Mind without fear
முற்றிலும் மனம் தளர்ந்து ,நம்பிக்கை இழந்து நிர்க்கதியாய் நிற்கும்போது ஒருவர் பெரும்பாலும் தவறான முடிவையே எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகின்றார்.பிரச்சனையிலிருந்து விடுபட தற்கொலையே சரியான முடிவு என்று ஒருவர் தீர்மானித்தால் அது முட்டாள்தனமான முடிவாகத்தான் இருக்கும்.உண்மையில் அவர் பிரச்சனையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவில்லை,பிரச்சனையோடு தன் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றார்.பிரச்சனையோ அவரை விட்டுவிட்டு இன்னொருவரைப் பிடித்துக்கொள்கிறது.
பிரச்சனை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.ஒவ்வொரு பிரச்சனைக்கும் நிச்சியம் ஒன்றுக்கும் மேற்பட்ட தீர்வுகள் உண்டு .இனியொரு மாற்றத்தை நம்மால் ஏற்படுத்தவே முடியாது ,அந்த மாற்றம் வருவதற்கு நிச்சியமான பிற வழியொன்றும் இல்லை என்று அவராகவே இறுதி முடிவு எடுத்துவிட்டு வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காததால் பிரச்சனையின் கொலைவெறிக்கு தானாகவே சிக்கிக் கொள்கிறார்.தற்கொலை செய்து கொள்பவர்களை பிரச்சனைகளின் அடிப்படையில் பொதுவாக மூன்று வகைப்படுத்திக் கொள்ளலாம்.முதல் வகை எதிர்பார்த்தது கிடைக்காமல் தோல்வியைத் தழுவியவர்கள் .இவர்களது தோல்வி, தேர்வில் தோல்வி, தேர்தலில் தோல்வி, விளையாட்டில் தோல்வி ,காதலில் தோல்வி, தொழிலில் தோல்வி இவற்றுள் ஒன்றாக இருக்கலாம். இரண்டாம் வகையினர் சமுதாயக் கொடுமைகளை சகித்துக்கொள்ள முடியாதவர்கள் .கணவனின் கொடுமைகளைத் தாங்கமுடியாமை ,ஏழ்மையை எதிர்த்து போராடமுடியாமை, தீங்கிழைக்கும் வலிமையான எதிரியைத் தனித்து எதிர்க்க முடியாமையால் தற்கொலை செய்து கொள்ளும் கொள்கைப் பற்றாளர் இந்த வகைக்குள் அடங்குவர்.பிறர் முன்னே அவமானப்பட்டு தன்மானம் பாதிக்கப்படுதல்,அல்லது அப்படியொரு நிலை வந்துவிடும் என்று எதிர்பார்த்து அவசரப்படுதல் காரணமாக தற்கொலை செய்து கொள்பவர்கள் மூன்றாம் வகையினராகும் .
தற்கொலை, தற்கொலை செய்து கொள்பவரின் முட்டாள்தனம் மட்டுமன்று,அது சமுதாயத்தின் முட்டாள்தனமும் கூட.ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு அவர் பங்களிப்பு ஒரு பங்கு என்றால் சமுதாயத்தின் பங்களிப்பு மூன்று மடங்கு.தற்கொலை அதிகமுள்ள சமுதாயம் ஒரு நல்ல சமுதாயமே இல்லை.தற்கொலையால் செத்துப் போனவனைவிட
சாகாத சமுதாயத்திற்குத்தான் அழுக்கும்
இழுக்கும்
என்பதை வாழும் சமுதாயம் புரிந்துகொள்ளவேண்டும்.