Monday, August 2, 2010

Eluthatha kaditham-3

எழுதாத கடிதம் -3







அன்பார்ந்த LPG - சிலிண்டர் விநியோகிப்போர்களே ,






நான் ஒரு சிலிண்டர் ரூ. 60 - 70 க்கு விநியோகித்த காலத்திலிருந்து

சமையலுக்காக LPG - யை வீட்டில் பயன்படுத்தி வந்திருக்கின்றேன்.

படிப்படியாக விலை ஏறி இன்றைக்கு ஒரு சிலிண்டர் ரூ.335 /= ஆக

உயர்திருக்கின்றது. விலைவாசி உயர்வால் விலைகள் உயர்வது

வழக்கமானதுதான்.



சிலிண்டர் கொண்டு வந்து போடும் பணியாளர் முன்பு ரூ.2 /= +

தீபாவளி இனாம் மகிழ்ச்சியோடு வாங்கிக்கொள்வர். ஆனால்

இன்றைய நிலை அப்படி இல்லை .ஒவ்வொரு முறையும் ரூ.15 /=

-ம் தீபாவளி இனாமும் கொடுத்தாலும் திருப்தி இல்லை.
சிலிண்டர் விலை திருத்தப்படும் ஒவ்வொரு முறையும்
இதுவும் தனியாக அதிகரிக்கும் . எனக்கு லஞ்சம் கொடுப்பதும்

பிடிக்காது வாங்குவதும் பிடிக்காது .ஆனால் வீட்டில் மனைவி

15 ரூபாய்க்காக அந்தப் பணியாளருடன் வாக்கு வாதம் நான்

செய்வதையும் ,அண்டை அயலார் வேடிக்கை பார்ப்பதையும்

விரும்புவதில்லை.



பணியாளருக்கு மக்கள் இப்படிக் கொடுப்பது தவறான பழக்கம்

மட்டுமில்லை பிற தவறான பழக்கங்களின் வளர்ச்சிக்கு முன்

உதாரணமாகவும் அமைந்து விடுகின்றது .ஒரு விதத்தில் இது

கையூட்டும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கு ஒப்பானதாகும் .

ஒரு பணியின் காரணமாக மக்களுக்கும் ஒரு நிறுவனத்திற்கும்

மட்டுமே பணப் பரிமாற்றத் தொடர்பு இருக்க வேண்டுமே ஒழிய

இடை வரும் பணியாளருடன் அது போன்ற தொடர்புகள் வளர

அனுமதிக்கலாகாது. பயனாளருக்கும் பணியாளருக்கும் இடையே

ஏற்படும் கருத்து வேறுபாடுகள் நிறுவனத்தின் வளர்ச்சியைப்

பாதிக்கின்றது .



பிற பொருள்களைப்போலப் பயனாளரே சிலிண்டரைக் கடையில்

வாங்கி பாதுகாப்பாக வீட்டிற்கு எடுத்து செல்லமுடியாது என்பதால்

சிலிண்டரை விநியோகிக்கும் நிறுவனமே அந்தப் பொறுப்பையும்

செய்ய வேண்டியது தவிர்க்க இயலாததாக இருக்கின்றது. இதற்காக

ஆகும் கூடுதல் செலவை ரசிப்டில் குறிப்பிட்டு ,சிலிண்டரின்
விலையோடு சேர்த்து வாங்குவது நல்ல வியாபாரத்தின்
நேர்மையான அணுகுமுறையாகும் .பயனாளரும் பணியாளரும்
எப்படியோ போங்கள், எனக்கு வரவேண்டியது வந்தால் சரிதான்
என்று பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காதீர்கள்.நேர்மையான பழக்க
வழக்கங்களை எங்கும் எதிலும் பரப்ப வேண்டிய 
கட்டாயக் காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம் .

கொஞ்சம் சிந்தியுங்க .

அன்புடன்

காவேரி







No comments:

Post a Comment