தனைகள் எடுத்துக்காட்டுகளுக்கு உதவும்.  பேச்சுத் திறமையை வளர்த்துக் கொள்ள , நன்னூல்களை அடிக்கடி படிக்கவேண்டும். மேடைப் பேச்சாளர்கள் எப்படிப் பேசுகின்றார்கள் என்பதைக் கூர்ந்து கவனித்து ,மொழி நடை, ,குரலில் ஏற்ற இறக்கம். உடல் மொழி , நகைச் சுவை , உட்கருத்து , போன்ற உட்கூறுகளை  கற்றுக் கொள்ள வேண்டும் .  
நண்பர்களுடன் மட்டுமின்றி ,பெற்றோர்கள்,. உறவினர்களிடமும் மனம்விட்டுப் பேசும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எதிரிகள் இல்லை. வாழ்க்கையின் இறுதி வரை பிள்ளைகளின்  வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்து கொண்டே இருக்கும் உயிர்த் தோழர்கள் . பிரச்சனை எதுவானாலும் அதைப் பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மை வளர்த்துக் கொள்ளுங்கள் . இப்படி எல்லோரிடமும் பேசிப் பழகுவது  , ஊமைத்தனம்  மறைந்து எந்தச் சூழ்நிலையிலும் பேசும் தைரியத்தைத் தரும் . இன்றைக்கு மாணவர்கள் கைபேசி, கணனி போன்ற தொழில்நுட்பக் கருவிகளுடன் மணிக்கணக்கில் உறவாடுவதால் நண்பர்களையும், உறவுகளையும் இழந்து வருகின்றார்கள். பேச்சு த் திறமை வளராமல் போவதற்கு இது ஒரு காரணமாக இருக்கின்றது 

Thursday, March 28, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி - 15

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி
கல்வி கற்பது சுய முன்னேற்றத்திற்குத்தான் . அது பெற்றோர்களால், ஆசிரியர்களாலும் காட்டாயப்படுத்தப்பட்டாலும்  அதை ஒரு தண்டனையாக நினைக்கவே கூடாது .கல்வி கற்க மறுப்புக் காட்டப்படும்போதெல்லாம்  அது தன்மீது திணிக்கப்படுவதாக  குழந்தைகள் நினைக்கின்றார்கள்,தன் சுதந்திரம் பறிக்கப்பட்டு விருப்பம்போல செயல்படுவது மறுக்கப்படுகின்றது என்று மாணவர்கள்  நினைக்கின்றார்கள். அதனால் பெரும்பாலான மாணவர்கள் இஷ்டப்பட்டு படிப்பதை விட்டுவிட்டு கஷ்டப்பட்டு படிக்கின்றார்கள். இது புரிதலின் பயனுறுதிறனை  பெரிதும் மட்டுப்படுத்தி விடுகின்றது. இஷ்டப்பட்டு செய்யப்படும் எந்த வேலையும் எளிதாகவும் விரைவாகவும்  முழுமையாகவும் ,நிறைவாகவும் செய்து முடிக்கப்படும் .எண்ணத்தையும் செயலையும் ஒருங்கிணைக்க  மனப்பூர்வமான இந்த  இஷ்டத்தால் மட்டுமே முடியும். தீய செயலாக இருந்தாலும், நல்ல செயலாக இருந்தாலும் எது இஷ்டப்பட்டு செய்யப்படுகிறதோ அது மட்டுமே செயல்களில் தங்கிவிடுகிறது. உண்மையான காரணங்களை அறிந்து கொண்டு  பின்விளைவுகளையும் புரிந்து கொண்டால் எதை  இஷடப்பட்டு கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் ஒரு தடுமாற்றமே ஏற்படுவதில்லை
படிப்பது என்பது கடின உடல் உழைப்பில்லை. ஒரே இடத்தில் இருந்து கொண்டே படிக்க முடியும். அது தேவையான விவரங்களை வாழ்க்கைப் பயன் கருதி  மூளையில் பதிவு செய்வதாகும் மனம் பூரண ஒத்துழைப்புக் கொடுத்தால் இடையூறு இன்றி  பின்னால் நினைவுபடுத்திக் கொள்வதற்கு எளிதாக அழுத்தம் திருத்தமாக  பதிவு செய்து கொள்ள முடிகின்றது .மூளையில் அழிந்து போகாமல்  நிரந்தரமாகத் தங்கி  இருக்கும் பதிவுகள் மட்டுமே வாழ்க்கையை வழிநடத்திச் செல்ல துணை செய்கின்றன. ஒருவருடைய எதிர்கால வாழ்க்கையைத்  தீர்மானிக்கின்றன என்பதால் , தேவையான பதிவுகளை ச் செய்யத் தவறி விட்டாலோ  அல்லது பதிவுகளை இழந்து விட்டாலோ .வாழ்க்கையின் பிற்பகுதி தடுமாற்றத்திற்கு ஆளாகும் நிலையே ஏற்படும்       
ஒரே சமயத்தில் பல பதிவுகளைச் செய்தாலும், அல்லது பதிவுகளை ஒரேசமயத்தில் உள்ளீடு மற்றும் வெளியீடு செய்தாலும் பதிவுகள் அழுத்தமாக எழுதப்படுவதில்லை. .விரைவில் அழிந்து போவதற்கு நாம் மேற்கொள்ளும் இந்த அவசரமே காரணமாகின்றது .பதிவுகள் அழிவது என்பது மறதியாகும். எனவே நினைவாற்றலை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமானால் , பதிவுகளை மேற்கொள்ளும் போது இடையூறுகள் இன்றிச் செய்யவேண்டும் . தாறுமாறாக பதிவு செய்யப்பட்டால் தேவையான போது அதைத் தேடிக் கண்டுபிடித்து நினைவிற்கு கொண்டுவருவதற்கு நெடு நேரமாகும். முதலில் தேவையான வற்றை மட்டும் பதிவு செய்யுங்கள். தேவையில்லாத பதிவுகளால் நிரப்பி மூளையை  ஒரு குப்பைத் தொட்டியாக்கி விடாதீர்கள். தேவையற்ற பதிவுகள் அதிக இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தால் ,தேவையான பதிவுகளைச் செய்ய தேவையான இடமில்லாமல் போகும் . தீயனவற்றை மறப்பதற்கு இந்த மறதி நன்மை செய்கின்றது என்றாலும் . கூடவே நல்லனவற்றையும் மறந்துவிட இதே மறதியே காரணமாகிவிடுகிறது .இதற்குக் காரணம் தீயனவற்றைப் பற்றி சிந்திப்பதற்கும் ,நினைப்பதற்கும் எடுத்துக் கொள்ளும் காலம் , இஷ்டம் , நல்லனவற்றிற்கு இல்லாதிருப்பதே .

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி - 14

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி  
பள்ளியில் படிக்கும் போதே பிற மாணவர்களுடன் நட்புடன் பழகி , இணைந்து செயலாற்றும்  பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும் .தவறிவிட்டால் பின்னர் சமுதாயத்தில் வாழும் போது தானும் பிறருக்கு ஒத்துழைப்புக் கொடுக்க முன் வருவதில்லை , பிறரும் நமக்கு ஒத்துழைப்பு தர விரும்புவதில்லை  . இது சமுதாயத்தின் மிகப் பெரிய பலவீனமாகும் . சமுதாய நலனை மௌனமாய்ச் சீரழிப்பதில்  இதன் பங்களிப்பு அதிகம் . ஒற்றுமையின் அவசியத்தை ஒவ்வொருவரும் மாணவர்களாக இருக்கும் போதே உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும் .அது சாகாத சமுதாயத்தின் பாதுகாப்பிற்கு ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி போன்றது 
ஒற்றுமை இல்லாமற் போனதால் நாம் பலமுறை இந்தியாவை இழந்திருக்கின்றோம் . இந்தியாவை ஆண்ட அரசர்களிடம் ஒற்றுமை காணாமல் போனதால் , கில்ஜி , துக்ளக் , மொகலாயர் , ஆங்கிலேயர்கள்  போன்ற ஊடுருவிகளிடம் இந்தியா பறிபோனது .இழந்த இந்தியாவை மீட்டெடுக்க மீண்டும் மக்களிடையே காணாமற் போன அந்த  ஒற்றுமையை ஊட்டவேண்டி இருந்தது , ஒற்றுமையோடு இருப்பதுதான் ஒரு குடும்பத்திற்கு    அழகு ,ஒற்றுமையோடு வாழ்வதுதான் ஒரு சமுதாயத்திற்கு அழகு, ஒற்றுமையோடு பணியாற்றுவதுதான் ஒரு அமைப்புக்கு அழகு .ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதுதான்   ஒரு நாட்டிற்கு அழகு  .ஒற்றுமை  முன்னேற்றத்தின் அடையாளம் என்பதால் எப்போதும்  உயர்வு  தரும்.எப்போதும் இணைந்து செயலாற்றுவது என்பது எல்லோர்க்கும் சமமான நற்பயனைத் தரும். நாட்டின் உண்மையான பாதுகாப்பு என்பது அரணும்,தளவாடளங்களும் அவற்றைக் கையாளும் இராணுவமும் இல்லை,நாட்டு மக்களும் அவர்களின் மன நல்லிணக்கமும்தான். ஒற்றுமையில்லாவிட்டால் எந்தப் பாதுகாப்பும் முழுமையாகப் பாதுகாப்புத் தருவதில்லை.
 பள்ளியில்  படிக்கும் பாடங்கள் அனைத்தும் இந்த ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்திக் கூறுகின்றன.
கணிதம்
கணிதப் பாடத்தில் ஓர் எண்ணோடு மற்றோர் எண்ணைக் கூட்ட அதன் மதிப்பு எப்போதும் கூட்டப்படும் எண்களைவிடக் கூடுதலாகவே இருக்கும் . இது நமக்கு ஒரு கருத்தை வலியுறுத்திக் கூறுவதாக இருக்கின்றது. நாம் இணைந்து வேலை செய்யும் பொது ,பயனுறு திறன் மிக அதிகமாக இருக்கும். அது தனி ஒருவனால் பெறப்படும் பயனுதிறனை விட, அவருடைய செயல்திறன் எவ்வளவு அதிகமாக இருந்த போதிலும். ,எப்போதும் அதிகமாகவே இருக்கும்.  எல்லோருடைய அறிவு நுட்பமும்  ஒன்றுபட்டுச் செயல்படும்போது தெரியாமல் செயல் தடைப்பட்டுப்போவதற்கு காரணமில்லாமற் போகும்.அதனால் பிரச்சினைகளின்றி  கடின முயற்சிகளைக் கூட எளிதாக செய்து முடிக்க முடியும். ஒருவர் ஒரு வேலையைச் செய்ய ஐந்து நாட்கள் ஆனது. அதே வேலையை ஐவர் சேர்ந்து செய்தால் எவ்வளவு நாட்கள் ஆகும் என்று ஒரு கணக்கைப் போட்டு தேர்வில் மதிப்பெண் வாங்கினோம். ஆனால் அதே கணக்கை சமுதாய வாழ்க்கையில் போட்டுப்பார்த்து பயன் பெறத் தவறிவிட்டோம்.வெறும் வாய்ப் பேச்சினால் ஒற்றுமை வந்துவிடுவதில்லை .அது உண்மையில் மனதின் மௌன மொழிகளில் அடங்கி இருக்கின்றது .
வேதியியல்
வேதியியலில் எல்லாப் பொருட்களும் மூலக்கூறுகளால் ஆனவை. எல்லா மூலக்கூறுகளும் அணுக்களால் ஆனவை. எல்லா அணுக்களும் ஒரு சில அடிப்படைத் துகள்களால் ஆனவை.  இவையாவும் ஒரு சில குறிப்பிட்ட தனிச் சிறப்புப் பண்புகளைப் பெற்றுள்ளன. இதற்குக் காரணம் அதில் ஒன்று சேர்ந்துள்ள உட் துகள்களே ஆகும்.அதில் ஒரு துகள் இல்லாமற் போகுமானாலும் தன் தனிச் சிறப்புப் பண்புகளை இழந்து அதன் பண்புகளில் முரண்பாடுகள் தோன்றும் .முரண்பாடுகளால் ஆன வளர்ச்சியைத் தவிர்ப்பதற்காக  ஓர் எலக்ட்ரான் எதிர் மின்னேற்றம்   கொண்டிருந்தாலும்   நேர் மின்னேற்றம்  கொண்ட புரோட்டானை காதலிக்கின்றது.நுண் பொருள் உலகில் காணப்படும் இக் காதலே பேரியல் பொருள் உலகமாக ப் பிறந்திருக்கின்றது. இயற்கையின் அந்தரங்கம் நமக்கு உணர்த்தும் மகத்தான மெய்ப் பொருளே இந்த ஒற்றுமைதான் . 
 உயிரியல்
உயிரியலில் உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் உயிர் வாழ்கையை நிலைப்படுத்த ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. ஒரு சிறிய உறுப்பு சிறிது நேரம் ஒத்துழைக்காமல் வேலை நிறுத்தம் செய்யுமானால் உடல் முழுதும் நலம் கெட்டுப் போவதுடன் மரணம் கூட நிகழலாம்
மனிதர்களைப் போல இந்த உடலுறுப்புக்கள் ஒருபோதும் வேலை நிறுத்தம் செய்து தன் ஒற்றுமையின்மையை வெளிக்காட்டுவதேயில்லை. உடம்பில் ஒற்றுமையுடன் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே வரும் உறுப்புக்களைப் பார்த்துக்கூட நாம் ஒற்றுமையின்  அவசியத்தைப்புரிந்து கொள்ளவேயில்லை.சமுதாயத்தின் பொது நலனுக்காக நாம் ஒற்றுமையுடன் செயல் படவேண்டும் என்பதைத்தான் உடம்பின் பொது நலனுக்காக ஒற்றுமையுடன் செயல்படும் உறுப்புக்கள் ஒவ்வொரு நாளும்  வலியுறுத்திக் கூறுகின்றன.
தாவரவியல்
தாவரவியலில் ஒரு மரம் விளை பொருளைத் தருவதற்கு அது நிலத்தடியில் உள்ள வேர் மூலம் நீரை உறிஞ்சி எடுத்து, புறவெளியில் உள்ள இலைகள் மூலம் கார்பன் டை ஆக்சைடையும்  உறுஞ்சி ,சூரிய ஒளியில் உணவுப் பொருளாய் தனக்கும் பிறருக்கும் உற்பத்தி செய்கின்றது அதன் இடைவிடாப் பணியே இந்த உலகம் உயிர்ப்புடன் வாழ உறுதுணையாக இருகின்றது அதன்.அடிமரம் வீசும் காற்றால் நிலை குலைந்து சாய்ந்து போய் விடாமல் காக்கின்றது. கிளைகளையும் இலைகளையும் உயர எடுத்துச் செல்வதால் மரம் அதிக அளவு சூரிய ஆற்றலை உட்கவருகின்றது.அதனால் மரம் இன்னும் உயர உயர வளருகின்றது.ஒற்றுமையுடன் செயல்பட்டால் மனிதன் இன்னும் உயர்வாக  வாழலாம்  என்பதைத்தான் இது அறிவிக்கின்றது
 இயற்பியல்
இயற்பியலில் ஒற்றுமையை முக்கியப்படுத்திக் கூறும் கருத்துக்கள் பல உள்ளன. ஒற்றைக் குச்சி யின் முறிவு நிலை மிகக் சொற்ப   இழுவிசையுடன் நடைபெறுகின்றது. ஆனால் அதுபோன்ற பல குச்சிகள்  ஒன்று   சேர்ந்திருக்கும் நிலையில் அதிக அளவு முறிவிசை தேவைப்படுகின்றது.பலவீனமான தனிக் குச்சிகள் பல ஒன்று சேர்ந்துவிட்டால் பலமான தாக்குதல் கூட ஒரு பாதிப்பை ஏற்படுத்திவிட முடியாது. பலவீனத்தை ஒரு பலமாக மாற்றிக் காட்டக் கூடிய ஒரு  மந்திரத்தை இது நித்தம் உச்சரித்தாலும் அதன் உட் பொருளை நாம் இன்னும் விளங்கிக் கொள்ளவேயில்லை. 
ஒற்றை அலை ஒரு குறிப்பிட்ட அளவு சிறிய ஆற்றலைத்தான் கொண்டிருக்கும்.ஆனால் பல ஒற்றை  நிற அலைகள் ஒன்று கூடும் போது அவை ஓரின அலைக்கற்றையாகி அதன் அலைவீச்சும், ஆற்றலும் பல மடங்கு அதிகரிக்கும். அதன் செயல் திறன் மிகவும் அதிகம்.  இதைதான் லேசர் என்று நம் கூறுகின்றோம். ஒரே அலைக்கட்டங்களில் உள்ள அலைகளினால் மட்டுமே இப்படிச் செய்ய முடியும். வேறுபட்ட அலைக்கட்டங்களிலுள்ள அலைகள் ஒன்றையொன்று அழித்துக் கொள்ளும் .ஒத்த சிந்தனை உடைய மனிதர்களால் மட்டுமே திடமான முன்னேற்றத்தைத் தரமுடியும், மாறுபட்ட சிந்தனைகள் ஒத்த முடிவுக்கு வராததால் முன்னேற்றம் எப்போதும் மந்தமாகவே இருக்கும் என்ற கருத்தை இது அறிவிப்பதாக இருக்கின்றது
சூழலியல்
சூழலியலில் காட்டு விலங்குகள் கூட்டம் கூட்டமாய் கூடி வாழும்போது  அவை இயல்பாகப் பாதுகாக்கப்படுகின்றன.கூட்டம் கூட்டமாய் சேர்ந்து வாழும் போது  அவை பிற விலங்கினங்களால் தாக்கப்டுவதற்கான வாய்ப்பைக்  குறைவாகப் பெறுகின்றன. அதனால் அவை காட்டில் திறந்தவெளியில் தொடர்ந்து வாழும் நிலையைப் பெறுகின்றன. கூட்டத்தை விட்டு அவை தனித்துப் பிரியும் போது அவை மிக எளிதாகப் பிற விலங்கினங்களுக்கு உணவாகி விடுகின்றன  பரிணாம வளர்ச்சியில் விலங்கினங்களுக்குப் புரிந்த இந்த உண்மையை  மனிதன் மறந்து  ஒற்றுமையின் நன்மைகளை  இழந்து பரிதவிக்கின்றான் . 
மின்ணணுவியல்
மின்ணணுவியலில்   ஒரு டையோடு மின் சுற்றில் ஒரு சில வேலைகளைச் செய்யும். சில டையோடுகள் ஒருங்கிணைந்து மின் சுற்றில் வேலையை செய்யும் போது அதன் செயல் திறன் பட மடங்காகும். ஒருங்கிணைந்த சிலிகான் சில்லுகள் கனணியில் வியத்தகு பணிகளை விரைந்து செய்கின்றன.குழுவாக ஒன்று கூடி வேலை செய்தால் பணிப் பளு இல்லை என்பதைத்தான்  இந்த சின்னச் சின்ன  டையோடுகள் தெரிவிக்கின்றன . 
 மொழி 
 மொழிப்பாடங்களும்  இக்  கருத்தை  வலியுறுத்திக்  கூறத்  தவறவில்லை.அர்த்தமுள்ள வார்த்தைகள் ஒரு சில எழுத்துக்களின் கோர்வையால் உருவாகின்றன. சில வார்த்தைகள் சேர்ந்தால் ஒரு செய்தி ஆகின்றது. வெறும் எழுத்துக்களினால் மட்டும் ஒருவர் ஒரு செய்தியை பிறருக்குச் சொல்லவோ அல்லது கேட்கவோ முடியாது. எழுத்துக்களின் ஒற்றுமையே மொழியின் வளம்.

Wednesday, March 27, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 13

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?
இணைந்து படிப்பதை பெரும்பலான மாணவர்கள் முழுமனதுடன் மேற்கொள்வதில்லை.அதற்குக் காரணம் தனக்குத் தெரிந்தது நண்பனுக்கும் தெரிந்து தேர்வில் தன்னைக்காட்டிலும் அதிக மதிப்பெண் வாங்கி விடுவான் என்ற பயம் உள்மனதில் ஓயாது ஒலித்துக் கொண்டிருப்பதுதான். இப்படி பள்ளிப் பருவத்தில் வளர்த்துக் கொள்ளும் பொறாமை எண்ணங்கள் ,பிற்காலத்தில்  சமுதாயாயத்தில்  வாழும் போது தானொரு மதிப்புள்ளவனாக இருப்பதை விட  எல்லோரையும் விட ஒரு படி மேலே இருக்க வேண்டும்  என்ற குறுகிய மனப்பான்மையை வளர்த்துவிடுகின்றன. இதனால் புறநிலையில் பிறருடன் ஒன்று சேர்ந்து இருந்தாலும் அவர்களுடன் அகநிலையில்  ஒற்றுமையாக இணைந்து ஒத்துழைக்கும் மனப்பான்மை இல்லாது போகின்றது . 
பேச்சுப் போட்டி . கட்டுரைப் போட்டி, கலை நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு  முறையும் பங்கு பெறுங்கள். ஓவியம் வரைதல், பழுது நீக்குதல் , கலைப் பொருள் சேகரித்தல்,சதுரங்கம் போன்ற உள்ளரங்க விளையாட்டுக்களில் ஒரு சிலவற்றில் ஆர்வம் கொள்ளுங்கள்.  துணைத் திறமைகளை வளர்த்துக் கொள்ள இது உதவும் . துணைத் திறமைகளை வளர்த்துக் கொள்வது , பயனுள்ள பொழுது போக்கு மட்டுமில்லை, மாற்றங்களால் தினம் மாறிக்கொண்டே இருக்கும் சமுதாயத்தில்  மேற்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்ள நம்பிக்கைக்கு உகந்த நம்பிக்கையும் அளிக்கும்.  எனினும் துணைத் திறமைகளில் கொள்ளும் ஈடுபாடு ,சமுதாயத்தில் வாழ்வதற்கான  அடிப்படை ஒழுக்கங்களை கற்பிக்கும் கல்வியை மட்டுப்படுத்தி விடாமல் பார்த்துக் கொள்ள  வேண்டும். துணைத் திறமைக்குள்ளே தன் எதிர்கால வாழ்க்கை இருக்கின்றது என்ற உறுதிப்பாடு, நம்பிக்கையை வளர்த்துக் கொண்ட வர்கள் மட்டும் துணைத் திறமைகளில் அதிக ஈடுபாடு காட்டலாம். எனினும் முதன்மைத் திறமையோடு துணைத் திறமையையும் வளர்த்துக் கொள்வதே  இனமறியாத இழப்பிற்கு வாய்ப்பளிக்காத பாதுகாப்பானது.
கல்வியை முழுமையாக முடிக்கும் வரை துணைத்திறமைகளினால் அமையும் வாழ்க்கையைத் தொடங்கி விடாதீர்கள். ஏனெனில் துணைத்திறமைகளைக் காட்டிலும் உண்மையான உயர் கல்வி கூடுதலான பயன்களைத் தரவல்லது , பலருக்கும் உயர்வைத் தரக்கூடியது .

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 12

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?
எப்போதும் வகுப்பில் ஒரு முக்கியமானவனாக இருக்க வேண்டும் என்று விருப்பப்படுங்கள். இது உங்களுடைய சுய மதிப்பை உயர்த்திக் கொள்ள வழி வகுக்கும் . இதற்கு  கல்வியில் முதல் மாணவனாகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. கல்வி என்பது அகத் திறமையை வளர்த்துக் கொள்ள உதவும் பொதுவான அறிவுரைகளின் தொகுப்பு . அது ஒவ்வொருவரும் அவர்களுடைய  எதிர்காலத்திற்காகச் செய்யும் மூலதனம் .கல்வியால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பது நிச்சியமான வழிமுறைகளுள் ஒன்று . ஆனால் வாழ்க்கை என்பது வெறும் கல்வியால் மட்டுமே ஆவதில்லை . அறிவுப் பூர்வமான கல்வியில் சிறந்து விளங்கினால் பின்னர் ஆக்கப்பூர்வமான செயல்களில் சிறந்து விளங்க  முடியும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டதே கல்வி. திறமையின் பயனுறு திறனை அதிகரிக்க கல்வி துணை செய்கின்றது . கடின உழைப்பை  எளிமையாக்கிக் கொள்ளவும்  , அதிக நேரத்தை சுருக்கிக் கொள்ளவும்  கல்வியால் மட்டுமே முடியும் . வாழ்க்கை என்பது தனக்குத் தானே உதவிக்கு கொண்டு பிறருக்கு உதவுவதற்கும்  அதைத் தொடர்ந்து செய்வதற்கும்  தன்னைத் தானே தகுதிப் படுத்திக்  கொள்ளும் வழி முறை.
சக  மாணவர்களோடு நட்போடு பழகுங்கள்.நட்புக்கு  இனிய சொற்கள் எப்போதும் அழகு. ஒருவர்க்கொருவர் உதவிக்  கொள்வது நட்பை வலுப்படுத்தும் . ஆனால் உதவியை எதிர்பார்த்து உதவி செய்யாதீர்கள் . உதவி ஒருநாளும் பண்டமாற்றுப் பொருளில்லை உங்களால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்யத் தயங்காதீர்கள் . செய்யப்படும் எந்த உதவியும் மறக்கப்படுவதில்லை . மாறாக அது பல மடங்காகி பேருதவியாய் மீண்டு வரும்.  உங்களுக்குத் புரிந்ததை அவர்களுக்குப் புரியாததைச் சொல்லிக் கொடுங்கள், உங்களுக்குப் புரியாததை ,அவர்களுக்குப் புரிந்ததைக் கேட்டுது தெரிந்து கொள்ளுங்கள். சேர்ந்து படிக்கும் போது ஒருவர்க்கொருவர் புரிதலை வளப்படுத்திக் கொள்ள முடிகின்றது. மதிப்பெண்களுக்காகப் படிக்காமல் தகுதி மேம்பாட்டிற்காகப் படியுங்கள். ஒருவருடைய ஐயங்கள் தவறாக அல்லது  கேலிக்குரியதாகக் கூட இருக்கலாம் . அதற்காக ஐயத்துடனே படிப்பத்தைத் தொடராதீர்கள். ஐயங்கள் புரிதலை மட்டுப்படுத்தி விடும்.ஒரு முட்டாள் புத்திசாலித்தனமான பதிலிலிருந்து  தெரிந்து கொள்வதை விட ஒரு மேதை முட்டாள் தனமான கேள்வியிலிருந்து அதிகம் புரிந்து கொள்வான்  என்று கூறுவார்கள் . அதனால் ஐயங்களை போக்கும் உங்கள் கேள்வி முட்டாள்தனமாக இருக்குமோ என்று கவலைப்படாதீர்கள்.
 நட்பின் இலக்கணத்தை மீறாமல் நடந்து கொள்ளுங்கள் ,வாழ்க்கை முழுதும் தொடரும் போது பரிபூர்ண ஒத்துழைப்புக்கு வழி இருப்பதால் , மகத்தான சாதனைகள் புரிய இயற்கையாகவே வாய்ப்பு ஏற்படுகின்றது. நல்ல நட்பை இழந்தவர்கள் சாதனை புரிய கிடைக்கும் இயற்கை வாய்ப்புக்களை இழக்கிறார்கள்.சேர்ந்து விளையாடுங்கள்.ஒருவருடைய முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்படுவதை விட்டுவிட்டு மகிழ்ச்சி கொள்ளுங்கள் . ஏனெனில் நண்பர்களின் திறமை என்பதும் ஒருவரது நம்பிக்கைக்குரிய பலமாகும் . அதிக அளவில் நல்ல நண்பர்களைக்  கொண்டவர்கள் தங்களால் முடியாத எத்தகைய செயலையும் செய்து முடித்து விடுகின்றார்கள் நண்பர்கள்  தவறான வழிகளில் சென்றால் திருத்துங்கள் . நீங்கள் தவறான வழியில் சென்றால்  திருந்துங்கள் .

Monday, March 25, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 11

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? -
கல்வி தேடுதல் என்பது புரிதல் மூலம் ஒருவர் தன் திறமையை வளர்த்துக்கொள்ள மேற்கொள்ளப்படும்  சுய முயற்சி . தன்னார்வமின்றி சுயமுயற்சி வெளிப்படுவதில்லை. சுயமுயற்சிகளின் தொடக்கம் என்பது ஒருவர் ஆக்கப்பாடான பணிகளில் ஈடுபடுவதை தெரிவிக்கும் முன்னறிவிப்பு  . 
கல்வி தேடுதல் கற்கும் கல்வியை முழுமையூட்டுகின்றது . ஒரு சரியான இலக்கைத் தேர்வு செய்ய இது வழி காட்டுகின்றது . அதனால் சுயமாக ஒரு இலக்கை நோக்கங்கொள்ள மாணவப் பருவத்திலேயே  வாய்ப்பு ஏற்படுகின்றது. இலக்கை நோக்கிய பயணத்தை விடாது தொடர இயற்கையாகவே ஒரு உந்துதல் உள்ளுக்குள் ஊற்றெடுக்கக் காரணமாயிருக்கின்றது. 
 சுய முயற்சியுடன் செய்யப்படும் எந்த வேலையும்  நிறைவாக முடியும் வாய்ப்பைக் கொண்டுள்ளது என்பதால் அதற்கு அடிப்படையான   கல்வி தேடுதலைத்  தன்னார்வத்துடன் மேற்கொள்ள வேண்டும்.  ஏனெனில் இந்த தன்னார்வம் கல்வி தேடுதலால் ஒவ்வொருமுறையும் புதுப்பிக்கப்பட்டு எண்ணத்தில் நிலைநிறுத்தப்படுகின்றது
ஒரு துறையில் ஈடுபட்டு அதில் சாதிப்பதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு அத்துறையில் மென்மேலும் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்களை உருவாக்க ஆர்வப்படுவதைத் தவிர வேறு சிறந்த வழியில்லை.தொடக்கத்தில் இருக்கும் ஆர்வம் இறுதி வரை தொடர்வதில்லை.அதனால் சாதிப்போர் வெகு சிலராகி வருகின்றார்கள்.ஒரு குறிப்பிட்ட துறையில் இருக்கும் ஆர்வம் பிற துறை ஆர்வங்களினால் நிறம் மாறிப்போவதே இதற்குக் காரணமாகின்றது .பெரும்பாலானோரிடம் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குகளில் கொள்ளும் ஆர்வம் தன் விருப்பத் துறையில் இருக்கும் ஆர்வத்தை மட்டுப்படுத்திவிடுவதற்கு ஒரு வலிமையான காரணமாக இருக்கிறது .
இன்றைக்கு பொழுதுபோக்கினால் கிடைக்கும் சுகத்தை அனுபவிப்பேன்.இன்னும் காலம் இருக்கிறது, அப்போது தன்விருப்பத் துறையில் ஈடுபட்டு எல்லாவற்றையும் செய்து முடிப்பேன் என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொள்ளலாம். தள்ளிப்போடும் எந்த வேலையும் சிறப்பாகச் செய்து முடிக்கப்படுவதில்லை.பலர் இந்த எண்ணத்தினால் ,சராசரி வாழ்க்கையே தனக்கு அளிக்கப்பட்டது என்று முடிவு செய்து விட்டு பிற்காலத்தில் எதையும் சாதிக்கத் தவறிவிடுகின்றார்கள்.
காட்டு விலங்குகள் ஒவ்வொன்றும் தன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை நிர்ணயித்துக் கொண்டிருக்கும்.இந்த எல்லையைத் தாண்டி யார் புகுந்தாலும் அவர் அந்த விலங்கால் தாக்குதலுக்கு ஆளாவார் .இந்த உண்மையை வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள் .அது போல நம்முடைய எண்ணங்களுக்கும் ஒரு பாதுகாப்பு வளையமுண்டு .இந்த வளையத்தைத் தாண்டி மற்றொரு எண்ணம் ஊடுருவிச் செல்ல அனுமதிக்காத வரை கொண்டுள்ள ஒவ்வொரு எண்ணமும் தனித்து வலுப்பெற்று வளம்பெறும் .
தன் விருப்பத் துறையில் ஒருவர் தொடர்ந்து ஈடுபட்டாலும் எளிதில் சோர்வடைவதில்லை.விருப்பத் துறையில் ஆர்வம் அதிகரிக்க பிற துறைகளில் நாட்டம் ஏற்படுவதில்லை.
ஆர்வப்படாமல் பெரிய ,அரிய காரியங்களை யாராலும் செய்து முடிக்க முடியாது .திறமையை வளர்த்துக் கொள்ளவும் ,ஒரு குறிப்பிட்ட துறையில் முன்னிலை அடையவும் பயனுள்ள எதையாவது செய்யக் கூடிய ஆற்றல் பெறவும் வற்றாத  ஆர்வம் இருக்க வேண்டியது அவசியம் 
ஆர்வமின்றி எதைச் செய்தாலும் அது கடினமான செயலாகத்தான் தோன்றும்.எளிமையும்,கடுமையும் செய்யப்படும் செயலில் இல்லை. அது மனதில் தங்கியிருக்கும் ஆர்வத்தைப் பொறுத்தது . 
ஆர்வம் கொள்வதற்கு சில அடிப்படைகளை நாம் விடாது மேற்கொள்ளவேண்டும் .அவை ஆர்வப்படுவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்கின்றன.உணர்வுருப்புக்களைக் கொண்டு அதிகமாகத் தெரிந்து கொள்ளவும் ,புரிந்து கொள்ளவும் வேண்டும் .தெரிந்து கொள்வதை விட,அறிந்து கொள்வதை விடப் புரிந்து கொள்வது ஆர்வப்படுவதற்கு அவசியமானது .தூண்டப்படும் ஆர்வத்தை  விட தன் ஆர்வம் மிகவும் வலிமையானது, செயல் திறன் மிக்கது .தூண்டப்படும் ஆர்வம் என்பது அயல் மொழிக் கல்வி என்றால் தன்னார்வம் தாய் மொழிக் கல்வி போன்றது. தூண்டப்படும் ஆர்வம் தன்னார்வமாக நிலை மாற்றம் அடையாத வரை  முன்னேற்ற வீதத்தில் அதிக மாற்றம் விளைவதில்லை 

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?-10

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?
ஓய்வு நேரங்களில் புரிதலை மேம்படுத்த கல்வி தேடுதலை யோ அல்லது சுய திறமையை வளர்த்துக் கொள்ள உறுதுணையாக இருக்கும்  பயனுள்ள செயலையோ செய்யவேண்டும் . இலக்கை முடிவு செய்யாதவர்கள் மட்டுமே வேலை செய்வதற்கு  ஒன்றும் இல்லை என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓய்வெடுத்துக் கொள்வார்கள் .இலக்கைச்  சரியாக  இறுதி செய்து கொண்டு அதை அடைய முயற்சி மேற்கொண்டவர்களுக்கு  கிடைக்கும் நேரம் போதாமலிருக்கும் . நம் முன்னோர்கள் ஓய்வு நாட்களில் சும்மா இருக்க வில்லை. கோயில் ,குளங்களைக் கட்டினார்கள், சமுதாய நல்லிணக்கத்திற்காக ஆண்டுதோறும் திருவிழாக்களை ஏற்படுத்தி நல்லுறவை வளர்த்துக் கொண்டார்கள் , சிலைகளையும் சிற்பங்களையும் செதுக்கினார்கள் , வீர விளையாட்டுகளில் உடல் வலிமையை வளப்படுத்திக் கொண்டார்கள் , ஏடுகளில் சிந்தனைகளை இலக்கிய வரிகளாக எழுதி வைத்தார்கள் . 
சும்மா இருப்பதைத் தவிர்க்க வேண்டும். அது சோம்பேறித்தனத்தை வளர்த்து விடும் . சும்மா இருக்கும் போது படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ள முயற்சி மேற்கொள்வது பயனுள்ளது.விடுமுறை நாட்களில் பிற மொழிப் பயிற்சி,இசைக்கருவிகளில் பயிற்சி, மேடைப்பேச்சு பேசுதல் ,கதை , கவிதை எழுதுதல் , உள்ளரங்க மற்றும் விளையாட்டுத் திடலில் விருப்பமான விளையாட்டுக்களில் பயிற்சி , கைவினைப் பொருட்களைத் தயாரித்தல் ,ஓவியம் வரைதல், கலைப் பொருட்கள், தபால் தலை , பழைய நாணயங்கள்  போன்றவற்றைச் சேகரித்தல்  போன்றவற்றில் ஈடுபடலாம்.
புரிதலை மேம்படுத்த அதிகம் நூல்களைப் படிக்க வேண்டும் . இதற்க்கு பள்ளிகளில் உள்ள நூலகங்களை ப் பயன்டுத்திக் கொள்ள இருக்கும் வாய்ப்பை விட்டு விடக் கூடாது.நூல்கள் வாசிப்பதை நேசிக்க வேண்டும் என்று சாற்றோர்கள் கூறுவார்கள் . நன்நூல்கள் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை , நல்லாசிரியருமாகும் . 

Sunday, March 24, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?- 9

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?
 எதைச் செய்தாலும் அதை அதற்காக மட்டுமே செய்ய வேண்டும்.எதையும்   அதனால் கிடைக்கும் பலன்களுக்காகச் செய்யக் கூடாது  என்பது இயற்கையின் அறிவுரை . இயற்கையைப் புறக்கணிக்கப் புறக்கணிக்க நாம் மிகுந்த இன்னலுக்கு உள்ளாவோம் என்பதை வெகு சிலரே உணர்ந்து  செயல்படுகிறார்கள் .பிற்பலன் கருதிச் செய்யும் போது சுய நலம் மிகுந்து குறுக்கு வழியில்  முந்திச் செல்லும்  கோணப்புத்தியும் , திறமையின்மையும்  தூண்டப்பட்டு இலக்கை நோக்கிச் செல்லும்  திக்கை திசை திருப்பிவிடுகின்றது . கல்வியை கல்விக்காக மட்டுமே கற்க வேண்டுமெனில், மாணவர்கள் மாணவர்களாகவே இருக்கவேண்டும். வகுப்பறையைத் தூய்மையாக  வைத்திருக்க உதவ வேண்டும். வகுப்பறையில் தோன்றாத தூய்மை வாழ்க்கையின் எந்த காலகட்டத்திலும் வருவதில்லை. தூய்மையின்மை பணி செய்வதற்கு ஓர் அகத் தடையாக இருப்பதால் சுய முன்னேற்றம் பின்தங்கி விடுகின்றது .  சுகாதாரமில்லாத  சுற்றுப்புறம் உடல்நலத்திற்கும் ஊறு விளைவிக்கின்றது . உடலையும் உள்ளத்தையும் ஒரு சேரச்  சோர்வடையச் செய்யும்    வலிமை இந்த தூய்மையின்மைக்கு  இருப்பதால் , ஏற்படும் இழப்பு நீண்டகாலப் போக்கில் அதிகரித்து நமக்குத் தெரியாமலேயே  நிரந்தரமான  இழப்புக்களை ஏற்படுத்தி விடுகின்றது .
தூய்மை என்பது புறத் தூய்மை மட்டுமல்ல அகத் தூய்மையும் தான்.அகமும் புறமும் நலமாக இருந்தால் தான் உடலும் உள்ளமும் நலமாக இருந்து ஒத்தியங்கும் வலிமையைப் பெறும்.
சத்தம் போட்டு மற்றவர்களுக்கு இடையூறை ஏற்படுத்தாமல் ஆசிரியர் வரும் வரை  அமைதியாக இருக்க வேண்டும். பொதுவாக இரைச்சல் மனம் ஒருமுகப்படுவதை சீரழித்து விடுகின்றது . இரைச்சலை விட அமைதியாக இருக்கும் போது மனம் உற்ச்சாகமாக இருப்பதால்  சிந்தனை செய்யும் ஆற்றலும் , வேலை செய்யும் ஆற்றலும் பல மடங்கு அதிகமாக இருக்கின்றது. வகுப்பறையில் சத்தம் போடுவது, தேவையில்லாமல் அரட்டை அடிப்பது என்பதெல்லாம் ஆற்றலை வீணாகாச் செலவழிப்பதுதான் . அதனால் பின்னர் முக்கியமான செயலைச் செய்யத் தேவையான ஆற்றல் போதுமான அளவில் கிடைக்காமல் போய் விடுகின்றது. இரைச்சலால் இயல்பாக இருக்கும் பயனுறுதிறனையும் இழந்துவிடக்கூடாது பிற மாணவர்களுடன் பாட சம்பந்தமாக கலந்துரையாடல் செய்யலாம். கலந்துரையாடல் என்பது கூட்டு முயற்சி. ஒவ்வொருவரும்  எல்லாவற்றையும் தெரிந்திருக்க முடியாது. ஆனால் எல்லோரும் எல்லாவற்றையும் செய்யமுடியும்.இதனால் ஆசிரியரின் உதவியில்லாமலேயே பல விஷயங்களைக் கூட்டு முயற்சியால் கற்றுக் கொள்ள முடியும்.  இரவில் தூங்குவதோடு ஓய்வு முடிந்து விட்டது. பகலில் கூடுதல் உழைப்பின்றி கூடுதல் ஓய்வு எடுத்துக் கொள்வது என்பது  பயனுறு திறனை இழப்பதாகும். வகுப்பறையில்  கிடைக்கும் ஓய்வைப் பயனுள்ளவாறு கழிக்கப் பழக வேண்டும்.  சும்மா இருப்பது சோம்பேறித்தனத்தின் செயல் விளக்கம் . 

Saturday, March 23, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 8

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?
வாழ்க்கை முழுதும் நிறைவான மகிழ்ச்சியோடு கூடிய மேலான வாழ்க்கையைப் பெற  உடலும் உள்ளமும் நலமாக இருக்க வேண்டும் . இதில் ஒன்றின் நலம் குறைவாக இருந்தாலும்  வாழ்க்கையின் இனிமை  குன்றிவிடும் . மனதை மட்டும் கவனித்தால் போதாது ,மனம் குடியிருக்கும் உடலையும் கவனிக்க வேண்டும் என்பதை  " காலை எழுந்தவுடன் படிப்பு , பின்பு மாலை முழுதும் விளையாட்டு "  என்று  மகாகவி பாரதி சொல்லுவான் .
நல்லொழுக்கத்திற்காகக் கல்வி கற்றுக்கொள்ள மேற்கொண்ட  முயற்சிக்குப் பின்  காலைக் கடன்களைச் செய்து முடிக்க வேண்டும். தன் வேலைகளைத் தானே செய்யும் பழக்கத்தை  விரும்பிச் செய்யவேண்டும் .தன்னால் செய்ய முடியாத  வேலைகளைச் செய்ய மட்டுமே பிறர் உதவியைத் தேடிப் பெறலாம்.
பல் துலக்குவது, குளிப்பது , அலங்காரம் செய்து கொள்வது ,  ஆடை அணிவது , உணவு உட்கொள்வது , பள்ளிக்குப் புறப்படுவது ,  வீடு திரும்புவது , என எல்லா  வேலைகளும் தாமதமின்றி நேரப்படி நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கவேண்டும் . கிடைக்கும் நேரத்தை வீணாக்கிவிடாமல் இருக்க ஒவ்வொரு வேலைக்கும்   இவ்வளவு       நேரம் என்று முன் தீர்மானம் செய்து கொள்வது நல்லது . பல திறமைகள் உள்ளவர்களும் வாழ்க்கையில் தோற்றுப் போகின்றார்கள் என்றால் அதற்கு காரணம் அவர்கள் நேரத்தை சரியாக மேலாண்மை செய்யாததேயாகும்  . 
நேரத்தை எப்படி பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை இளம்வயதிலேயே அறிந்து கொண்டால் பிற்காலத்தில் பணி மற்றும் குடும்பச் சுமை காரணமாக கூடுதல் நேரம் தேவைப்படும் போது வெற்றிகரமாகச்  சமாளிக்க முடியும்.இதைக் கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்குத்தான் இருக்கின்றது .
நேரத்தைத் தேவையின்றிச்  செலவழிக்காதே , முதலீடு செய்  என்று அறிஞர்கள் சொல்லுவார்கள் . இதன் உட்பொருள் என்னவென்றால் நேரத்தை வீணாக்கச்  செலவு செய்தால் தற்காலிய சுகம் மட்டுமே கிடைக்கும், முதலீடு செய்தால் பிற்காலத்தில் அதை விரும்பியவாறு  வேறு வடிவில் பெற்று மகிழலாம் .   சம்பாதித்த பணத்தை மட்டும் புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் மட்டும் போதாது , நேரத்தையும் அதி புத்திசாலித்தனத்தோடு பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். பொருள் செலவின்றி நேரம்  தானாகவே கிடைக்கின்றது என்பதாலும் , வீணாக்கி விட்டாலும் தொடர்ந்து கிடைக்கின்றது என்பதாலும் பெரும்பாலான மாணவர்கள் நேரத்தை  முதலில் வீணாக்கிவிட்டு பின்னர் வருத்தப்படுபவர்களாகவே இருக்கின்றார்கள் . குழாயில் வடிந்து  வீணாகும் குடிநீரைப் பற்றி கவலைப்படாவிட்டால்  குடிக்க ஒரு சொட்டு நீர் கிடைக்காத போது அதிகம்  துன்பப்பட நேரிடும்.
உழைப்பின்றி எடுத்துக் கொள்ளும் பொழுதுபோக்கு நேராத்தைச் செலவழி ப்பதாகும் .பொழுதுபோக்கின்றி உழைப்பது என்பது உடல் நலத்தைக் கெடுப்பதாகும் . உழைப்பதற்கான நேரத்தில் உழைப்பது என்பது நேரத்தை முதலீடு செய்வதாகும் .இதை ஒரு சிறு கதை மூலம் புரிந்து கொள்ளலாம் .
ஒரு குடியானவனுக்கு இரண்டு பிள்ளைகள். இறக்கும் தருவாயில் அவர்களின் விருப்பப்படி  தன் சொத்தைப் பிரித்துக் கொடுத்தான். மூத்தவன் தங்கக் கட்டிகளையும் , இளையவன் கரடு முரடான மேட்டு நிலத்தையும் பெற்றுக் கொண்டனர். .மூத்தவன் தங்கத்தை விற்று விற்று உயிர் வாழ , ஒரு கால கட்டத்தில் பொருளின்றித் தவித்தான். இளையவன் கரடு முரடான நிலத்தைப் பக்குவப் படுத்தி , அதை பொன் விளையும் பூமியாக்கி , காலம் முழுதும் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தான் .
ஒருவருடைய வாழ்க்கையின் இனிமை  அவரவர் எண்ணத்திலும் ,செயலிலும் தான் இருக்கின்றது. எண்ணத்தை மனதாலும் , செயலை உடலாலும்  செய்ய வேண்டியிருப்பதால் அவற்றின் நலத்தை ஒவ்வொரு நாளும் கவனிக்க வேண்டியது அவசியமாகும் .

Friday, March 22, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 7

சிறந்த மாணவனாக வளர்வது  எப்படி  ?
மாணவர்களின் நல்லொழுக்கத்திற்கு முதல் பாடமாக  இருப்பது அவரவர் பெற்றோர்களே .முற்றும் கோணலுக்கு முதல் கோணல் இல்லாதிருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டிய கட்டாயப் பொறுப்பு  ஒவ்வொரு  பெற்றோருக்கும் இருக்கின்றது . தவறான பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொள்ளும் போது சும்மா இருந்து விட்டு  , பிற்காலத்தில்  தன் பிள்ளை மிகச் சிறந்த மேதையாக வரவேண்டும் என்று ஒரு பெற்றோர் எதிர்பார்த்தால் அது பெரும்பாலும் ஏமாற்றமாகவே முடியும் . பெற்றோர்களின் பாதுகாப்பில் வளரும் ஒரு குழந்தை  பிற்காலத்தில் ஒரு சிறந்த மாணவனாகத் திகழ்ந்து பின்னர் சமுதாயத்தில் உயர்ந்த மனிதனாக வாழ,அடிப்படை ஆதாரமான பல நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்றி ஒழுக கற்றுக்  கொடுக்க வேண்டும்.அதைச் செய்யத் தவறி மேற்கொள்ளும் ஈடுபாட்டில் காட்டும்  ஏற்றத் தாழ்வுகளே ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்களின் சமச்சீரின்மைக்குக் காரணமாகின்றது . ஒரு பெற்றோரின் கடமை குடும்பத்திற்காகச்  சம்பாதிப்பது மட்டுமில்லை. குழந்தை  வளர்ப்பில் கொள்ளும் ஈடுபாடுமாகும் .அதற்காக ஒவ்வொரு நாளும் கொஞ்சம் நேரம் ஒதுக்கவேண்டும் .
ஒரு குழந்தை பிற்காலத்தில் சிறந்த மாணவனாக வளர  சில முக்கியமான பழக்க வழக்கங்களை பின்பற்றி ஒழுக வேண்டும். அவை பின்வருமாறு .
1 . அதிகாலையில் எழுந்து அன்றைய தின வேலைகளை முன்திட்டமிட்டு நாளை நாளை என்று தள்ளிப் போடாமல் செய்து முடிக்கும் இயல்பைத் தனதாக்கிக் கொள்ளவேண்டும் .
 ஞானிகள் அதிகாலையில் 3 மணிக்கெல்லாம் எழுந்து பணியாற்றத் தொடங்கிவிடுவார்கள். அதிகாலையில் உடலும் உள்ளமும் இறுக்கமின்றி இருப்பதால் ,செய்யும் வேலைகளில் முழுக் கவனம்  செலுத்தி முழுப் பயனுறு திறத்தோடு செய்து முடிக்க அவர்களால் முடிகின்றது. மனதை ஒருமுகப்படுத்திச் செயல்படுவதற்கு உடலின் ஒத்துழைப்பு இந்த அதிகாலை வேளையில் அதிகம் கிடைக்கின்றது என்பதை இவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்கள் .
துறவிகள் 4 மணிக்கெல்லாம் எழுந்து ஆன்மிகப் பணிகளை செய்யத் தொடங்குவார்கள் . ஒவ்வொரு  நாளும் பலதரப்பட்ட  பொது மற்றும் சமுதாய ப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு இருக்கின்றது. எச் செயலையும் சிந்தனைச் சிதறலின்றி ,சரியாக முன்கூட்டியே சுயமாக  முடிவெடுத்துச் செய்து முடிக்க அதிகாலை இவர்களுக்கு அனுகூலமாக இருக்கின்றது .
சான்றோர்களும் , மேதைகளும் 5 மணிக்கெல்லாம் எழுந்து  பணி மேற்கொள்வார்கள் .அக மற்றும் புற இடையூறுகளின்றி   பணிக்குத் தேவையான செய்திகளைத் திரட்டுவதற்கும், முன் திட்டமிடுவதற்கும் , முன் ஏற்பாடு செய்வதற்கும்  இந்த முற்பொழுது முழு இணக்கமாக இருக்கின்றது .
மாணவர்கள் சிறந்த மாணவனாக வளர விரும்பினால்  குறைந்தது 6 மணிக்கெல்லாம் விழித்த தெழுவதை பழக்கமாக க்  கொள்ள வேண்டும் . வீட்டுப் பாடங்களைச் செய்து முடிக்கவும், நேற்று நடத்திய பாடங்களை நினைவுபடுத்திப் புரிந்து கொள்ளவும் ,அன்று கற்க வேண்டிய புதிய பாடங்களை பற்றித் தெரிந்து கொள்ளவும் அமைதியான அந்த அதிகாலைப் பொழுது பயனுள்ளதாக இருக்கின்றது .மனம் அலை பாய்வதில்லை . கற்கும் கல்வியைத் தெரிந்து கொள்வதை விட, அறிந்து கொள்வதை  விட புரிந்து கொள்வதுதான் முக்கியம். புரிந்து கொண்டு தனதுரிமையாக்கிக் கொண்ட கல்வி மட்டுமே ஒருவரின் உள்ளுறை அகவாற்றலாகப்  பயன்தரத்தக்கது. அகவாற்றலின் அளவு அதிகரிக்க ஒரு மாணவன் திறமையானவனாகின்றான். ஒரு மாணவனின் மதிப்பு என்பது இந்த அகவாற்றலின் அளவைப் பொறுத்து அமைகின்றது.
7 மணிக்கு மேல் உறங்கி எழுபவர்கள் சோம்பேறிகள் . இந்த சோம்பேறித்தனம் வாழ்க்கை  முழுதும் பின் தொடர்வதால் வாழ்வின் பயனுறுதிறனை வெகுவாக இழந்து விடுகின்றார்கள் .

Wednesday, March 20, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி? - 6

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?
ஒரு மாணவன் கல்வியை இழந்தான் என்றால் அது அவனுக்கு மட்டும் இழப்பு , ஆனால் நல்லொழுக்கத்தை இழந்தான் என்றால் அது அவன் இருக்கும் சமுதாயத்திற்கே இழப்பு. ஒழுக்கமின்மையால் ஏற்படும் இழப்பு கல்லாமையால் ஏற்படும் இழப்பை விடப் பல மடங்கு அதிகம்.ஒழுக்கமில்லாத ஒருவருடைய முன்னேற்றம் அவருக்கு வேண்டுமானால் முன்னேற்றமாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில் அது உறுதிச் சமநிலையில் இல்லாத (unstable equilibrium) ஒரு முன்னேற்றமாகவே இருக்கும். அது நுண் கிருமிகளை போல விரைந்து பரவி  தீவிரமாகி சமுதாயத்தையே ஒட்டு மொத்தமாக சீரழித்து விடும் அபாயத்தைக் கொண்டுள்ளது.நல்லொழுக்கத்தைப் போற்றுவதால் ஒருவர் தன்னோடு தன் இனத்தரையும்,  சமுதாயத்தையும் வளப்படுத்த முடியும்.  ஒருவர் முன்னேறுவது மற்றவர்களை முன்னேற்றுவதற்குத்தான்  என்பது இயற்கை . இயயற்கையின் விசாலமான நடைமுறைகளிலிருந்தே இதை நாம் கற்றுத் தெளிய முடியும் . பெரும்பாலான மாணவர் தோல்வியடைவது , திறமையின்மையாலோ , அறிவின்மையாலோ இல்லை. மாறாக சுய விருப்பமின்மையாலும், முறையான வழிகாட்டுதல் இல்லாமையாலும் . அர்ப்பணிப்பு இன்மையாலும் , ஒழுக்கமின்மையாலும்  தான். இவை சமுதாயத்தில் மிகுந்து வருவதால் மாணவர்கள் ற்றிக்கொள்ள வாய்ப்பாக அமைகின்றது. நல்லொழுக்கம் உறுதியாக இருந்தால் சமுதாயத்தில் மிகுந்து வரும் எதிர்மறைக் காரணிகளை எளிதாக, வெகு இயல்பாக கட்டுப்படுத்தி விட முடியும்.
ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க எல்லோருக்கும்  எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கம்  பொதுவாக எளிமையானதாகவே (S for Simple)  இருக்கும். ஏனெனில் ஒழுக்கம் காரணமாக ஒருவர் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளும் கட்டுப்பாடுகளை அவரே ஏற்றுக்கொள்வது என்பது எப்போதும் எளிமையானதே. கட்டுப்பாடுகள் போலியாக இருக்கும் போது ஒழுக்கம் கடினமாகி விடுகின்றது  அலைபாயும் மனதின் சுய விருப்பத்தைப் பொறுத்து அது எளிமையானதாகவோ அல்லது கடுமையானதாகவோ தோற்றம் தரலாம் .தீய ஒழுக்கங்களை மறைமுகமாகப் பின்பற்றி ஒழுகுவதற்கு ஒரு வலிமையான காரணம் எப்படி உள்ளுக்குள் இருக்கின்றதோ அதைப்போல நல்லொழுக்கங்களையும் வெளிப்படையாகப் பின்பற்றி ஒழுக மனதால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு காரணம் உறுதியாக இருக்கவேண்டும் .அப்போது தான் மன மாற்றமின்றி  வாழ்க்கை  முழுதும் நல்லொழுக்கங்களை மட்டும் பின்பற்றி ஒழுக முடியும் .நல்லொழுக்கம் சமுதாயத்தில் வாழும் மற்றவர்களுக்கு ஒரு நல்வழிகாட்டியாகவும் புதியவர்களுக்கு முன் மாதிரியாகவும் இருந்தால்  சாகாத சமுதாயத்தில்  வாழும் மக்களுக்கு ஒரு நிரந்தரமான பாதுகாப்பாக இருக்கும் . அந்த வாக்குறுதியே நலமான சமுதாயத்தின் உண்மையான அறிகுறி.     

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 5

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?
குழந்தையாய் வளரும் போது கற்றுக் கொள்ளும் ஒழுக்கமே பிற்காலத்தில் மனிதனாய் சமுதாயத்தில் வாழும் போது தொடர்கின்றது . இவை ஒரு மரத்தின் ஆணி வேர் போன்றது. மாணவனாய் கல்வி கற்றுக் கொள்ளும் போதும் , பெற்றோர்களின் அறிவுரைகளாலும் , பட்டறிவினாலும், சுய சிந்தனைகளின் எழுச்சியால் நல்லொழுக்கமும் , தீய ஒழுக்கமும்  பற்றிக் கொள்கின்றன . இவை ஒரு மரத்தின் சல்லி வேர் போன்றது .காரணத்தோடு தீய ஒழுக்கங்கள் திருத்தப்படாவிட்டால் , அவை சுயமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு . வாழ்க்கை  முழுதும் தொடரும்  நிலையே ஏற்படும் . திருத்துதல் என்பது  தேவையற்ற களைகளை வேரோடு பிடுங்கி எறிதல் போன்றது. செடியாக இருக்கும் போது அப்படிச் செய்வது எளிது. அதுவே மரமாக வளர்ந்து விட்டால் வேரோடு பிடுங்கி எறிவது எளிதல்ல. 
ஒழுக்கம் என்பது வளரும் ஒரு மரத்தின் வேர் போன்றது. மரம் வளர்வதற்கும் பூத்துக் காய்ப்பதற்கும்   மட்டுமல்ல சாய்ந்து விடாமல் காப்பதும் இந்த வேரே. இந்த வேர் மண்ணுக்கு அடியில் இருப்பதால் நம் கண்களுக்குத் தெரிவதில்லை . அது போல ஒருவரின் உண்மையான ஒழுக்கமும் அவர் எண்ணத்திற்குள் இருப்பதால் பிறரால்  முழுமையாக அறிந்து கொள்ள முடிவதில்லை.இன்றைக்கு ஒருவருடைய ஒழுக்கம் அக மற்றும் புற ஒழுக்கம் என  இரண்டு வகைகளின் கலப்பாக இருக்கின்றது -   சமுதாயத்திற்காக வெளிப்படைத் தன்மை மிகுந்த போலியான  புற ஒழுக்கம் தனக்காக  வெளிப்படைத் தன்மையற்ற மறைவான ,நிரந்தரமான அக ஒழுக்கம்.வளரும் போது நமக்கு நாமே ஏற்றுக்கொண்ட ஒழுக்கங்களே சமுதாயத்தில் வாழும் போது வெளிப்படுத்த தோன்றுகின்றன .
குழந்தைகள் கல்வி கற்று அதிகமாய்ச்  சம்பாதிக்க வேண்டும் ,உயர் பதவி வகிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் எடுத்துக் கொள்ளும் அளவில்லாத முயற்சியில் ஒரு சிறிதளவு கூட நல்லொழுக்கங்களை பிறழாது ஒட்டி ஒழுக வேண்டும்    என்று அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. ஏனெனில் தன் பிள்ளைகள்  சீரழிந்து வரும் சமுதாயத்தில் பிழைத்து வாழ நல்லொழுக்கங்களை விட கொஞ்சம் தீய ஒழுக்கங்களும் தேவை என்ற தன்னம்பிக்கையை வளர்ந்துக் கொண்டுள்ளார்கள்.அதனால் தீய ஒழுக்கங்களை கற்றுக் கொள்ளும் பிள்ளைகளுக்கு  திருத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லாது போகின்றது. தீய ஒழுக்கம் மிகுந்த சமுதாயம் ஒரு சில தீயவர்களுக்கு வேண்டுமானால் தாற்காலியமான நலம் பயக்கலாம் ஆனால் வளரும்  சமுதாயத்திற்குப் பாதுகாப்பற்றது , சாகாத சமுதாயத்திற்கு நிரந்தரமான நலமே பாதுகாப்பானது என்பதை இவர்களாக உணர கல்வியில் ஒரு மாற்றத்தை ஆசிரியர்களால் மட்டுமே ஏற்படுத்த முடியும்.   

Monday, March 11, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? -4

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?
சமுதாய மக்களுக்கு ஒழுக்கம் மிக மிக முக்கியம்.. ஒழுக்கமற்ற சமுதாயம் பாதுகாப்பற்றது என்பதால் விரைவில்  சீரழிந்து  போகும் .தனிமனித ஒழுக்கமே காலப்போக்கில் சமுதாய ஒழுக்கமாக நிலைப்படுகின்றது. அப்படி நிலைப்படும் ஒழுக்கங்களே தனி மனிதர்களுக்கு வழிகாட்டியாக அமைகின்றது.  மக்கள் வருவார்கள் போவார்கள். வரும் போது ஒன்றையும் கொண்டு வருவதில்லை போகும் போது எதையும் கொண்டு போவதில்லை . ஆனால் மக்களுடைய  சுய எண்ணங்களினால் விளைந்த செயல்கள் மட்டும்  சமுதாயத்தில் முன்மாதிரியாகத்  தங்கிவிடுகின்றன.  இது சமுதாயத்தில் புரையோடி  தொடர்ந்து அதிகரித்து வரும் ஒரு தாக்கத்தை  ஏற்படுத்திவிடுகிறது   மக்களால் ஆன சமுதாயம் உலகம் உள்ளளவும் இருக்கும் என்பதால் அதைச் சாகாத சமுதாயம் என்பர். இந்தச் சாகாத சமுதாயத்தில் முன்னோர்களின் நல்லெண்ணங்கள் நேர்மறையான வளர்ச்சிக்கும் , தீய எண்ணங்கள் எதிர்மறையான வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருக்கின்றன. அதனால் சாகாத சமுதாயத்தின் கண்ணோட்டத்தில் வருங்கால சந்ததியினருக்காக நம் முன்னோர்கள் இப்படித்தான் வாழ வேண்டும்  என்று வாழ்வியல் ஒழுங்கங்களுக்கு ஒரு வரையறையை  ஏற்படுத்தியிருக்கிறார்கள் .இந்த நெறிமுறைகள் சமுதாய நன்மக்களுக்கு பாதுகாப்பானது காலத்திற்கு   ஏற்ப  இதில்  சிறிய  அளவிலான  மாற்றங்களை வரம்புகளுக்கு உட்பட்டு அனுமதித்தாலும் சமுதாயத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்ற மாற்றங்களை அனுமதிப்பதில்லை .சுய நலத்தின் காரணமாக  எல்லை மீறி எப்படியும் வாழலாம் என்று வாழ நினைப்பவர்கள் தவறான முன் உதாரணங்கள் மூலம் சமுதாயத்தைப் பாழ்படுத்தி  விடுகின்றார்கள்.
ஒழுக்கமில்லாத கல்வி, செயல் யாவும்  பயனற்றவை. ஒழுக்கமற்ற எண்ணங்களினால் செய்யப்படும் சேவைகள் கூட  சாகாத சமுதாயத்திற்கு நலம் பயப்பதில்லை . ஒழுக்கம் இருந்தால் கல்வி என்பது தானாக க் கைகூடும் .உண்மையில் கல்வி கற்பது என்பது ஒழுக்கத்தின் ஒரு பகுதிதான்,சொல்லப்போனால் ஒழுக்கமே ஒரு கல்விதான். ஒழுக்கம் மீறுபவர்களே கல்லாதவர்கள்  ஆவர்.

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? -3

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?


ஒரு குழந்தை பெற்றோர்களின் அரவணைப்பில் வளரும் போது  அது தனக்கென ஒரு இலக்கை திட்டமிடும் திறமையைப்  பெற்றிருப்பதில்லை. தன் பிள்ளை எதிர்காலத்தில் என்னவாக வரவேண்டும் என்று திட்டமிட்டு   பெற்றோர்கள்  அதற்க்கேற்ப கட்டாயப்படுத்தாமல் வெகு இயல்பாக பிள்ளையே மனமுவந்து ஏற்றுக்கொள்ளுமாறு   ஊக்கப்படுத்தினால் அதுவே குழந்தைக்கு ஒரு ஊக்கக் காரணியாக அமைந்து இலக்கையை நோக்கிய பயணமாக அமையும். கட்டாயப்படுத்தினால் எதிர்மறையான விளைவுகளே ஏற்படும் . காரணத்தை புரியும்படி தக்க எடுத்துக்காட்டுகளுடன்  விளக்கிக் கூறும்போது குழந்தைகள் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தைப்  பெறுகின்றன.  பொதுவாக குழந்தைகள் பெற்றோர்கள் செய்யும் வேலைகளை அப்படியே செய்ய முயற்சிக்கும். பெற்றோர்கள் முன்மாதிரியாக இல்லாமல் குழந்தைகள் மீது திணிக்கப்படும் எந்த வேலையையும் விருப்பத்துடன் பின்பற்றப்படுவதில்லை. பெற்றோர்கள் படித்தால் பிள்ளைகளும் படிக்கும், செல் போனில் பேசினால் குழந்தைகளும் அப்படியே , டிவி பார்த்தல் குழந்தைகளும் டிவி பார்ப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளும் . பொதுவாகப்    பெற்றோர்கள் செய்யும் தவறுகளே குழந்தைகளுக்கு முதல் பாடமாக அமைந்துவிடுகின்றன. செய்முறையுடன் கற்றுக் கொள்ளும் இந்தப் பாடங்களை குழந்தைகள் மறப்பதேயில்லை,   குழந்தைகளின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு இது ஒரு முக்கியக் காரணமாக இருக்கின்றது என்பதைப் பெற்றோர்கள் மறந்துவிடக் கூடாது . குழந்தைகள் முதலில் தவறான பழக்கங்களை காரணமின்றிப்  பழகிக் கொள்ளும் பழக்கத்தால்  பிற்பாடு நல்ல பழக்கங்களை காரணத்தோடு கூட பழகிக் கொள்ள முன் வருவதில்லை .நல்ல பழக்கங்களைக் குழந்தைகள் அறிந்து கொள்வதும் அறிந்து கொண்டதைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதும்  தவறான பழக்கங்களைப் பின்பற்றுவதற்கு வெகு முன்பாகவே இருக்குமாறு கவனமாக பார்த்துக் கொள்வது இந்தப் பிரச்சனைக்கு ஒரு இயற்கையான தீர்வாகும் . தான் அடையவேண்டிய இலக்கு எது என்பதை ஒருவன் எந்த வயதிலும் ஏற்படுத்திக் கொள்ளலாம். அது இளம் வயதில் ஏற்படும் போது இலக்கை அடைவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் பிரகாசமாகவும் நிச்சியமாகவும்  இருக்கின்றன.   இலக்கை அறியாதவனும் , ஏற்படுத்திக்கொள்ளாதவனும் செய்யும் செயல்கள் எல்லாம்  சென்றடைய வேண்டிய இடத்தை அறியாதவன் செய்யும் நடைபயணம் போன்றவை. அவனால் தன்  விருப்பத்  துறையில் ஒரு காலகட்டத்திலும் முன்னேற்றம் காண முடிவதில்லை

Saturday, March 9, 2019

சிறந்த மாணவனாய் வளர்வது எப்படி ? - 2

சிறந்த மாணவனாய் வளர்வது எப்படி ? - 2


எண்ணங்களைத் தேர்வு செய்து ஏற்றுக்கொள்ளும் சுய முயற்சி எல்லோருக்கும் , எப்போதும் நேர்மையாகவும் உறுதியாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது . அப்போது வளர்ச்சிப் பாதையிலிருந்து சறுக்கி விழுந்து விடும் அல்லது திசை மாறிப் போகும் நிலை ஏற்படலாம் . இதற்குப் பல அக மற்றும் புறக்  காரணங்களைக் குறிப்பிடலாம். அவற்றை ஒருசேரப் புரிந்து கொண்டால்  அதனால் ஏற்படும் பாதிப்புக்களைத் தடுத்துக் கொண்டு சிக்கலிலிருந்து முழுமையாக விடுபடக்கூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்திக்  கொள்ள முடியும் .
நூல்கள் பலவற்றைக் கற்றாலும் அக் கல்வி ஒருவர்க்கு உரிமையுடைய அறிவாகிவிடாது , கற்றதை உள்வாங்கி கொண்டு வாழ்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளும் அனுபவத்தைப்  பெறும்போது உடன்வரும் அறிவே ஒருவருடைய உண்மையான அறிவாகின்றது .
" நுண்ணிய நூற்பல கற்பினும் மற்றுந்தன்                                                    உண்மை அறிவே மிகும் "
என்ற குறள் மூலம் வள்ளுவர் இக் கருத்தினை மிக அழகாக எடுத்துச் சொல்லியிருக்கின்றார். கற்றவர்கள் கூட தவறான பாதையில் நடக்கும் நிலைக்கு இதுவே அடைப்படையாகின்றது. "பல கற்றும் கல்லார் அறிவில்லாதார்"   என்று இவர்களை அன்றைக்கே வள்ளுவர் இனங்காட்டியுள்ளார்.    தவறான இலக்குகளை நோக்கிப் பயணிக்கத் தூண்டும் எண்ணங்களின் ஆக்கிரமிப்பை அனுமதிக்கும் மனம் , சரியான இலக்குகளைத் தேர்வு செய்து அதை எட்டுவதற்கான முயற்சிகளைத் தடுத்து விடுகின்றது. சுய நலமிக்க எண்ணங்கள் சமுதாய நலத்தைப் பாதுகாப்பதில்லை .இந்த சுயநலமிக்க எண்ணங்களை பெரும்பாலும் சமுத்தியதிலிருந்தே ஒவ்வொருவரும் கற்றுக்  கொள்கின்றார்கள்.  தனி மனித ஒழுக்கமும், சமுதாயத்தின் ஒழுக்கமும் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்புடையது . ஒரு சராசரி மனிதனை அடையாளம் காட்டுவது அவன் வாழும் சமுதாயமே . ஒரு நல்ல சமுதாயத்தில் வாழும் மக்கள் என்றைக்கும் நல்லோர்களாகவே இருப்பார்கள் .அது  வளரும் தீய எண்ணங்களை யாரும் அறிவதற்கு முன்பாகவே  களை எடுத்து அழித்து விடுகின்றது.அப்படிப்பட்ட சமுதாயம் தனி மனிதர்களின் வாழ்க்கைக்கு வலிமையான பாதுகாப்பாய் இருக்கும்.  ஒரு தீய சமுதாயத்தில் வாழும் மக்கள் நல்ல புறத்தோற்றத்துடன் தீய அகத்தோற்றம் கொண்டிருப்பார்கள்.அங்கு தீய எண்ணங்கள் கட்டுப்பாடின்றி வளர்ந்து வருவதால் தனிமனிதர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகின்றது. எனவே சாகாத சமுதாயத்தில் நாமும் நமக்குப்  பிறகு நம் சந்ததியினரும் பாதுகாப்பாய் வாழவேண்டுமானால் சமுதாய நலங்காகும் எண்ணங்களை வளப்படுத்திக் கொள்ளவேண்டும்.  இதில் நாம்  செய்யும் பிழைகள் மீட்டுருவாக்கம் செய்ய முடியாத இழப்புக்களை ஏற்படுத்தும்   

வாழ்க்கையின் பயனுறுதிறன்

வாழ்க்கையின் பயனுறுதிறன்
உங்கள் வாழ்க்கையின் பயனுறு திறனை என்றைக்காவது கணக்கிட்டுப் பார்த்தீர்களா ? கணக்கிட்டு அறிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாம் நம்முடைய வாழ்க்கையின் பயனுறு திறனை அதிகரித்துக் கொள்ளும் ஆர்வத்தில் சில முயற்சிகளையாவது மேற்கொள்வோம். ஒருவருடைய  வாழ்க்கையின் பயனுறுதிறன் என்பது அவர் வாழும் சமுதாயத்திற்கும் , உலக நலனுக்கும் பயன்தரும் காலத்திற்கும் ,வாழ் நாளுக்கும் உள்ள தகவாகும்  , புகழ் பெற்ற எல்லோரின் பயனுறுதிறன் சராசரி மதிப்பை விட அதிகமாக இருப்பதைக் காண முடிகின்றது. அதாவது ஒரு  மனிதன் இறந்த பின்பும் அழியாப் புகழுடையவனாக இருக்க விரும்பினால் அவன் தன்னுடைய பயனுறுதிறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அதைத்தவிர மாற்று வழிகள் ஏதுமில்லை .
 80 ஆண்டுகள் வாழும் ஒரு சராசரி மனிதனின் பயனுறுதிறனை கணக்கிடுவோம். '
குழந்தைப் பருவத்தில் 5 ஆண்டுகளும் , முதுமைப் பருவத்தில் 10 ஆண்டுகளும்  அவர்களுக்கு அவர்களே உதவி செய்து கொள்ள முடியாததால் பிறர் தான் உதவ வேண்டும் .கல்வி கற்கும் காலத்தில் குறைந்தது 15 ஆண்டுகள்  சமுதாயத்திற்கு சேவை செய்வதற்காக திறமைகளை வளர்த்துக் கொள்வது கழிந்து விடுகின்றது . திருமணம் , திருவிழாக்கள் , வீட்டு விசேடங்கள்  .உல்லாசப் பயணங்கள், உடல் நல க் குறைவு என 10 ஆண்டுகள் கழிந்து விடுகின்றன .சமுதாயத் சிந்தனையை மேற்கொள்வதற்கு கிடைக்கும் காலம்  40 ஆண்டுகள் மட்டுமே.  அதாவது 40 x 365 x 24  மணிகள் .
இதில் ஒவ்வொருநாளும் தூக்கத்திற்கு 8 மணி நேரமும் , காலைக் கடன் 2 மணி நேரமும். உணவு சாப்பிடுதல் , காபி ,தேநீர் அருந்துதல், 2 மணி நேரமும் ஆடை அலகாரம் 1 மணி நேரமும் , தொலைக்க காட்சி, செல் போன் 3 மணி நேரமும் , பணி நேரத்தில் அரட்டை  2 மணி நேரமும் , கோயில் ,நடைப் பயிற்சி , விளையாட்டு  ,வெட்டிப் பொழுது 2 மணி நேரமும் என மொத்தம் 20 மணி நேரத்தை செலவழிக்கத்  தயக்க காட்டுவதில்லை. சமுதாயத்திற்குப் பயனுள்ளவாறு  செலவழிக்கக் கிடைக்குக் நேரம் 40 x 365 x 4. ஊழல் ,லஞ்சம் ,காலங் கடத்துதல் போன்ற காரணங்களினால் பலர் செய்யும் சமுதாயப் பணிகளைக் கூட மக்களுக்குப் பயனுள்ளவாறு  செய்வதில்லை . இதனால் பயனுறு காலம் இன்னும் குறையவே இருக்கும் எனலாம் .இக்கணக்கீட்டின்படி 80 ஆண்டுகாலம் வாழும் ஒருவரின் பயனுறுதிறன் [ (40 x 365 x 4)/ (80 x 365 x 24)] x 100 = 8.33 % பயனுறுதிறனை அதிகரிக்க கூடுதலாகத் தூங்கும் நேரத்தையும், ஒவ்வொருநாளும் வீணாகக் கழிக்கும் நேரத்தையும் குறைத்துக் கொள்வார்கள் . கிடைக்கும் நேரத்தை எவ்வளவு பயனுள்ளவாறு பயன்படுத்திக் கொள்கின்றோம் என்பதைப் பொறுத்தே  ஒருவருடைய வாழ்க்கையின் பயனுறுதிறன் அமையும். 

Friday, March 8, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 1

கல்வி என்பது ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கைக்கு அவர்களே எழுதிக் கொள்ளும் முன்னுரை, வாழ்க்கைக்காகச் சேமிக்கும் மூலதனம் . கல்வி பள்ளிக்கூடத்தில் பெறுவது மட்டுமில்லை , அதை நூல்களைப் படித்தும், அனுபவத்தில் வழியாகவும், சான்றோர்கள் சொல் கேட்டும்  பெறமுடியும்.வாழ்க்கையில் எல்லோரும் சமமான திறமைசாலிகளாக இல்லாதிருப்பதற்கு  படிக்கும் போது கற்றலில் ஏற்படும் குறைபாடுகளே காரணமாக இருக்கின்றது.
ஒரு வகுப்பில் படிக்கும் மாணவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, சிலர் நன்றாகப் படிப்பார்கள், சிலர் அப்படி இல்லை. சிலர்  தேர்வுகளில் 100 க்கு 100  வாங்குவார்கள்  சிலர் குறைவான மதிப்பெண் வாங்குவார்கள், அதில் ஜீரோ வாங்குபவர்கள் கூட இருப்பார்கள்.    இதற்கான காரணத்தை  நாம் சுயமாகச் சிந்தித்து அறிய வேண்டும்.. இல்லாவிட்டால் மாணவர்கள் தங்கள்  வாழ்க்கையைத்  தாங்களே பாழாக்கிவிடக் காரணமாகி விடுவார்கள் .
பிறக்கும் போது எல்லோரும் சமம் . யாரும் பட்டாடையோடும் , பருத்தி ஆடையோடும் விதவிதமான  ஆபரணங்களோடும்  பிறப்பதில்லை .எல்லோருக்கும் அதே இரண்டு கைகள், இரண்டு கால்கள் ,இரண்டு கண்கள் ,காதுகள் , ஒரு மூளை  ஒரு இதயம்  தான் . இவை அறிவை வளர்த்துக் கொள்ளத் தேவையான உணர் கருவிகள் மட்டுமல்ல , வளர்ந்த பின்  வாழ்க்கையை நெறிப்படுத்திக்  கொள்ள பயன்தரும் உபகரணங்களுமாகும், அப்படியென்றால் மனிதர்களுக்குள் வேறுபாடு எப்படி  ,எங்கிருந்து வந்தது ?
வளரும் போது நாம் தத்தெடுத்துக் கொள்ளும் எண்ணங்களே  நம் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன .ஆம், நம் எண்ணங்களே நம் வாழ்க்கையாகிவிடுகின்றது.  நம் எண்ணங்களே உறவுகளைத் தருகின்றன , நண்பர்களைத் தருகின்றன ,முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கின்றன , மகிழ்ச்சியையும், வெற்றியையும் தருகின்றன. நல்லெண்ணங்கள் நல்ல வாழ்க்கைக்கும் , தீய எண்ணங்கள் தீய வாழ்க்கைக்கும்  அடிப்படையாகின்றன. 
ஒருவருடைய வாழ்க்கை முழுவதையும் தீர்மானிக்கின்ற அவருடைய எண்ணங்களின் பதிவுகள் எங்கிருந்து ஆரம்பிக்கின்றன.பெற்றோர்களால் உருவாகும் குழந்தைகளுக்கு பெற்றோர்களே முதல் நிலை வழிகாட்டிகளாக இருக்கின்றார்கள் .எண்ணப் பதிவேட்டில் முதலில் எழுதுவது பெற்றோர்களே.சுதந்திரம்,கண்டிப்பு,ஆளுமை,சுறுசுறுப்பு, சோம்பல் .புத்தகம் வாசித்தல், படிப்பில் ஆர்வம்,படைப்பாற்றல்  இப்படி எல்லாவற்றிற்கும் மூளையில் எண்ணங்களின் பதிவுகளுக்கு  பிள்ளையார் சுழி   போடுவது பெற்றோர்களே. உணர்கருவிகளைப் பயன்படுத்தி எண்ணங்களை வரவு  செய்ய  முடியும் என்பதைக் கற்றுக்கொண்ட பின் ஒவொருவரும் பிறர் உதவியின்றி சுயமாகவே எண்ணங்களை புதுப்பித்துக் கொள்கின்றார்கள். பெற்றோர்களால் எழுதப்பட்ட எண்ணங்கள் திருத்தப்படுவது இந்த கால கட்டத்தில் தான்.  குழந்தைகள்  தானாக எந்த வழிகாட்டலும் இன்றி எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவதற்கு முன்னரே பெற்றோர்கள்  நல்ல எண்ணங்களை அவர்கள் எண்ணத்தில்  விதைத்து விடவேண்டும் .இதில் ஏற்படும் கால தாமதத்தால்  பாதிப்புக்கள்  ஏற்படும்  வாய்ப்புக்கள் அதிகம்.  எண்ணங்கள் திருத்தப்படும் போது மனம் எதைத் தேர்வு செய்கின்றது என்பதை பொறுத்து   திசை  மாறிப் போகும் சூழ்நிலை ஏற்படுகின்றன  கணப்பொழுது இன்பங்களினால் கிடைக்கும் மயக்கத்திற்கு அடிமையாகி விடும் போது எண்ணங்கள் எல்லாம் தீயனவாகி விடுகின்றன.  இந்த நிலைக்கு பெரிதும் காரணமாக இருப்பது தீய நண்பர்களின் சகவாசமே . என்றாலும் அவரவர் மனமே இதற்கு அடைப்படைக் காரணமாகின்றது .ஏனெனில் ஒன்றை ஏற்றுக்கொள்வதும்  ஏற்றுக்கொள்ளாதிருப்பதும் அவரவர்  மனமே. இதில் ஏற்படும் வேறுபாடுகள் காரணமாக மனம் ஒருவருக்கு நல்ல நண்பனாகவும் வேறு சிலருக்கும் உள் எதிரியாகவும் அமைந்து விடுகின்றது , ஒரு மாணவன் சிறந்த  மாணவனாக இருக்க வேண்டுமானால் அவன் மனதால் ஆளப்படுபவனாக  இருப்பதை விட மனதை ஆள்பவனாக இருக்க வேண்டியது  அவசியம். மனதை ஆள்பவன் மட்டுமே வாழ்க்கையில்  அடைய நினைத்த உச்சத்தை எட்டுகின்றான். உலகை ஆளும் தகுதியைப் பெறுகின்றான்.

Friday, March 1, 2019

creative thoughts

பூட்டும் சாவியும்




 கடல் இருந்தால் அலையிருக்கும்
கற்பனை இருந்தால் கலை பிறக்கும்
மலர் இருந்தால் மணமிருக்கும்
மனமிருந்தால் வழி கிடைக்கும்
கனி இருந்தால் சுவையிருக்கும்
கேள்வி  என்றால் பதிலிருக்கும்
இருள் இருந்தால் ஒளி இருக்கும் 
இசைக் கருவி இருந்தால் நாதம் பிறக்கும்
குழந்தையாயிருந்தால்  மழலை இருக்கும்
இளைஞனாயிருந்தால் ஆக்கம்  இருக்கும்
பெண்ணாயிருந்தால் சமுதாயம் பிழைக்கும்
முதியவராய் இருந்தால் அனுபவம்  இருக்கும்
நாம் காணும் உலகில் எதுவுமே தனிமையில் இல்லை 
தனிமை என்று நினைத்தால் அது ஒரு தோற்றப் பிழையே
பூட்டு இருந்தால் சாவி இருக்கும்
ஒவ்வொரு பூட்டும் அதற்குரிய சாவியோடுதான் உருவாகின்றன. அந்தச் சாவியைக் கொண்டு பூட்டை ஒவ்வொருமுறையும் எளிதாகத் திறந்து விடுகின்றோம் . பூட்டு இல்லாமல் சாவி மட்டும்  உருவாக்கப் படுவது இன்றைக்கு ஏற்பட்டாலும் சாவியில்லாமல் பூட்டு ஒருநாளும் உற்பத்தி செய்யப்படுவதில்லை . இறைவன் ஓவ்வொருவருக்கும் பல  பிரச்சனைகளை  தந்துள்ளான்  என்றாலும் அதைத் தீர்வு செய்வதற்குரிய சாவிகளைத் தராமல் இல்லை.     நம் பிரச்சனைகளைத் தீர்வு செய்யக்கூடிய திறமை  நம் உடல் உறுப்புக்களுக்கு உண்டு . எந்தப் பிரச்சனையையும் சரியான சிந்தனையாலும் செயலாலும் தீர்வு செய்ய ஒவ்வொருவருக்கும் எல்லையற்றுச் சிந்திக்க மனமும் , அதைச் செயல் படுத்த உடல் உறுப்புக்களையும் பிறக்கும் போதே தந்துள்ளான். அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாதவர்களே பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கிறாரார்கள்.
 பல சாவிகள் திறக்கும் ஒரு பூட்டை  விட பல பூட்டுக்களைத் திறக்கும் ஒரு சாவி மேலானது. அது போல ஒரு பிரச்சனைக்குப் பல  தீர்வுகள் என்பதை விட பல  பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு என்பது பயனுள்ளது . பல தீர்வுகள் இருப்பதாகச் சொன்னால் அது ஒரு சிலருக்கு அனுகூலமாகவும் வேறு சிலருக்கு பயனற்றதாகவும் இருப்பதால் ஏற்றுக்கொள்ளுவதில் சிக்கல் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகின்றது,
பூட்டு எங்கிருந்தாலும் சாவி எப்போதும் பையில் அல்லது கையில்  இருக்க வேண்டும் என்பதற்காக பூட்டு சிறியதாக, பெரியதாக  எப்படி இருந்தாலும் சாவி எப்போதும் பூட்டை விட சிறியதாகவே இருக்கும், ஒருவருடைய வீட்டிலுள்ள பூட்டுக்கள் அனைத்திற்குமுரிய சாவிகள் அவருடைய கையில் இருப்பதைப் போல அவருடைய பிரச்சனைகள் அனைத்திற்கும் உரிய தீர்வுகள் அவருடைய சிந்தனையில் இருக்கின்றன. சாவியைத்  தொலைத்தவர்கள் மாற்றுச் சாவி தேடுவதைப் போல  சுய சிந்தனையற்றவர்களே தீர்வை வெளியில் தேடுவார்கள்.
சாவி தங்கமாக இருந்தாலும், இரும்பாக இருந்தாலும் பூட்டை திறக்கக் கூடியதாக இருக்க வேண்டும்  .