Friday, August 13, 2010

Eluthatha kaditham-4

எழுதாத கடிதம் -4

பொருளின் இயக்கத்திற்கு மட்டுமின்றி ஒரு நாட்டின்
இயக்கத்திற்கும் நியூட்டனின் இயக்க விதிகள் பொருந்தி
வருகின்றன . எனவே மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய
அரசியல் தலைவர்களே இந்த விஞஞானத்தையும் கற்றுக்கொள்ளுங்கள். அரசியல் நாகரிகம் மேம்படுவதற்கான ஒரு வழி பிறக்கலாமே.மக்கள் உங்களிடம் ஒரு நல்ல அரசியலை எதிர்பார்க் கின்றார்கள் .மக்களுக்காக மக்களை ஆள வந்த பின் அந்த அடிப்படையான கொள்கையிலிருந்து வேறுபட்டிருப்பது பாவம் நம்பிய மக்களுக்குத் துரோகம் செய்வதற்கு ஒப்பாகும் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்து இன்றைக்கு ஏறக்குறைய முற்றிலும் சீரழிந்து விட்ட
இந்த அரசியல் நாகரிகம் மண்ணுக்குள் புதைந்து விட்ட
இந்து சமவெளி நாகரிகம் போல எண்ணங்களுக்குள் ஒரு புதை பொருளாகி விட்டது .

மக்கள் உங்களிடம் நியாயமாக என்ன எதிர் பார்க்கவேண்டும் என்பதில் மக்களும் மக்களுக்கு நியாயமாக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் நீங்களும் நேர்மையாக இருக்க இந்த நானூறு ஆண்டு காலப் பழமையான அறிவியல் விதிகள் வழி காட்டுகின்றன.

நியுட்டனின் முதல் விதி

எந்தப் பொருளும் தன் இயக்க நிலையில் வேகத்திலோ அல்லது செல்லும் திசையிலோ மாற்றம் பெற அதன் மீது எதாவது ஒரு புறவிசை செயல் படவேண்டும். இல்லாவிட்டால் அப் பொருள் தன் ஓய்வு நிலையிலோ அல்லது ஏற்கனவே பெற்றிருந்த அதே இயக்க நிலையிலோ இருக்கும் .

இந்த விதி,விசையின் ஒரு பொதுத் தன்மையைத் தெரிவிக்கின்றது
அதாவது விசையின்றி(விசை மூலமின்றி) எந்த இயக்க மாறுதலும்
நடைபெற முடியாததைப் போல, செயல்திறன் மிக்க ஒரு தலைவனின்றி நாடு எந்தவளர்ச்சியையும் நிலைப் படுத்திக்கொள்ள முடியாது .ஒரு பொருளின் இயக்கமாறுதலுக்கு காரணமாக இருக்கும் விசை போல ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முழு முதல் காரணமாக இருப்பது அந் நாட்டின் தலைவரே . நாட்டின் வளர்ச்சியை முடுக்கிவிடும் மூல சக்தி முழுமையாக
நாட்டின் தலைவரிடமே உள்ளது. ஏனெனில் தன் எண்ணத்தை உடனடியாகச் செயல் படுத்தக்கூடிய கட்டமைப்பும், வாய்ப்பும்
நாட்டுத் தலைவரிடம் மட்டும் இருக்கின்றது .ஒரு தலைவர் ஆளும்
போது சுகமாய் இருந்துவிட்டு ,போகும் போது நாட்டில் இருக்கும்
மற்றும் வளர்ந்துவரும் தீய சக்திகளைச் சுட்டிக்காட்டி தன் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதாக
இவ் விதி இருக்கின்றது .

நாட்டுத் தலைவர் பொறுப்புள்ளவராக இருப்பாரானால் அந் நாடு அவரால் ஊட்டப்படும் உந்து விசையால் வளர்ச்சிப் பாதையில் முன்னேறும் .சிங்கப்பூரின் லி குவான் யு ,மலேசியாவின் மகாதீர், கியூபாவின் பெடரல் காஸ்ட்ரோ போன்ற தலைவர்களை இதற்கு முன் உதாரணமாகக் கூறலாம் .

நியுட்டனின் இரண்டாம் விதி

விசை ஒரு பொருளின் மீது செயல்படும் போது அதற்கு ஒரு முடுக்கத்தைக்கொடுத்து அதன் இயக்கத்தை முடுக்கிவிடுகின்றது .அது பெறும் முடுக்கத்தின் அளவு அதன்நிறையைப் பொருத்திருக்கின்றது.இதைக் கணித மொழியில் குறிப்பிட்டால்
F (விசை) = m (நிறை) x a (முடுக்கம்)..விசை,நிறை மற்றும் முடுக்கம்
இவைகளுக்கு இடைப்பட்ட தொடர்பை இது வரையறுப்பதால் இவ் விதி ஒருதலைவர் தன் நாட்டை ஆளும் முறையின் அடிப்படையைத் தெரிவிக்கின்றது.விசை அல்லது விசை மூலம் அரசியல் தலைவர் என்றால் ,நிறை என்பது நாட்டுமக்களாகும் .முடுக்கம் என்பது மக்களின் நிலை மாற்றம் என்பதால்அது நாட்டின் வளர்ச்சியைக் குறிக்கும் .விரைவான நாட்டு வளர்ச்சிக்குத் தேவை கூடுதலான விசை .இது கூடுதலான மக்கள் தொகையால் குறைவானால் ,அதற்கேற்ப விசையின் அளவைக் கூட்டவேண்டும் என்பதைத் தெரிவிக்கின்றது.
ஒரு தலைவர் நாட்டு வளர்ச்சிக்கான விசையை எங்ஙனம் அதிகரிக்க முடியும் என்ற கேள்வி இங்கே எழுகின்றது .
மக்களும் கடைப்பிடித்து ஒழுகுமாறு ஒரு தலைவர் நேர்மையாக இருந்து அப் பழக்கத்தையே எங்கும் எதிலும் வழக்கமாக்குவதாலும் , தன்னுடைய செயல்பாடுகளுக்குஆதரவான பொது மக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாலும், மக்களை வளப்படுத்தாமல் மக்களுக்கான அரசியல் அமைப்புகளை வளப்படுத்துவதைத் தவிர்ப்பதாலும்,
கட்டுப்பாட்டிற்கு எவரும் விலக்கமின்றி எல்லோரையும் சமமாக உட்படுத்துவதில் தீவிரமாக இருப்பதாலும் விசையின் வலிமையை அதிகரிக்கமுடியும்

நியுட்டனின் மூன்றாம் விதி
விசையாலான ஒவ்வொரு செயலுக்கும் அதற்குச் சமமான ஒரு எதிர் செயல் உண்டு.

செயல் என்பது விசையானால் எதிர்ச் செயல் என்பது விளை பலனாகும்.
இவ்விதி எதிர் செயல் இல்லாமல் ஒரு செயலையும் செய்ய முடியாது என்பதையும்,செயலே இல்லாமல் ஒரு பலனையும் எதிர்பார்க்கமுடியாது என்பதையும் கோடிட்டுக் காட்டுகின்றது

பெற்ற பலனைப் பகிர்ந்து கொடுக்காமல் அதைத் தனக்குத் தானே
ஒதுக்கிக் கொண்டால் அது தன் வீட்டில் தானே திருடியதற்கு ஒப்பானதாகும்.பெரும்பாலான இந்தியத் தலைவர்கள் இந்தப் பட்டியலிலேயே வருகின்றார்கள். ஓரிரு வரிகளில் சொன்னால் அரசியல் என்பது நாட்டின் வளத்தை மேம்படுத்துவதும் ,கிடைத்த பலன்களை நாட்டு மக்கள் எல்லோருக்கும் கிடைக்குமாறு சமப் பங்கீட்டுத்தனம்
செய்யும் முயற்சி.இதில் அயலாருக்குப் பங்கில்லை என்பதால் பாதுகாப்பும் சேருகின்றது .இப்பொழுது சொல்லுங்கள் ,மக்களுக்கு சேவை செய்யப்போகின்றேன் என்று மக்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு மக்களால் தேர்வு பெற்ற நீங்கள் உங்கள் பணியைப் பொறுப்புடன் செய்துவருகின்றீர்களா ? இப்படி ஒரு கேள்வியை உங்கள் மனம் உங்களைக் கேட்டால் என்ன பதில் கூறுவீர்கள் . சிந்திக்க வேண்டுகின்றேன் .

அன்புடன்

காவேரி

No comments:

Post a Comment