Tuesday, August 24, 2010

vanna vanna ennangal-11

                                                      11.இட்டலித் தத்துவம்
                                                                   "காவேரி"


இன்றைக்கு வேண்டும் எனக்கு

இட்டலி என்றல்

என்றைக்கும் அதுவொன்றும்

மந்திரத்தில் விளைவதில்லை

கடைதெரு போய்

கடை கடையாய் ஏறி

கல்லில்லாத அரிசி வாங்கி

கருப்பில்லாத உளுந்தும் வாங்கி

அளந்தெடுத்து ஊறவைத்து

ஆட்டுக் கல்லிலிட்டு அரைத்து

இரண்டையும் ஒன்று கலந்து

இத்துணை உப்பிட்டு

அரைநாள் நொதிக்கவிட்டால்

அடுத்தநாள் மாவு ரெடி


அகன்ற சட்டியில் கொஞ்சம்

தண்ணீர் எடுத்து

ஆவிவர அடுப்பிலேற்றி

துணைத் தட்டில் ஈரத்

துண்டை விரித்து

சின்னச்சின்ன குழிகளில்

சிறிதளவு மாவை ஊற்றி

ஆறேழு நிமிடம்

ஆவியில் வெந்தபின்

ஊசி முனையில் பதம் பார்த்து

உரித் தெடுத்தால்

வெள்ளை இட்டலிப்பூக்கள்

வெம்மையிலும் பூத்திருக்கும்


தினம் உண்ணும்

இட்டலிக்கே நிலை

இதுவென்றால்

உன் எதிர்காலக் கனவுகளுக்கு

உருவமென்ன உடனேயா

வந்துவிடும் ?

உருவாக்கம் எதுவும்

உடனடி நிகழ்வில்லை

உருவமில்லாக் கனவுகள்

உண்மை நிகழ்வுகளாகப் பூக்க

எண்ணங்களுக்கு உரம் வேண்டும்

உழைக்க உறுதி வேண்டும்

பக்குவம் வர வேண்டும்

படிப்படியாய் உயர வேண்டும்.

No comments:

Post a Comment