Wednesday, April 24, 2013

Eluthaatha Kaditham


எழுதாத கடிதம்

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மை மந்திரி ஒருநாள் கூறுகின்றார் .என்ன கடுமையான நடவடிக்கை என்றோ எப்படி எடுக்கப்படும் என்பதற்கெல்லாம் வழக்கம் போல ஒரு முன் வரைவுத் திட்டம் ஏதுமில்லை.மக்களை சமாதானப் படுத்தினால் சரி.அடுத்த நாள் ஒரு அமைச்சர் வெறும் சட்டத்தால் மட்டும் பாலியல் குற்றங்களைத் தடுத்துவிடமுடியாது என்று அவர்களுடைய இயலாமையை ஒப்புக்கொள்வது போல ஒரு கருத்தைச் சொல்கின்றார். .மக்களிடம் நன்மதிப்பை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பதற்காக செயல் திட்டம் ஏதுமில்லாமலேயே தன் விருப்ப எண்ணங்களை அள்ளி விடுவதே அரசின் கடமை என்பதைப் போல பெரும்பாலான அமைச்சர்கள் செயல்படுகின்றார்கள். வகுப்பில் பாடம் எடுப்பதற்கு முன்னர் தயார் படுத்திக்கொள்ளளாத ஆசிரியர் போல.

முன்பு இப்படித்தான் ஊழலை ஒழிக்கவே முடியாது என்று சொன்னார்கள் ,அவ்வளவு தான் மெகா ஊழல்கள் வந்து ஒட்டுமொத்த ஊழல்களையும் ஒன்றுமில்லை என்ற எண்ணத்தை தோற்றுவித்துவிட்டன.சட்டத்தால் ஒழிக்க முடியாது என்றால் நீதி மன்றங்கள் எதற்கு ,நீதிபதிகள் எதற்கு ? காவல்துறை எதற்கு? இராணுவம் எதற்கு?

சட்டத்தால் முடியும் ,சட்டத்தைப் படித்தவர்களாலும் அவர்களை ஆள்பவர்களாலுமே முடியாது.

தீமைகளை ஒழிக்க வேண்டும் என்று விரும்பினால் ,நாம் மட்டும் நல்ல பிள்ளையாக இருந்தால் மட்டும் போதாது .தீமைகளை ஒழிக்க நடவடிக்கை ஏதும் எடுக்காவி ட்டால்,அந்த நடவடிக்கையில் பாதிக்கப்படக்கூடிய முதல் ஆள் நீங்கள் தான் என்பதால் நடவடிக்கை எடுக்கப் பயப்படுகின்றீர்கள்  என்ற எண்ணத்தை மக்கள் மனதில் வளர்த்துவிடும் . அரசியல் என்பது குற்றங்களை வேடிக்கை பார்ப்பதில்லை. அது நிர்வாகம் .

இந்தியாவில்  பாலியல் குற்றங்கள் மட்டுமில்லை .களவு ,கொள்ளை,கொலை ,கள்ளக் கடத்தல்,கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விடுதல்,நில ஆக்கிரமிப்பு ,சைபர் குற்றங்கள் ......இன்னும் இன்னும் எவ்வளவோ குற்றங்கள்.90 சதவீதம் பதிவு செய்யப் படவில்லை .அதனால் குற்றங்கள் குறைவு என்று வாதடிக் கொண்டிருக்க முடியாது. இது கண்ணை மூடிக்கொண்டு சூரியன் மறைந்து விட்டான் என்று சொன்னது போல.  

No comments:

Post a Comment