Sunday, March 24, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?- 9

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?
 எதைச் செய்தாலும் அதை அதற்காக மட்டுமே செய்ய வேண்டும்.எதையும்   அதனால் கிடைக்கும் பலன்களுக்காகச் செய்யக் கூடாது  என்பது இயற்கையின் அறிவுரை . இயற்கையைப் புறக்கணிக்கப் புறக்கணிக்க நாம் மிகுந்த இன்னலுக்கு உள்ளாவோம் என்பதை வெகு சிலரே உணர்ந்து  செயல்படுகிறார்கள் .பிற்பலன் கருதிச் செய்யும் போது சுய நலம் மிகுந்து குறுக்கு வழியில்  முந்திச் செல்லும்  கோணப்புத்தியும் , திறமையின்மையும்  தூண்டப்பட்டு இலக்கை நோக்கிச் செல்லும்  திக்கை திசை திருப்பிவிடுகின்றது . கல்வியை கல்விக்காக மட்டுமே கற்க வேண்டுமெனில், மாணவர்கள் மாணவர்களாகவே இருக்கவேண்டும். வகுப்பறையைத் தூய்மையாக  வைத்திருக்க உதவ வேண்டும். வகுப்பறையில் தோன்றாத தூய்மை வாழ்க்கையின் எந்த காலகட்டத்திலும் வருவதில்லை. தூய்மையின்மை பணி செய்வதற்கு ஓர் அகத் தடையாக இருப்பதால் சுய முன்னேற்றம் பின்தங்கி விடுகின்றது .  சுகாதாரமில்லாத  சுற்றுப்புறம் உடல்நலத்திற்கும் ஊறு விளைவிக்கின்றது . உடலையும் உள்ளத்தையும் ஒரு சேரச்  சோர்வடையச் செய்யும்    வலிமை இந்த தூய்மையின்மைக்கு  இருப்பதால் , ஏற்படும் இழப்பு நீண்டகாலப் போக்கில் அதிகரித்து நமக்குத் தெரியாமலேயே  நிரந்தரமான  இழப்புக்களை ஏற்படுத்தி விடுகின்றது .
தூய்மை என்பது புறத் தூய்மை மட்டுமல்ல அகத் தூய்மையும் தான்.அகமும் புறமும் நலமாக இருந்தால் தான் உடலும் உள்ளமும் நலமாக இருந்து ஒத்தியங்கும் வலிமையைப் பெறும்.
சத்தம் போட்டு மற்றவர்களுக்கு இடையூறை ஏற்படுத்தாமல் ஆசிரியர் வரும் வரை  அமைதியாக இருக்க வேண்டும். பொதுவாக இரைச்சல் மனம் ஒருமுகப்படுவதை சீரழித்து விடுகின்றது . இரைச்சலை விட அமைதியாக இருக்கும் போது மனம் உற்ச்சாகமாக இருப்பதால்  சிந்தனை செய்யும் ஆற்றலும் , வேலை செய்யும் ஆற்றலும் பல மடங்கு அதிகமாக இருக்கின்றது. வகுப்பறையில் சத்தம் போடுவது, தேவையில்லாமல் அரட்டை அடிப்பது என்பதெல்லாம் ஆற்றலை வீணாகாச் செலவழிப்பதுதான் . அதனால் பின்னர் முக்கியமான செயலைச் செய்யத் தேவையான ஆற்றல் போதுமான அளவில் கிடைக்காமல் போய் விடுகின்றது. இரைச்சலால் இயல்பாக இருக்கும் பயனுறுதிறனையும் இழந்துவிடக்கூடாது பிற மாணவர்களுடன் பாட சம்பந்தமாக கலந்துரையாடல் செய்யலாம். கலந்துரையாடல் என்பது கூட்டு முயற்சி. ஒவ்வொருவரும்  எல்லாவற்றையும் தெரிந்திருக்க முடியாது. ஆனால் எல்லோரும் எல்லாவற்றையும் செய்யமுடியும்.இதனால் ஆசிரியரின் உதவியில்லாமலேயே பல விஷயங்களைக் கூட்டு முயற்சியால் கற்றுக் கொள்ள முடியும்.  இரவில் தூங்குவதோடு ஓய்வு முடிந்து விட்டது. பகலில் கூடுதல் உழைப்பின்றி கூடுதல் ஓய்வு எடுத்துக் கொள்வது என்பது  பயனுறு திறனை இழப்பதாகும். வகுப்பறையில்  கிடைக்கும் ஓய்வைப் பயனுள்ளவாறு கழிக்கப் பழக வேண்டும்.  சும்மா இருப்பது சோம்பேறித்தனத்தின் செயல் விளக்கம் . 

No comments:

Post a Comment