Friday, April 5, 2013


1847 ல் ஹங்கேரி நாட்டில் பிறந்தவர் ஜோசப் புலிட்சர் (Joseph Pulitzer ) 1864 ல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார் .தொடக்கத்தில் அவர் ஒரு பத்திரிக்கைச் செய்தியாளராகத் தன்னார்வத்துடன் பணிபுரிந்தார். ஊழல் மற்றும் சட்ட விரோதச் செயல்களால் பெரிதும் துன்பப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கவேண்டும் என்ற ஆர்வத்தினால் இப் பணியில் அவர் தன்னை மேலும் ஈடுபடுத்திக் கொண்டார். மக்களுக்காக இவர் எழுப்பிய குரல் இவருக்கு மக்களிடையே ஒரு புகழை பெற்றுத் தந்தது .இன்னும் தீவிரமாகப் போராட அரசியலில் நுழைந்தார் . அமெரிக்காவின் மிசௌரி மாநிலத்திற்கு சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்

சட்ட விரோதமாக வெளியிடப்பட்ட போலிப் பரிசுச் சீட்டுக்கள், செயல்பட்ட சூதாட்டக் கூடங்கள், வரி ஏய்ப்புச் செய்யும் நிறுவனங்கள் போன்றவற்றைத் மட்டுப்படுத்தி தடை செய்தார் .மக்களிடையே வரவேற்பு இருந்ததால் அமெரிக்காவின் வேறு மாநிலங்களிலும் இச்சேவையைத் தொடர்ந்து செய்தார். குற்றப் பின்னணியுடைய இது போன்ற செயல்களைத் தீவிரமாகக் கண்காணித்து வந்ததால் ,ஒரு கால கட்டத்தில் அவர் தன் பார்வையை இழந்தார் .1889 ல் அவர் முழுக் குருடரானார் என்றாலும் சமுதாயக் குற்றங்களைத் தடுப்பதில் அவர் குருடராக ஒரு நாளும் இருந்ததில்லை.வாழ்நாள் முழுதும் அநீதியை எதிர்க்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார் .நீதியின் காவலராகத் திகழ்ந்தார்.

1911 ல் இறந்தார் . வாழ்நாளில் அவர் சேர்த்த பெருஞ் செல்வத்தைக் கொண்டு மக்களுக்காக பத்திரிக்கை உலகில் சிறந்த பணியாற்றிய சாதனையாளர்களை கௌரவிக்க ஒரு அறக்கட்டளையை நிறுவி அவர் பெயரால் புலிட்சர் பரிசை ஆண்டுதோறும் வழங்கி வருகின்றார்கள் . 2 மில்லியன் டாலர் செலவில் நியூயார்க் நகரில் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பத்திரிக்கையியலின் வளர்ச்சிக்காக ஒரு பள்ளியை நிறுவியுள்ளார்கள் . புலிட்சர் பரிசு,இசை,இலக்கியம் ,பத்திரிக்கையியல் போன்ற புலங்களில் 20 வகையான சாதனையாளர்களுக்கு $ 10000 வீதம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது .சமுதாயப் பணியில் சாதனை படைத்தோருக்கு தங்க மெடல் அளிக்கப்படுகின்றது .

சாதனை செய்வதற்கு மிகவும் உடலை வருத்திக் கொள்ளவேண்டாம் .அது மிகவும் எளிது. தன் சமுதாயக் கடமைகளை நேர்மையாகச் செய்தால் அதுவே செய்தற்கரிய சாதனை என்று இவருடைய வாழ்கை வரலாறு நமக்குச் சொல்லாமற் சொல்கின்றது .”மக்களாட்சியின் எதிர்காலத்தைச் சித்தரிக்கும் ஆற்றல் வருங்காலப் பத்திரிக்கையாளர்களின் எண்ணத்தில்தான் இருக்கிறது” என்று இவர் அடிக்கடி கூறுவார் .பத்திரிக்கைகள் சமுதாயத்தின் பாதுகாவலர்கள்.ஊழலும் ,குற்றங்களும் மிகுந்து வரும் நாட்டில் பத்திரிக்கைகளே எதிர்ப்புத் தெரிவிக்கும் முதல் குடிமக்களாக விளங்குகின்றன.பத்திரிக்கைகள் சுதந்திரமாக இயங்க அனுமதிக்காவிட்டால் அந்நாட்டில் ஊழலும்,குற்றங்களும் புரையோடிப் போய் மக்கள் சமுதாயம் சீரழிந்து போகும் என்பதற்கு புலிட்சரின் எளிய வாழ்கையே சான்று.

 

 

No comments:

Post a Comment