Monday, April 22, 2013

Kavithai


வாசமில்லாப் பூக்கள்

அணுவுக்குள் அளவில்லா ஆற்றலென்பார் அறிவியலார்  

ஆற்றல் உறைந்தே அணுவானதென அவரறிவார் 

அணுவின்றி அகிலமில்லை அங்கே பருப்பொருளுமில்லை

ஆற்றலின்றி படைப்பில்லை அதில் பரிணாமமுமில்லை

அண்டத்திலும் அணுக்கள் பிண்டத்திலும் அணுக்கள்

எங்கும் அணுக்கள் எல்லாவற்றிலும் அணுக்கள்

இயற்கையாய் வாழத் தெரியாத மக்களுக்கு

வாழ்கையை உணர்த்த ஆண்டவன் தூவிவிட்ட

வாசமில்லாப் பூக்கள் இந்த அணுக்கள்

 

அணுவில் இருக்குதொரு நேர்மின்  மையக்கரு

அதைச்சுற்றி வலம்வருது எதிர்மின்  எலெக்ட்ரான்கூறு

பேரண்டத்தில் நீ வாழுமிடம்  சூரியக்குடும்பம்

தன் சிற்றுருவே அணுவின் வடிவம் எனக்கூறுதோ

அணுக்கள் ஒன்றையொன்று வெறுப்பதில்லை  

அப்பாலிருந்தாலும் அன்புகாட்டி  கவர்ந்திழுக்கின்றன

மாறாத அணுநேயமே பிரபஞ்சத்தை ஆளுது

மனிதநேயத்தை மறந்துவிட்டால் வாழ்வேது எனக்கூறுதோ

வாசமில்லாப் பூவாய்வந்த இந்த அணுக்கள்

உயிரிலா அணுக்களின் இணைந்த இயக்கம்

உலகில் மனிதவாழ்கையும் அது போன்றதே

சமமாய் ஈந்து சமமாய் பகிர்ந்து வாழ்தல்

சமுதாய வாழ்க்கையில் சகப்பிணைப்பு போன்றதே

சுகங்களை பரிமாறிக் கொண்டு வாழ்தல்

இல்லற வாழ்க்கையில் அயனிபிணைப்பு போன்றதே

நிலையிலா வாழ்கையில் நிலைப்புக்கு வழியறியா

மாந்தருக்கு வாழ்க்கை நெறி இதுவெனக்கூறுதோ

வாசமில்லாப் பூவாய்வந்த இந்த அணுக்கள்

No comments:

Post a Comment