Friday, March 22, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 7

சிறந்த மாணவனாக வளர்வது  எப்படி  ?
மாணவர்களின் நல்லொழுக்கத்திற்கு முதல் பாடமாக  இருப்பது அவரவர் பெற்றோர்களே .முற்றும் கோணலுக்கு முதல் கோணல் இல்லாதிருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டிய கட்டாயப் பொறுப்பு  ஒவ்வொரு  பெற்றோருக்கும் இருக்கின்றது . தவறான பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொள்ளும் போது சும்மா இருந்து விட்டு  , பிற்காலத்தில்  தன் பிள்ளை மிகச் சிறந்த மேதையாக வரவேண்டும் என்று ஒரு பெற்றோர் எதிர்பார்த்தால் அது பெரும்பாலும் ஏமாற்றமாகவே முடியும் . பெற்றோர்களின் பாதுகாப்பில் வளரும் ஒரு குழந்தை  பிற்காலத்தில் ஒரு சிறந்த மாணவனாகத் திகழ்ந்து பின்னர் சமுதாயத்தில் உயர்ந்த மனிதனாக வாழ,அடிப்படை ஆதாரமான பல நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்றி ஒழுக கற்றுக்  கொடுக்க வேண்டும்.அதைச் செய்யத் தவறி மேற்கொள்ளும் ஈடுபாட்டில் காட்டும்  ஏற்றத் தாழ்வுகளே ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்களின் சமச்சீரின்மைக்குக் காரணமாகின்றது . ஒரு பெற்றோரின் கடமை குடும்பத்திற்காகச்  சம்பாதிப்பது மட்டுமில்லை. குழந்தை  வளர்ப்பில் கொள்ளும் ஈடுபாடுமாகும் .அதற்காக ஒவ்வொரு நாளும் கொஞ்சம் நேரம் ஒதுக்கவேண்டும் .
ஒரு குழந்தை பிற்காலத்தில் சிறந்த மாணவனாக வளர  சில முக்கியமான பழக்க வழக்கங்களை பின்பற்றி ஒழுக வேண்டும். அவை பின்வருமாறு .
1 . அதிகாலையில் எழுந்து அன்றைய தின வேலைகளை முன்திட்டமிட்டு நாளை நாளை என்று தள்ளிப் போடாமல் செய்து முடிக்கும் இயல்பைத் தனதாக்கிக் கொள்ளவேண்டும் .
 ஞானிகள் அதிகாலையில் 3 மணிக்கெல்லாம் எழுந்து பணியாற்றத் தொடங்கிவிடுவார்கள். அதிகாலையில் உடலும் உள்ளமும் இறுக்கமின்றி இருப்பதால் ,செய்யும் வேலைகளில் முழுக் கவனம்  செலுத்தி முழுப் பயனுறு திறத்தோடு செய்து முடிக்க அவர்களால் முடிகின்றது. மனதை ஒருமுகப்படுத்திச் செயல்படுவதற்கு உடலின் ஒத்துழைப்பு இந்த அதிகாலை வேளையில் அதிகம் கிடைக்கின்றது என்பதை இவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்கள் .
துறவிகள் 4 மணிக்கெல்லாம் எழுந்து ஆன்மிகப் பணிகளை செய்யத் தொடங்குவார்கள் . ஒவ்வொரு  நாளும் பலதரப்பட்ட  பொது மற்றும் சமுதாய ப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு இருக்கின்றது. எச் செயலையும் சிந்தனைச் சிதறலின்றி ,சரியாக முன்கூட்டியே சுயமாக  முடிவெடுத்துச் செய்து முடிக்க அதிகாலை இவர்களுக்கு அனுகூலமாக இருக்கின்றது .
சான்றோர்களும் , மேதைகளும் 5 மணிக்கெல்லாம் எழுந்து  பணி மேற்கொள்வார்கள் .அக மற்றும் புற இடையூறுகளின்றி   பணிக்குத் தேவையான செய்திகளைத் திரட்டுவதற்கும், முன் திட்டமிடுவதற்கும் , முன் ஏற்பாடு செய்வதற்கும்  இந்த முற்பொழுது முழு இணக்கமாக இருக்கின்றது .
மாணவர்கள் சிறந்த மாணவனாக வளர விரும்பினால்  குறைந்தது 6 மணிக்கெல்லாம் விழித்த தெழுவதை பழக்கமாக க்  கொள்ள வேண்டும் . வீட்டுப் பாடங்களைச் செய்து முடிக்கவும், நேற்று நடத்திய பாடங்களை நினைவுபடுத்திப் புரிந்து கொள்ளவும் ,அன்று கற்க வேண்டிய புதிய பாடங்களை பற்றித் தெரிந்து கொள்ளவும் அமைதியான அந்த அதிகாலைப் பொழுது பயனுள்ளதாக இருக்கின்றது .மனம் அலை பாய்வதில்லை . கற்கும் கல்வியைத் தெரிந்து கொள்வதை விட, அறிந்து கொள்வதை  விட புரிந்து கொள்வதுதான் முக்கியம். புரிந்து கொண்டு தனதுரிமையாக்கிக் கொண்ட கல்வி மட்டுமே ஒருவரின் உள்ளுறை அகவாற்றலாகப்  பயன்தரத்தக்கது. அகவாற்றலின் அளவு அதிகரிக்க ஒரு மாணவன் திறமையானவனாகின்றான். ஒரு மாணவனின் மதிப்பு என்பது இந்த அகவாற்றலின் அளவைப் பொறுத்து அமைகின்றது.
7 மணிக்கு மேல் உறங்கி எழுபவர்கள் சோம்பேறிகள் . இந்த சோம்பேறித்தனம் வாழ்க்கை  முழுதும் பின் தொடர்வதால் வாழ்வின் பயனுறுதிறனை வெகுவாக இழந்து விடுகின்றார்கள் .

No comments:

Post a Comment