Saturday, August 21, 2010

Arika iyarpiyal

இன்றைய உலகம் பெரிதும் மாறிப் போயிருக்கின்றது என்றால் அதற்குக் காரணம் வளர்ந்து வரும் அறிவியல் தான்.நிர்வாகம்,பொருள் உற்பத்தி ,மருத்துவம் ,விவசாயம் கட்டுமானம் ,போக்கு
வரத்து ,பொழுது போக்கு என எத்துறையை எடுத்துக்கொண்டாலும்
அதற்கும் அறிவியலுக்கும் நெருக்கமான தொடர்பிருப்பதால்
அறிவியலைப் புறக்கணித்துவிட்டு எந்த நாடும் முன்னேறிவிட
முடியாது .அறிவியல் என்பது ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்ப
வளர்ச்சிக்கும் ஆதாரமானது.இந்த அறிவியலை,அறிவியலுக்காகப்
படிப்போர் இன்றைக்கு இளைய தலைமுறையினரிடையே அருகிக்
கொண்டே வருகின்றார்கள் . இதற்குக் காரணம் அலைபாயும்
எண்ணங்களைத் தடுமாறச் செய்து, செல்லும் திசையைத் திருப்பி விடும் காரணிகள் சமுதாயத்தில் பெருகி வருவதுதான்.எண்ணங்கள்
தடுமாறுவதற்கு முன்னரே குறிக்கோளில் மனதை நிலைப்படுத்தி
விட்டால் மறைவாய்,மௌனமாய்ப் பெருகும் தவறான போக்குகளை மட்டுப் படுத்திவிட முடியும் .இதையும் இளம்வயதிலிருந்தே தொடங்கும் போது விளையும் பிற்பயன் முழு அளவினதாக இருக்கும் .அறிவியலை அறிவியலுக்காகப் படிக்கும் போது ,அதை முழுமையாகப் புரிந்துகொள்வது என்பது இயலுவதாகின்றது. கதை படிப்பது போலில்லை அறிவியலைக்
கற்பது. அதில் பல துறை சார்ந்த கருத்துகள் ஒருங்கிணைந்துள்ளன . ஒரு கருத்துதெரியாமல் மற்றொரு கருத்தைப் புரிந்து கொள்ள முடியாது என்பதால் ,மேலோட்டமாக விரைந்து கற்றுக்கொள்ள இயலாது .மனதில் எழும் ஐயங்கள் நம்பிக்கையின்மையைத் துண்டுவதால் ,பல சமயங்களில் ஆர்வம் தடைப் பட்டுப் போவதுமுண்டு. அறியும் அறிவியலை
ஐயமறக் கற்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும் . இதற்குப் பல பொது அறிவியல் நூல்கள் துணை புரிகின்றன . 'அறிக இயற்பியல்' எனும் தலைப்பில் எழுதப்படவிருக்கிற செய்திகள் பயனுள்ளதாக இருக்கும்

என நம்புகிறேன் .

ஓடும் இரயிலில் பந்து விளையாட்டு

நாம் பலமுறை இரயிலில் பயணம் செய்திருக்கிறோம் .சும்மா
உட்கார்ந்துகொண்டு அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டும்
அரட்டை யடித்துக் கொண்டும் இருப்போம் . ஒருமுறை கூட
பயண நேரத்தைப் பயனுள்ளதாகப் பயன்படுத்திக்கொள்ள
முயற்சிப்பதில்லை. படிக்கலாம், படித்ததைச் சிந்திக்கலாம் ,
சிந்தித்ததை பதிவு செய்யலாமே . 
 
ஒருவர் ஓடும் இரயிலில் உட்கார்ந்து கொண்டு மேல்நோக்கி ஒரு

சிறிய பந்தைத் தூக்கி எறிகின்றார் . அந்தப் பந்து சிறிது தொலைவு
மேல் நோக்கிச் சென்ற பிறகு பின் திரும்பி கீழே விழுகின்றது .
வானத்தை நோக்கி விட்டெறிந்த கல் போல அந்தப் பந்து,
எறிந்தவர் மீதே வந்து விழுமா அல்லது பந்து காற்று வெளியில்
பயணித்த போது இரயில் சிறிது தொலைவு இயக்கம் காரணமாக
நகர்ந்து சென்றதால் பின்னால் போய் விழுமா?

 ஓடும் இரயில் பெட்டியில் மேல் நோக்கி எறிந்த பந்து மீண்டும்

எறிந்தவர் மீதே விழும் இரயிலின் இயக்கம் என்பது இரயில் பெட்டிகளின் இயக்கம் மட்டுமல்ல .இரயில் பெட்டிக்குள் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும்தான் .அவற்றின் நிலைமம்
(inertia) காரணமாக பந்தின் கிடைமட்ட திசைவேகக் கூறு ,இரயில்
செல்லும் திக்கில் இரயிலின் வேகமாக இருக்கும் . மேல் நோக்கி எறியப்பட்ட பந்தின் கிடைமட்டத் திசை வேகம் மாறுவதில்லை
என்பதால் ஒரே கிடைமட்டத்திசை வேகம் கொண்ட பந்திற்கும், எறிபவருக்கும் இடைப்பட்ட சார்பு வேகம் சுழியாகும் . எனவே பந்து எறிபவரைச் சென்றடைகிறது .

No comments:

Post a Comment