Sunday, August 22, 2010

Eluthatha kaditham-7

எழுதாத கடிதம் -7


அன்பார்ந்த தமிழக நூல் வெளியீட்டாளர்களே


தமிழ் மொழி தமிழகத்தில் மட்டுமில்லாது உலகெங்கும் வளர்ந்து
வருவதற்கு உங்கள் பணி இன்றியமையாதது . அதற்காகத் தமிழ்
மொழி உங்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருக்கும்.நீங்கள்
நூல்களை கஷ்டப்பட்டு வெளியிட்டாலும் ,இஷ்டப்பட்டு வெளியிட்டாலும்
பெரும்பாலும் நல்ல இலாபங்களையே சம்பாதித்துவருகின்றீர்கள்.
ஆனால் நீங்கள் நூல் வெளியிடுவதற்குக் காரணமாக இருக்கும்
ஆசிரியர்களையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் .

ஒரு சில பிரபலமான எழுத்தாளர்களைத் தவிர பிற எழுத்தாளர்கள்
எழுதி, அதற்குரிய நியாயமான வெகுமதியைப் பெறுவதில்லை .நூல்
வெளியீட்டாளர்களால் தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்ற எண்ணமே
அவர்களிடம் இறுதியில் எஞ்சி நிற்கிறது . நடைமுறையில் நூலை
எழுதிய ஆசிரியருக்கு ராயல்டியாக விற்பனை வருமானத்தில்
7 .5 முதல் 15 % வழங்குவது உலக வழக்கமாக இருந்து வருகிறது .
ஆனால் இதைப் பெறுவதற்கு ஆசிரியர்கள் படும் பாடு அவர்களுடைய
நெஞ்சிலேயே புதைக்கப்பட்ட ஒரு சோக கீதம் .

நூலை எழுதி வெளியிடுவதற்காக அனுப்பி வைத்த பின்னர் அதை
வெளியிட ஏற்றுக்கொண்டார்களா இல்லையா என்பது கடைசி வரை
தெரியாது . பல முறை கடிதம் எழுதியும் , நேரில் சந்தித்தும் கேட்டுக்
கொண்டபிறகு அதை ஒருவழியாக வெளியிடுவார்கள். நூல்
வெளியிடும் போது முறையான ஒப்பந்தம் செய்யப்படுவதில்லை .
முழு உரிமையை வெகு இலவசமாக அபகரித்துக் கொண்டுவிடுவார்கள் .
இதில் இலவசமாக புரூப் திருத்தம் வேறு செய்துகொடுக்க வேண்டும்
ஆசிரியரும் தன்னுடைய நூல் வெளிவந்தால் போதும் என்ற
ஆர்வத்தில் தன்னுடைய உரிமையை விட்டு விடுவார் . ஆசிரியருக்கு
கொடுக்க வேண்டிய சன்மானமும் உடனேயே கொடுக்கப்படுவதில்லை .
பலமுறை நினைவூட்டி நீண்ட காலத்திற்குப் பிறகே அதையும்
ஒரு ஆசிரியர் பெறுகிறார் .முழு உரிமைக்கான சன்மானம் எவ்வளவு என்று நினைக்கின்றீர்கள், வெறும் Rs .1000 லிருந்து 6000 வரைதான். தன்னுடைய எழுத்துக்களை வரலாற்றுப் பதிவு செய்து விட்டோம் என்ற நிம்மதி மட்டும் ஒரு ஆசிரியருக்குக் கிடைகிறது .சங்க காலத்திலிருந்தே மொழி வளர்க்கும் பெரும்பாலான புலவர்களின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை .புலவர்களின் வறுமை என்பது மொழியின் வளர்ச்சியை மட்டுப்படுத்தி விடும் .அவர்களின் வயிற்றைப் போல எழுதுகோலும் வற்றிப்போனால் படைப்புத்தொழிலும் அழிந்து போகாதா .

இதைக் கண்ணுறும் போது எனக்கொரு யோசனை தோன்றுகிறது .இதில்
நான் முன்பே ஈடுபடாததற்குக் காரணம் நூல்களை சந்தைப்படுத்தும்
வழிமுறை இல்லாததுதான் .

எழுத்தாளர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு பொதுவான அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு அதன் மூலம் தங்களுடைய படைப்புகளை வெளியிடலாமே . முதலீடும் ,இலாபமும் எல்லோருக்கும் சமமாகப் பகிர்ந்து கொள்ளலாம் . கூட்டு வியாபாரம் என்பதில் சிலசிக்கல்கள் இருக்கவே செய்கின்றன .எனினும் மிகச் சரியாக முன் திட்டமிட்டு ,
நேர்மையாகச் செய்தால் எல்லோருக்கும் நலமே . உழவர் சந்தை போல ,நூல்சந்தையும் ஆங்காங்கே தோன்றினால் நாட்டுக்கும் நல்லது மொழிக்கும் நல்லது.

எழுத்தாளர்களே கொஞ்சம் சிந்தியுங்க !



அன்புடன்

காவேரி .

No comments:

Post a Comment