Monday, March 11, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? -4

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?
சமுதாய மக்களுக்கு ஒழுக்கம் மிக மிக முக்கியம்.. ஒழுக்கமற்ற சமுதாயம் பாதுகாப்பற்றது என்பதால் விரைவில்  சீரழிந்து  போகும் .தனிமனித ஒழுக்கமே காலப்போக்கில் சமுதாய ஒழுக்கமாக நிலைப்படுகின்றது. அப்படி நிலைப்படும் ஒழுக்கங்களே தனி மனிதர்களுக்கு வழிகாட்டியாக அமைகின்றது.  மக்கள் வருவார்கள் போவார்கள். வரும் போது ஒன்றையும் கொண்டு வருவதில்லை போகும் போது எதையும் கொண்டு போவதில்லை . ஆனால் மக்களுடைய  சுய எண்ணங்களினால் விளைந்த செயல்கள் மட்டும்  சமுதாயத்தில் முன்மாதிரியாகத்  தங்கிவிடுகின்றன.  இது சமுதாயத்தில் புரையோடி  தொடர்ந்து அதிகரித்து வரும் ஒரு தாக்கத்தை  ஏற்படுத்திவிடுகிறது   மக்களால் ஆன சமுதாயம் உலகம் உள்ளளவும் இருக்கும் என்பதால் அதைச் சாகாத சமுதாயம் என்பர். இந்தச் சாகாத சமுதாயத்தில் முன்னோர்களின் நல்லெண்ணங்கள் நேர்மறையான வளர்ச்சிக்கும் , தீய எண்ணங்கள் எதிர்மறையான வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருக்கின்றன. அதனால் சாகாத சமுதாயத்தின் கண்ணோட்டத்தில் வருங்கால சந்ததியினருக்காக நம் முன்னோர்கள் இப்படித்தான் வாழ வேண்டும்  என்று வாழ்வியல் ஒழுங்கங்களுக்கு ஒரு வரையறையை  ஏற்படுத்தியிருக்கிறார்கள் .இந்த நெறிமுறைகள் சமுதாய நன்மக்களுக்கு பாதுகாப்பானது காலத்திற்கு   ஏற்ப  இதில்  சிறிய  அளவிலான  மாற்றங்களை வரம்புகளுக்கு உட்பட்டு அனுமதித்தாலும் சமுதாயத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்ற மாற்றங்களை அனுமதிப்பதில்லை .சுய நலத்தின் காரணமாக  எல்லை மீறி எப்படியும் வாழலாம் என்று வாழ நினைப்பவர்கள் தவறான முன் உதாரணங்கள் மூலம் சமுதாயத்தைப் பாழ்படுத்தி  விடுகின்றார்கள்.
ஒழுக்கமில்லாத கல்வி, செயல் யாவும்  பயனற்றவை. ஒழுக்கமற்ற எண்ணங்களினால் செய்யப்படும் சேவைகள் கூட  சாகாத சமுதாயத்திற்கு நலம் பயப்பதில்லை . ஒழுக்கம் இருந்தால் கல்வி என்பது தானாக க் கைகூடும் .உண்மையில் கல்வி கற்பது என்பது ஒழுக்கத்தின் ஒரு பகுதிதான்,சொல்லப்போனால் ஒழுக்கமே ஒரு கல்விதான். ஒழுக்கம் மீறுபவர்களே கல்லாதவர்கள்  ஆவர்.

No comments:

Post a Comment