Saturday, August 28, 2010

Eluthatha kaditham-8

அன்பார்ந்த இந்தியப் பெருங்குடி மக்களே ,




என் பேத்தி சிங்கப்பூரில் செக் -4 படிக்கின்றாள்.அவளுடைய

வகுப்பில் சீன ,மலேசிய மற்றும் இந்திய மாணவர்கள்

படிக்கின்றார்கள் .இந்திய மாணவர்கள் பெரும்பாலும் தமிழ்

மொழியை ஒரு பாடமாகப் படிப்பார்கள் .ஒரு நாள் தமிழ்

வகுப்பில் அவளுடைய ஸ்கூல் டீச்சர் வகுப்பு மாணவர்களிடம்

எதிர்காலத்தில் என்னவாக ஆக விரும்புகின்றீர்கள் என்ற கேள்வி

கேட்டதாகவும் அதற்கு அவள் பதில் கூறியதாகவும் கூறினாள்.

அப்போது அக் கேள்விக்கு என்ன பதில் கூறினாய் என்று நான்

கேட்டேன்.எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடப் போவதாகக்

கூறினேன் என்றும் அதற்கு டீச்சர் " அரசியலிலா ஈடுபடப்

போகின்றாய் ,அப்படியானால் உலகில் எங்கு வேண்டுமானாலும்

அரசியலில் ஈடுபடு ஆனால் இந்தியாவில் மட்டும் வேண்டாம்,

அங்கு நடப்பது அரசியலே இல்லை " என்று சொன்னார் என்றும்

பதிலளித்தாள்.பேத்தி சின்னப்பிள்ளை என்பதால் அதன் உட்பொருளை

அவளால் புரிந்து கொள்ளமுடியவில்லை. ஆனால் அவள் என்னிடம்

அப்படிக் கூறியபோது யாரோ நெருஞ்சி முள்ளால்

நெஞ்சைக் குத்தியது போல இருந்தது.ஊர் சிரித்து உலகமே சிரிப்பதற்கு

முன்னால் நாம் விழித்துக் கொள்ளவேண்டாமா?

இந்திய அரசியலே நீ எப்பொழுது நிமிர்ந்து நிற்கப் போகின்றாய் ?

உன்னுடைய இழுக்கிற்கு யார் காரணம்?அரசியல் வாதிகளா ?

அப்பாவி மக்களா ? இந்த நிலையை அப்படியே இருக்கட்டும்

என விட்டு விடப் போகின்றாயா ?மாற்றம் செய்ய வேண்டும்

என்றால், எப்படி? எப்பொழுது? யாரால்? செய்யப் போகின்றாய் ?

என்ன செய்யவேண்டும் என்று சொல்ல கொஞ்சம் யோசியுங்க !



அன்புடன்

காவேரி

No comments:

Post a Comment