Sunday, April 28, 2013

Vethith Thanimangal-Chemistry


வேதித் தனிமங்கள் - யெட்ரியம் (Yttrium)-கண்டுபிடிப்பு

ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானியான ஜோஹன் கடோலின் (Johan Gadolin ) என்பார் 1794 ல் இத் தனிமத்தைக் கண்டறிந்தார். யெட்டர்பி என்பது ஸ்வீடன் நாட்டில் உள்ள கனிமச் சுரங்கங்கள் நிறைந்த கிராமமாகும். இச் சிறிய கிராமம் யெர்பியம் ,டெர்பியம் ,யெட்டர்பியம் ,யெட்ரியம் ஆகிய தனிமங்களுக்குப் பெயர் சூட்டக் காரணமாக இருந்தது .

யெட்ரியம் ,யெட்ரியா என்ற மண்ணில் உள்ளது .மொசாண்டர் ,இதை வேதியியல் பகுப்பாய்விற்கு உட்படுத்தி ஆராய்ந்து அதில் மூன்று வெவ்வேறு தனிமங்கள் இருப்பதை அறிந்தார். அவை முறையே யெட் ரியம் .யெர்பியம் ,டெர்பியம் என்று பெயர் சூட்டப்பட்டன,யெட்ரியம் அருமண் உலோகங்கள் (rare earth) ஒன்று சேர்ந்து கிடைக்கும் பல கனிமங்களில் கிடைக்கின்றது.மோனசைட்டில் யெட்ரியம் 3 % உள்ளது. சந்திரனில் உள்ள மண்ணில் யெட்ரியத்தின் செழுமை பூமியைக் காட்டிலும் சற்று கூடுதலாக உள்ளது.

பண்புகள்

Y என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய யெட்ரியத்தின் அணுவெண் 39; அணு நிறை 88.91 ,அடர்த்தி 4340 கிகி/கமீ .இதன் உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 1763 K ,3273 K ஆகும் .

யெட்ரியம் வெள்ளி போன்று உலோகப் பொலிவு கொண்டது .காற்று வெளியில் ஓரளவு நிலையாக இருக்கின்றது .உலோகத்தை வளைக்கும் போது அதன் வெப்பநிலை 400 டிகிரி செல்சியஸ்க்கு அப்பாற்படுமானால் யெட்ரியம் பற்றிக் எரிகிறது .மிகவும் நேர்த்தியாகப் பொடிசெய்யப்பட்ட யெட்ரியத் தூள் காற்று வெளியில் மிகவும் நிலையற்றது .

பயன்கள்

யெட்ரியம் ஆக்சைடு ஈரோப்பியத்துடன் சேர்ந்து ஒளிர்மங்களை (Phosphors) த் தந்துள்ளது .இவை வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகளில் சிவப்பு

நிறம் தரப் பயன்படுகின்றன .யெட்ரியம் ஆக்சைடு கொண்டு யெட்ரியம் -இரும்பு கலப்புக் கனிப் (garnet) பொருட்களை உருவாக்கி அவற்றை நுண்ணலை வடிப்பான்களாகப் (Microwave filter) பயன்படுத்துகின்றார்கள் .யெட்ரியம் -அலுமினியம்-கடோலினியம் கலப்புக் கனிப் பொருள் முரண்பட்ட காந்தப் பண்புகளைக் கொண்டுள்ளது.யெட்ரியம்-இரும்பு கலப்புக் கனிப் பொருள்கள் ஒலிபரப்பி (transmitter) மற்றும் ஒலி ஆற்றல் வகை மாற்றிகளில் (transducers) மிகச் சிறப்பாகப் பயன் தருகிறது .யெட்ரியம் -அலுமினியக் கலப்புக் கனிப் பொருளின் கடினத் தன்மை (hardness ) 8.5 ஆக உள்ளது.இது இரத்தினக் கல்லாக ஆபரணங்களில் பயன்படுகின்றது .

குரோமியம் ,மாலிப்பிடினம்,ஸிர்கோனியம்,டைட்டானியம் போன்றவற்றில் உள்ளணுத் துகளின் பரும அளவைக் குறைக்கவும் அலுமினியம் மற்றும் மக்னீசிய கலப்பு உலோகங்களின் வலிமையை அதிகரிக்கவும் சிறிதளவு யெட்ரியம் (0.1 - 0.2 %) சேர்க்கப்படுகின்றது .வனேடியம் மற்றும் இரும்பியலற்ற உலோகங்களில் ஆக்சிஜனிறக்கியாக யெட்ரியம் பயன் தருகின்றது.பீங்கான் மற்றும் கண்ணாடிகளில் சேர்ப்பதினால் அவற்றின் வெப்பஞ் சார்ந்த விரிவாக்கம் குறைவதுடன்,அதிர்ச்சிகளையும் தாக்குப் பிடிக்கின்றது .யெட்ரியம், லேசர் ஊடகங்களில் ஒரு சேர்மானப் பொருளாக உள்ளது .யெட்ரிய அலுமினிய கனிப் பொருளில் (Y3Al5O12) நியோடைமையத்தை வேற்றுப் பொருளாகக் கலந்து லேசரில் 1.064 மைக்ரோ மீட்டர் அலை நீளத்தில் ஓரியல்(Monocromatic) லேசர் ஒளி உண்டாக்கப் பயன் படுத்துகின்றார்கள் .அணு ஆற்றல் தொழில் நுட்பத்தில் யெட் ரியம் ஒரு தடுப்புத் தடைப் பொருளாகப் பயன் தருகிறது

No comments:

Post a Comment