Thursday, August 19, 2010

Eluthatha kaditham-6

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அரசியல் தலைவர்களே

இந்தியாவில் குற்றங்கள் பெருகி வரும் நிலை பற்றி முன்னொரு
கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.அதற்கு சரியான தீர்வு என்ன என்று யோசித்தபோது என்னுள் எழுந்த எண்ணங்களை அதன் தொடர்ச்சியாகத் தரலாம் என நினைக்கிறேன் .

வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்று வந்தால் வீடு கொள்ளையடி-க்கப் பட்டிருக்கிறது .தரமான பொருள் வாங்கப் பணம் கொடுத்தால்
கலப்படம் செய்யப்பட்ட அல்லது எடை,அளவு குறைவான பொருள் தரப்படுகிறது. தனியாக ஒரு பெண் இரவு வேண்டாம்,பகலில்
சென்றால் கூட,கடத்தப்பட்டு கற்பழிப்புக்கு ஆளாகின்றாள்.
எதற்கெடுத்தாலும் ஆர்பாட்டம் ,சண்டை ,சச்சரவு . கருத்து முரண்பட்டால் யாரவது ஒருவர் கொலை செய்யப்படுகின்றார் .
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்,
ஏமாறுபவர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும் என இதற்குப்
பலரும் சமாதானம் கூறுவார்கள் ஏமாற்றுபவர்களை இப்படி
எல்லோரும் விட்டு விடுவதால் அவர்கள் அவ் வேலையை
இன்னும் தீவிரமாகச் செய்யத் துணிவு கொள்கிறார்கள்
ஏமாறுபவர்கள் ,இயல்பான வாழ்கையை வாழுகின்றவர்கள்.தங்களுக்குப் பாதுகாப்பு அரசு என்ற நம்பிக்கையுடன் இருப்பவர்கள் .
இதில் அவர்கள் தங்களுடைய மூளையைத் தவறாகப் பயன்
படுத்தவில்லை . ஆனால் ஏமாற்றுபவர்கள் இயல்பான

வாழ்க்கை முறைக்கு எதிராகச் சிந்தித்து தவறாகச் செயல்
படுகின்றார்கள் . எது கிளர்சியுற்றதோ அதைத்தான் நாம் செம்மைப்
படுத்தவேண்டுமே ஒழிய,அமைதியாக இருப்பதையே மீண்டும்
மீண்டும் அமைதிப் படுத்த முயற்சிக்கக் கூடாது

ஒருவர் மற்றொருவரை ஏமாற்றுவதற்கு இரு காரணங்களைக்
கூறலாம் .ஒன்று சுகம் தேட ,மற்றொன்று வறுமையைப் போக்க .
சுகம் தேடுபவர்கள் அதன் எல்லை தெரியாததால் வரம்பின்றி
பொருள் குவிக்கத் தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியைச்
செலவழிக்கின்றார்கள் .தங்கள் முயற்சியில் வெற்றி பெற
எந்தத் தவற்றையும் செய்ய இவர்கள் சிறிதும் வெட்கப்
படுவதில்லை .கண்காணிப்பு இல்லாமை,லஞ்சம் கொடுத்து
தப்பித்தல்,அரசியல் அங்கீகாரம் , குண்டர்களைக் கொண்டு
பயமுறுத்துதல் போன்ற திரை மறைவு விஷயங்கள் இவர்களுக்கு அனுகூலமாக இருக்கின்றது . பெரும்பாலான அரசியல் வாதிகள்
இதன் கீழ் வருவதால் அரசியல் அமைப்புக்களைக் கொண்டே
இவர்களைத் திருத்த முடியாது .உண்மையைச் சொன்னால் அரசியல் வாதிகள் அவர்களாகப் பார்த்துத் திருந்த விட்டால்
இதில் ஓர் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தவே முடியாது .

வறுமையில் தொடர்ந்து வாடுபவர்கள் ,திறமைகள் இருந்தும் தொடர்ந்து புறக்கனிக்கப்படுபவர்கள் செயற்கையான முட்டுக்கட்டைகளைக் கண்டு மனம் வெறுத்து மனநிலை பாதிக்கப்பட்டிருப்பார்கள் .பாதிப்பின் அளவைப் பொறுத்து இவர்கள் குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள்

பொதுவாக ஒருவர் உடனடியாக குற்றம் புரியும் நிலைக்கு வந்து விடுவதில்லை .இயற்கையாக வாழும் நிலை அதாவது இயல்பாக வாழும் முறையிலிருந்து செயற்கையாக வாழும் நிலை அதாவது குற்றம் புரிந்து வாழும் முறைக்குத்தாவும் போது இடைவெளியான ஒரு காலம் உண்டு . இது வேலை வெட்டி இல்லாத காலம் .இந்தக் காலத்திலேயே இவர்கள் தங்களைத் தவறான பாதையில்
செல்லத் தூண்டிக் கொள்கிறார்கள் . வேலை இல்லாமல் சும்மா ஊர் சுற்றித் திரியும் காலங்களில் இவர்கள் காணும் சுற்றுப்புற
அவலங்களினால் மன மாற்றம் பெறுகிறார்கள். ஒரு தவறு செய்வதைச் சிந்திப்பதற்கு ஒரு கால அவகாசம் கொடுத்தது
போல ஆகிவிடுகிறது .வேலை இல்லாமல் ஒரு இளைஞரும்
இருக்கக் கூடாது என்பது இனி வரும் அரசாங்கத்தின்
அடிப்படைக் கொள்கையாக இருக்க வேண்டும் .நாட்டின் வளம் ஒரு சிலரால் மட்டும் தீர்மானிக்கப் படாமல் ,நாட்டு மக்கள்
எல்லோராலும் சேர்ந்து பெறப்பட்டதாக இருக்கவேண்டும் .
எல்லோருக்கும் வேலை கொடுப்பது என்பது ஒரு நல்ல அரசின்
கடமையாகும் .அரசாங்க வேலையில் எல்லோருக்கும் வாய்ப்பில்லை என்று உங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழித்து விடாதீர்கள் .புதிய புதிய யுக்திகளினால் பணி இடங்களை உருவாக்குங்கள் .கஜானா காலி என்று பழைய கதையையே கூறாதீர்கள் . இருப்பதை எல்லோருக்கும் பகிர்ந்து
கொடுங்கள் .

கண்காணிப்பு என்பது சிறிதும் இல்லை கடைகள், நிறுவனங்கள்
போன்றவற்றில் எடை,அளவுக் குறைவாக விற்பனை செய்வோர் ,
வரி ஏய்ப்போர், பணி புரிவோர் ஒழுங்காகப் பணி செய்கின்றார்களா,
பொது இடங்களில் விதிகளை மீறாமல் இருக்கின்றார்களா எனக்
கண்காணித்தல் ,கட்டமைப்புப் பணிகளை அதிகரித்து
எல்லோருக்கும் வாய்ப்புக் கொடுத்தல்,பாதுகாப்புப் பணியில்
ஈடுபடுத்துதல்,தரிசு நிலங்களை அரசு என்ற பொது முதலாளிக்காக
உழவு செய்தல்,வீடு மற்றும் மனைகளை விற்பனை செய்வதை அரசு சார்பான அமைப்பு மூலமாக மட்டுமே வாங்குவோர் மற்றும் விற்போருக்கு நேர்மையாகச் செய்தல் ,அரசு அமைப்பு
மூலமாக வெளி நாடுகளுக்கு வேலை வாய்ப்பு வாங்கிக் கொடுத்தல் ,கிராமங்களிலும், நகரங்களிலும் பூங்காக்களை
உருவாக்கி ,உடற் பயிற்சி கூடங்களை நிறுவி செயல்படுத்துதல் ,
ஓய்வு பெற்றவர்கள்,முதியவர்கள் விரும்பினால் அவர்களுக்கேற்ற வேலையைக் கொடுத்தல் ,இப்படி இன்னும் இன்னும்
எவ்வளவோ இருக்கின்றது . நாங்கள் நினைத்தால் அது நிழல் நீங்கள் நினைத்தால் அது நிஜம் .இனியாவது நாட்டை
நாட்டுக்காக வளப்படுதுங்களேன். எல்லோரும் சேர்ந்து ஏதாவது செய்யாவிட்டால் எதிர்காலத்தில் நாம் அல்லல்பட
நேரிடும்.கொஞ்சம் சிந்திக்க வேண்டுகின்றேன் .



அன்புடன்.

காவேரி





 

No comments:

Post a Comment