Sunday, August 15, 2010

Eluthatha kaditham-5

எழுதாத கடிதம் - 5

பழம் பெருமைக்குரிய இந்தியத் திருநாட்டை ஆளும் அரசியல்
தலைவர்களே

நான் பல முறை சிந்தித்து சரியான விடை கிடைக்காமல் மனதை
வருத்திய ஒரு கேள்வி உண்டென்றால் அது இதுதான்.
இந்தியாவில் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருக்கிக் கொண்டே
வருவதேன் ? நேர்மையற்ற வாழ்க்கை வழி முறையை
இந்தியர்கள் ஏன் அதிகம் நாடுகின்றார்கள் ? நேர்மையாக வாழும்
இந்தியர்கள் சிறுபான்மையாகிக் கொண்டே வரும் நிலையால் ஒரு பாதுகாப்பற்ற சூழல் உருவாகித் திடமாக நிலை பெற்று
வருகின்றது . ஒரு விதமான பயம் ,ஏமாற்றப்பட்டதால் மற்றவர்களை ஏமாற்றும் எண்ணம் , போன்றவற்றால் அவர்களும் தடம் புரண்டு வாழத் துணிந்து வருகின்றார்கள் .இன்றைக்குக் கிடைக்கும் புள்ளி விவரங்களை
வரைபடத்திலிட்டு இந்த நிலையின் போக்கு எதிர் காலத்தில் எப்படி இருக்கும் என்று கணிக்கும் போது அதன் முடிவுகள்
என்னை நிலை குலையச் செய்கின்றன . இந்த முரட்டுத் தனமான
போக்கிற்கு மக்களால் ஒரு தீர்வைத் தரவே முடியாது .ஏனெனில்
இதைப் பொறுத்தமட்டில் மக்கள் நோயாளிகள் .மருத்துவர்களாக
விண்ணப்பித்து தேர்வு செய்யப்பட்ட நீங்களே இதற்கு
சரியான மருந்து கொடுத்து ஒரு முற்றுப் புள்ளி வைக்கமுடியும் .

இந்தியாவில் குற்றங்கள் பல விதமாக இருக்கின்றது.உலகில் எங்குதான் குற்றங்கள் நடைபெறவில்லை, என்று நம்மை நாமே சமாதனப் படுத்திக்கொண்டு இன்னும் சும்மா இருப்பதில்
அர்த்தமில்லை எதிர்காலச் சந்ததியினர் நம்மை விடவும்
சிறப்பாக வாழ்வதற்கு வழி ஏற்படுதிக்கொடுக்காவிட்டாலும்
குறைந்தபட்சம் நம்மைப் போலவாவது வாழ்வதற்கான
சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவேண்டும் .

சட்டத்திற்கு புறம்பாக மருந்து,உணவுப் பண்டங்கள்
மற்றும் கலப்பட பொருள்கள் போன்றவற்றை எந்தத் தடையுமின்றி விற்பது,கள்ளநோட்டு அடித்து விநியோகிப்பது ,கள்ளச் சாராயம்
காய்ச்சி விற்பனை செய்வது ,நிதிநிறுவனம் மூலம் மோசடி செய்வது மாமூல் ,லஞ்சம் வாங்குவது ,வேலை தருவதாகக் கூறி
ஏமாற்றுவது ,சிறுவர்களைக் கடத்தி பணம் பறிப்பது அல்லது
விற்றுவிடுவது ,குவாரிகளில் உழைப்பை வாங்கிக்கொண்டு
அடிமையாக வைத்திருப்பது ,பொய்க்கையெழுத்து பத்திரம்
போன்றவற்றால் ஏமாற்றுவது ,மற்றவர்களின் உடைமைகளைத்
திருடுவது ,ஆசைவார்த்தைகளைக் கூறி மோசம் செய்வது ,பெற்ற குழந்தையைத் தேவையில்லை என்று அனாதரவாய்
விட்டுவிடுதல் கொலை செய்தல் அல்லது விற்று விடுதல்
போதைப் பொருள் விற்பனை , வீடு,கடை ,பேங்க் புகுந்து கொள்ளை அடித்தல், கழுத்துச்சங்கிலியை அத்துக் கொண்டு ஓடுதல், ஜேப்படி செய்தல் ,கார்,மோட்டார் சைக்கிள் போன்றவற்றை
திருடுதல் ,மக்களின் கடவுள் நம்பிக்கையை வைத்து ஏமாற்றுதல்
அல்லது ஒரு விதமாக நம்பிக்கையை ஏற்படுத்தி ஏமாற்றுதல்
,நிறுவனத்தின் நிதியை தவறாகப் பயன் படுத்துதல் ,
அதிகாரம்,செல்வாக்கு, பண பலம் போன்றவற்றைப் பயன் படுத்தியும் ,மக்களைப் பயமுறுத்தியும் ஏமாற்றுதல் , மக்களிடையே வன்முறையைத் தூண்டி ஆதாயம் தேடுதல் ,
மக்களின் கவனத்தை திசை திருப்பி ஆதாயம் பெறுதல் , சின்னச் சின்னக் காரணக்களுக்கெல்லாம் பொதுச் சொத்துக்களை
அழித்தல்,பாதுகாப்பற்ற பெண்களைக் கற்பழித்தல் ,இன்னும்
இன்னும்........ இந்தப் பட்டியல் முடிவில்லாமல் நீண்டுகொண்டே போகின்றது .புள்ளிவிவரங்கள் இந்தியாவில் மக்கள் தொகைப் பெருக்க வீதத்தைவிட இந்த குற்றங்களின் வீதம் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கின்றன . பெரும்பாலான குற்றங்கள் முறையாகப் பதிவு
செய்யப்படுவதில்லை என்பதால் இது இன்னும் கூட இருக்கவேண்டும் என்றும் கூறுகின்றார்கள்.இது நமக்குப் பெரும் அச்சத்தைத் தருவதாக இருக்கின்றது

மக்களை ஆண்டது போதும் ,மக்களின் மனதை ஆளப் பாருங்கள் .
உங்கள் காலத்தில் செய்யவேண்டியது உங்கள் காலத்திலேயே
செய்யப்படவேண்டும் . இல்லாவிட்டால் அது செய்யப்படாமலேயே
போய்விடலாம் . ஏனெனில் பிற்பாடு அதைச் செய்வதற்கு
இன்னும் கடிய,கூடுதலான முயற்சி எடுக்கவேண்டியிருக்கும்.
குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்றால் அதற்கு இருக்கும் தடை போதுமானதாக இல்லை என்று பொருள். மொழியோடு
இவை எல்லாம் இங்கே வளர்ந்தால் மொழிதான் வளருமா
இந்தியர்களின் நிலைதான் வளருமா ?

இதில் இருக்கக்கூடிய ஒரு பொதுவான குற்றச்சாட்டு
பெரும்பாலான குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்து
விடுகின்றர்கள் என்று சொல்லப்படுவதுதான். இதற்கு அரசியல் தலையீடே காரணம் என்று மக்கள் நினைக்கின்றார்கள் .
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் மூலம் தவறாது தண்டிக்கப் படவேண்டும் என்பது அரசியல் தலைவர்களின் அடிப்படைக்கொள்கையாக இருக்கவேண்டும் .
அரபு நாடுகளைப் போல இல்லாவிட்டாலும் முறையான
தண்டனைகள் மூலமே ஒரு சமூக ஒழுங்கை இங்கே
நிலைப்படுத்த முடியும்.

மக்களோடு நீங்களும் சிந்திக்க வேண்டுகின்றேன்.

அன்புடன்,

காவேரி

No comments:

Post a Comment