Monday, April 8, 2013

Vinveliyil Ulaa


விண்வெளியில் உலா -கொரோனா பொரியாலிஸ் (Corona Borealis)

இவ் வட்டாரத்தில் கண்ணுக்குத் தெரியும் விண்மீன்கள் எல்லாம் ஓர் அரை வட்டப் பரிதியில் இருப்பது போல அமைந்துள்ளன .பூட்டெஸ்சுக்கும் ஹெர்க்குலஸ்சுக்கும் இடையில் அமைந்துள்ளன .இதை ஒரு கிரீடம் போலக் கற்பனை செய்துள்ளனர் .இது வட கோளத்தில் இருப்பதால் வட கோளக் கிரீடம் என்பர் .கிரேக்க புராணத்தில் இது அரியடைன் என்ற இளவரசியால் அணியப்பட்டது .அவள் டையோனைசியஸ் என்ற கடவுளை மணந்த போது,கடவுள் இதை விண்ணில் தூக்கி எறிந்தார்.என்றும் என்றும் அப்போது அதிலுள்ள வைரங்கள் எல்லாம் சிதறி விண்மீன்களாகப் படிந்தன என்றும் கதை கூறுவார்கள் .

ஜெம்மா (Gemma) எனப்படும் ஆல்பா(α) கொரோனே பொரியாலிசின் தோற்ற ஒளிப் பொலி வெண் 2.2 ஆகும்.லத்தீன் மொழியில் ஜெம்மா என்றால் இரத்தினமாகும் .இது ஒரு மறைப்பு வகை இரட்டை விண்மீனாகும்.இதன் துணை விண்மீன் 17 நாட்கள் அலைவு காலத்துடன் சுற்றி வர ஒளிப் பொலி வெண் மறைப்பின் போது 0.1 ஆகத் தாழ்வுறுகின்றது.

நூ (ν) கொரோனே பொரியாலிஸ்,550 ஒளிஆண்டுகள் தொலைவிலுள்ள இரு இணை விண்மீன்களாகும் .பெருஞ் சிவப்பு விண்மீன் களான இவற்றின் ஒளிப்பொலிவெண் முறையே 5.2,5.4 ஆக உள்ளது .இவை ஒன்றையொன்று சுற்றி வரவில்லை என்பது வியப்பளிப்பதாக உள்ளது.

சிக்மா (σ) கொரோனே பொரியாலிசும் கவனத்தை ஈர்க்கக் கூடிய ஒரு விண்மீன் .இதில் 6.6 வினாடிகள் கோண விலக்கத்தில் இரு விண்மீன்கள் உள்ளன.இவ்வமைப்பு மிகவும் நீட்சியுற்ற நீள் வட்டச் சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது .இதன் சுற்றுக்காலம் 1000 நாட்கள் எனக் கண்டறிந்துள்ளனர்.இதிலுள்ள பிரகாசமான விண்மீன் நிறமாலையால் F8 வகையுடன் நிறமாலை வகை இரட்டை விண்மீனாக உள்ளது .இதன் துணை விண்மீன் ,முதன்மை விண்மீனை 1.14 நாளுக்கொருமுறை சுற்றி வருகின்றது .இது சிக்மா கொரோனே பொரியலிஸ் ஒரு மும்மீன் எனக் காட்டியுள்ளது .

 

கொரோனே பொரியாலிஸ் வட்டாரத்தில் இரு நோவா வகை விண்மீன்களை இனமறிந்துள்ளனர் .இவற்றை T மற்றும் R கொரோனே பொரியாலிஸ் என அழைக்கின்றார்கள் .நோவா வகை விண்மீன் என்பது மெதுவாக அழிந்து கொண் டிருக்கும் ஒரு வகை விண்மீனாகும்.இது அவ்வப்போது தன் மூலப்பொருட்களை வெளியில் உமிழ்ந்து வெளியேற்றுகின்றது .அடுத்தடுத்து மூலப்பொருளை உமிழும் கால இடைவெளிக்கும் ,பிரகாசத்தின் செழுமைக்கும் ஒரு தொடர்பு இருப்பதால் ,அதன் பிரகாசத்தைக் கொண்டு எப்போது மீண்டும் மூலப் பொருளை உமிழும் எனத் தீர்மானிக்க முடியும் .T கொரோனே பொரியாலிஸ் 1866,1946 ல் உமிழ்ந்தது.இனி அடுத்து 2026 ல் உமிழும் என நம்புகின்றார்கள் .நோவா வகை விண்மீன் அப்படி உமிழும் போது அதன் பிரகாசம் சற்று சிறிய அளவில் வேறுபடுகின்றது .மிகை நோவாவில் இது பெரிய அளவில் இருக்கும் .பிரகாசம் எவ்வளவுக்கு மிகக் குறைவாக மாறுகின்றதோ அந்த அளவிற்கு அடிக்கடி நோவா வகை விண்மீன் தன் மூலப் பொருளை உமிழும் . 2650 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள T கொரோனே பொரியாலிஸ் உண்மையில் ஓர் இரட்டை விண்மீனாகும் .இதில் குளிர்ந்த பெருஞ் சிவப்பு விண்மீனும் ,வெப்பமிக்க குறு வெள்ளை விண்மீனும் இருக்கின்றன என அனுமானித்துள்ளனர் .

இவ் வட்டாரத்தில் மற்றொரு நோவா வகை விண்மீனான R கொரோனே பொரியலிஸ் ஸின் இயக்கம் மிகவும் தாறுமாறாக இருக்கின்றது .பெரும்பாலும்.இது தோற்ற ஒளிப்பொலிவெண் 6 உடைய ஒரு விண்மீனா கவும் பிரகாசத்தில் மிகச் சிறிய அளவில் ,சீரற்ற ஏற்றத் தாழ்வுகளைக் காட்டுவதாகவும் இருக்கின்றது .ஆனால் சில சமயங்களில் இது திடீரென்று மங்கி ஒளிப்பொலிவெண் 10-15 உடைய ஒரு விண்மீன் போலக் காட்சி தருகின்றது.

சிறுமப் பிரகாசத்துடன் இந்த விண்மீன் சில மாதங்களிலிருந்து ஒரு சில வருடங்கள் வரை மாறுபட்ட அலைவு காலங்களில் நீடித்திருக்கின்றது .அதன் பிறகு அது தன் இயல்பு நிலையை அடைகின்றது .R கொரோனே பொரியாலிஸ்ஸின் பிரகாசம்

படிப்படியாகக் குறைந்து வருவது பிற நோவா அல்லது நோவா வகை விண்மீன்களிலிருந்து மாறுபட்டிருக்கின்றது.சிறுமப் பிரகாச நிலையில் ,இந்த விண்மீனின் நிறமாலையில் பிரகாசமான உமிழ்வு வரிகள் தென்படுகின்றன. R கொரோனே பொரியலிஸ் போன்ற விண்மீன்களின் வளி மண்டலம் முற்றிலும் மாறுபட்டது .இதன் வளி மண்டலத்தில் அதிக அளவில் கார்பன் இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர் .

No comments:

Post a Comment