Thursday, March 28, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி - 15

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி
கல்வி கற்பது சுய முன்னேற்றத்திற்குத்தான் . அது பெற்றோர்களால், ஆசிரியர்களாலும் காட்டாயப்படுத்தப்பட்டாலும்  அதை ஒரு தண்டனையாக நினைக்கவே கூடாது .கல்வி கற்க மறுப்புக் காட்டப்படும்போதெல்லாம்  அது தன்மீது திணிக்கப்படுவதாக  குழந்தைகள் நினைக்கின்றார்கள்,தன் சுதந்திரம் பறிக்கப்பட்டு விருப்பம்போல செயல்படுவது மறுக்கப்படுகின்றது என்று மாணவர்கள்  நினைக்கின்றார்கள். அதனால் பெரும்பாலான மாணவர்கள் இஷ்டப்பட்டு படிப்பதை விட்டுவிட்டு கஷ்டப்பட்டு படிக்கின்றார்கள். இது புரிதலின் பயனுறுதிறனை  பெரிதும் மட்டுப்படுத்தி விடுகின்றது. இஷ்டப்பட்டு செய்யப்படும் எந்த வேலையும் எளிதாகவும் விரைவாகவும்  முழுமையாகவும் ,நிறைவாகவும் செய்து முடிக்கப்படும் .எண்ணத்தையும் செயலையும் ஒருங்கிணைக்க  மனப்பூர்வமான இந்த  இஷ்டத்தால் மட்டுமே முடியும். தீய செயலாக இருந்தாலும், நல்ல செயலாக இருந்தாலும் எது இஷ்டப்பட்டு செய்யப்படுகிறதோ அது மட்டுமே செயல்களில் தங்கிவிடுகிறது. உண்மையான காரணங்களை அறிந்து கொண்டு  பின்விளைவுகளையும் புரிந்து கொண்டால் எதை  இஷடப்பட்டு கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் ஒரு தடுமாற்றமே ஏற்படுவதில்லை
படிப்பது என்பது கடின உடல் உழைப்பில்லை. ஒரே இடத்தில் இருந்து கொண்டே படிக்க முடியும். அது தேவையான விவரங்களை வாழ்க்கைப் பயன் கருதி  மூளையில் பதிவு செய்வதாகும் மனம் பூரண ஒத்துழைப்புக் கொடுத்தால் இடையூறு இன்றி  பின்னால் நினைவுபடுத்திக் கொள்வதற்கு எளிதாக அழுத்தம் திருத்தமாக  பதிவு செய்து கொள்ள முடிகின்றது .மூளையில் அழிந்து போகாமல்  நிரந்தரமாகத் தங்கி  இருக்கும் பதிவுகள் மட்டுமே வாழ்க்கையை வழிநடத்திச் செல்ல துணை செய்கின்றன. ஒருவருடைய எதிர்கால வாழ்க்கையைத்  தீர்மானிக்கின்றன என்பதால் , தேவையான பதிவுகளை ச் செய்யத் தவறி விட்டாலோ  அல்லது பதிவுகளை இழந்து விட்டாலோ .வாழ்க்கையின் பிற்பகுதி தடுமாற்றத்திற்கு ஆளாகும் நிலையே ஏற்படும்       
ஒரே சமயத்தில் பல பதிவுகளைச் செய்தாலும், அல்லது பதிவுகளை ஒரேசமயத்தில் உள்ளீடு மற்றும் வெளியீடு செய்தாலும் பதிவுகள் அழுத்தமாக எழுதப்படுவதில்லை. .விரைவில் அழிந்து போவதற்கு நாம் மேற்கொள்ளும் இந்த அவசரமே காரணமாகின்றது .பதிவுகள் அழிவது என்பது மறதியாகும். எனவே நினைவாற்றலை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமானால் , பதிவுகளை மேற்கொள்ளும் போது இடையூறுகள் இன்றிச் செய்யவேண்டும் . தாறுமாறாக பதிவு செய்யப்பட்டால் தேவையான போது அதைத் தேடிக் கண்டுபிடித்து நினைவிற்கு கொண்டுவருவதற்கு நெடு நேரமாகும். முதலில் தேவையான வற்றை மட்டும் பதிவு செய்யுங்கள். தேவையில்லாத பதிவுகளால் நிரப்பி மூளையை  ஒரு குப்பைத் தொட்டியாக்கி விடாதீர்கள். தேவையற்ற பதிவுகள் அதிக இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தால் ,தேவையான பதிவுகளைச் செய்ய தேவையான இடமில்லாமல் போகும் . தீயனவற்றை மறப்பதற்கு இந்த மறதி நன்மை செய்கின்றது என்றாலும் . கூடவே நல்லனவற்றையும் மறந்துவிட இதே மறதியே காரணமாகிவிடுகிறது .இதற்குக் காரணம் தீயனவற்றைப் பற்றி சிந்திப்பதற்கும் ,நினைப்பதற்கும் எடுத்துக் கொள்ளும் காலம் , இஷ்டம் , நல்லனவற்றிற்கு இல்லாதிருப்பதே .

No comments:

Post a Comment