Tuesday, April 16, 2013

Vinveliyil Ulaa


பூட்டெஸ்

தொன்னூறுக்கும் அதிகமான விண்மீன்களைக் கொண்டுள்ள பூட்டெஸ் வட்டார விண்மீன் கூட்டம் ஒரு நீட்சியுற்ற பகுதியாகும் .இது அர்சாமேஜர் வட்டாரத்தால் சுட்டிக்காட்டப்படும் கரடியை மேய்க்கும் ஒரு மனிதனாகக் கற்பனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வட்டாரத்தின் முதன்மையான விண்மீன் ஆர்க்டூரஸ்(Arcturus) என அழைக்கப்படும் ஆல்பா(α) பூட்டிஸ் ஆகும்.கிரேக்க மொழியில் இதற்கு கரடியின் பாதுகாவலன் என்று பொருள்.27 ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலுள்ள இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் - 0.05 ,அதாவது விண்ணில் தெரியும் பிரகாசமான 20 விண்மீன்களுள் இது நான்காவதாக உள்ளது.கலிலியோ காலத்திய வானவியல் வல்லுனரான பிரான்சு நாட்டின் மோரைன் (Moraine) என்பார் 1635 ல் தொலை நோக்கியின் உதவியுடன் இதைக் கண்டறிந்தார்.பகல் பொழுதிலும் இது தெரிகிறது . பகல் பொழுதில் இனமறியப்பட்ட முதல் விண்மீன் இதுவேயாகும் .

ஆர்க்டூரஸ் பெருஞ்சிவப்பு விண்மீனாக உள்ளது .நமது சூரியனை விட 100 மடங்கு ஒளிர்கிறது என்றாலும் இதன் புறப்பரப்பு சூரியனைவிடக் குளிர்ச்சியானது .5000 K என்ற வெப்பநிலை நெடுக்கையில் உள்ளது. சூரியனின் விட்டத்தைப் போல 26 மடங்கு விட்டமுள்ள ஆர்க்டூரஸ் நமக்கு அருகில் இருக்கும் ஒரு பெரு விண்மீனாகும் .இதன் பிரகாசம் லைரா(Lyra)விலுள்ள வேகா,ஔரிகா(Auriga)விலுள்ள காபெல்லா போன்ற விண்மீன்களுக்கு இணையானது .ஆர்க்டூரஸ் தனித்த தன்னியக்கம் (proper motion) கொண்டுள்ளது.ஏறக்குறைய 800 ஆண்டுகளில் நிலவு விட்டத்தின் தோற்ற விட்டத்திற்கு இணையான கோண விலக்கத்தைப் பெறுகிறது .ஆர்க்டூரஸ்ஸின் தன்னியக்கத்தை எட்மண்ட் ஹாலி என்பார் முதன் முதலாகக் கண்டறிவித்தார். இந்த விண்மீனுக்கு நம்மவர்கள் இட்டபெயர் சுவாதி ஆகும் .

பல்செரிமா (pulcherrima) என்ற எப்சிலான்(ε) பூட்டிஸ் ஓர் அழகான இரட்டை விண்மீனாகும் .இதைப் பகுத்துணர்வது கடினமாகும் .வெறும் கண்களுக்கு இதன் ஒளிப்பொலிவெண் 2.4 ஆக உள்ளது .தொலை நோக்கியால் பார்க்கும் போது ஒளிப்பொலிவெண் 3 கொண்ட பெருஞ்சிவப்பு முதன்மை விண்மீனையும் நீலப்பச்சை நிறமுள்ள ஒளிப்பொலிவெண் 5 உடைய மிக நெருக்கமான துணை விண்மீனையும் காணமுடிகின்றது .இதில் முதன்மை விண்மீனின் நிறமாலை , அதை ஒரு நிறமாலை இரட்டை விண்மீனாக உணர்த்தியுள்ளது.எனவே இது ஒரு மும்மீனாகும் .

இவ்வட்டாரத்தில் பல இரட்டை விண்மீன்கள் உள்ளன. பை(π) பூட்டிஸ் 4.9 மற்றும் 5.8 ஒளிப்பொலிவெண்ணுடன் கூடிய இரு நீல நிற வெப்பமிக்க விண்மீன்களைக் கொண்ட ஓர் இரட்டை விண்மீனாகும் .இவற்றின் கோண விலக்கம் 5.5 வினாடிகளாகும் .நிறமாலை ஆய்வுகள் இரட்டை விண்மீன்கள் ஒவ்வொன்றும் இரட்டை விண்மீன்கள் எனத் தெரிவித்துள்ளன .எனவே இது ஒரு நால்விண்மீனாகும்.

சை(ξ) பூட்டிஸ் ஓர் இரட்டையே .இதில் 4.7 மற்றும் 7.0 ஒளிப்பொலிவெண் கொண்ட ,நிற அழுத்ததால சிறிது வேறுபட்ட மஞ்சள் - ஆரஞ்சு நிறமுடைய இரு விண்மீன்கள் 156 ஆண்டுகள் சுற்றுக் காலத்துடன் இயங்கி வருகின்றன .இவைகளுக்கிடையே யான கோண விலக்கம் 5.3 வினாடிகலாகும் .அதாவது அவைகளுக்கு இடைப்பட்ட தொலைவு 32 வானவியல் அலகுகளாகும் .இவை 150 ஆண்டுகள் சுற்றுக் காலத்துடன் ஒன்றை ஒன்று சுற்றிவருகின்றன .

சீட்டா(ζ) பூட்டிஸ் ஏறக்குறைய சமமாக 4.6 ஒளிப்பொலிவெண் உடைய வெப்பமிக்க நீல நிற விண்மீன்களைக் கொண்ட இரட்டை விண்மீன்.இவை நெருக்கமாக இணைந்திருப்பதால் இவற்றின் கோண விலக்கம் 1.2 வினாடிகளாக உள்ளது .இதன் சுற்றுக் காலம் 123 ஆண்டுகள் என மதிப்பிட்டுள்ளனர் .

மியூ(μ) பூட்டிஸ் பல விண்மீன்களின் இணையாகும் பைனாகுலர் இதை 4.3 மற்றும் 6.5 ஒளிப்பொலிவெண் உடைய இரட்டை விண்மீனாகக் காட்டுகின்றது .இதில் மங்கலான விண்மீன் ஓர் இரட்டை விண்மீன் .இதன் துணை விண்மீனின் ஒளிப்பொலிவெண் 8 ஆகவும் சுற்றுக் காலம் 260 ஆண்டுகளாகவுமுள்ளது .49 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள டௌ(τ) பூட்டிஸ் ஏறக்குறைய சூரியனைப் போல தோற்றம் தருவதால் இதற்கு கோள்கள் இருக்கலாம் என்று கருதுகின்றார்கள் இது நமது வியாழன் போன்ற நிறையுடன் விண்மீனைச் சுற்றி 323 மில்லியன் கிலோமீட்டர் விட்டமுள்ள வட்டப்பாதையில் இயங்கி வருவதாகக் கூறுகின்றார்கள் .

No comments:

Post a Comment