Thursday, April 25, 2013

Eluthaatha Kaditham


எழுதாத கடிதம்

இந்தியா எதிர்பார்த்த மாதிரி முன்னேறாததற்குக் காரணம் இந்தியர்கள் தாம் என்பதை ஜப்பானியர்கள் என்ன செய்தார்கள் என்பதைப் படித்தோ, சீனர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதைப் பார்த்தோ நாமே புரிந்து கொள்ளமுடியும்.பொதுவாக இந்தியர்கள் உண்மையான உழைப்பிற்கு எப்போதுமே உண்மையான மதிப்புக் கொடுப்பதில்லை.உழைப்பைத் தவிர்ப்பதற்கு ஏதாவது நொண்டிச் சாக்கு கிடைத்து விட்டால் போதும். உழைப்பை மறந்து விட்டு உல்லாசம் தேடுவார்கள் .உழைப்பு எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும் அதைத் தள்ளிப் போடுவதற்குத் தயங்க மாட்டார்கள் .

கோயில் திருவிழா என்றால் உழைப்பில்லா நாள் .கிரிகெட் போட்டி வந்து விட்டால் உழைப்பில்லா நாள் .ஒரு நாள் பண்டிகை வந்தால் ஒரு வாரம் உழைப்பில்லா நாள்.பந்த் நடந்தால் உழைப்பில்லா நாள்.கூட்டம் ,கலை நிகழ்ச்சி நடந்தால் உழைப்பிற்கு ஓய்வு.உழைப்பை வெறுத்தவர்கள் அதை துறப்பதற்கு அதிகத் தொலைவு இல்லை.

உழைக்க ஊதியம் வாங்கிக் கொண்டு உழைக்காமல் இருப்பவர்கள் உழைப்பதற்கு மக்களிடம் மற்றுமொரு சம்பளம் கேட்பார்கள். இரண்டாம் சம்பளம் கொடுக்காவிட்டால் ஒருநாளும் உழைக்க முன்வர மாட்டார்கள். தங்களைத் தற்காத்துக் கொள்ள இவர்கள் நாளடைவில் உயர் அதிகாரிகளுக்கு இடைத் தரகர்களாக மாறிவிடுவார்கள் . நம்மை நாமே சுரண்டும் பழக்கத்தை விட்டொழிக்காதவரை யாருக்கும் உண்மையான உழைப்பின் மீது நம்பிக்கையும் ,பக்தியும் வருவதில்லை .

இன்னொருவகை உழைக்கா இளஞர்கள் இருக்கின்றார்கள் .உழைக்கத் தகுந்த வேலை கிடைக்கவில்லை என்று காலமெல்லாம் வேலை தேடிக் கொண்டே இருப்பார்கள். உணவு இல்லையென்றால் எந்த உயிரினமும் வாழ்கைப் போராட்டத்தில் எத்தகைய முயற்சியும் எடுத்துக் கொள்ளத் தயங்குவதில்லை.ஒரு காலகட்டத்தில் மனம் வெறுத்து சமுதாயத்தில் தீய செயல்களைச் செய்யத் தொடங்கி விடுவார்கள் .படித்த இளஞர்கள் தீய செயல்களில் புதுமைகளைப் புகுத்தி விதவிதமாகச் செய்வார்கள். .காட்டாற்று வெள்ளம் வீணாகக் கடலில் போய்க் கலப்பதற்கு முன்னால் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிய வேண்டும்.  

வேலை வாய்ப்பு இந்தியாவில் நிறையவே இருக்கிறது. நிதி இல்லையென்று வேலைவாய்ப்புக்களைக் குறைத்து விடுவதால் பலர் படித்திருந்தும் ,உழைக்க வலுவிருந்தும் சும்மாவே இருக்க நேரிடுகின்றது. சீனாவில் முதியவர்களுக்குக் கூட வேலை வாய்ப்புக் கொடுக்கின்றார்கள். எல்லோருக்கும் குடிசைத் தொழில் மூலம் வேலை வாய்ப்புக் கொடுப்பதால் உலக சந்தையில் அவர்களால் முன்னிலை வகிக்க முடிகின்றது.

 வேலை வாய்ப்புக்களை உருவாக்க நிதியொன்றும் அவசியத் தேவையில்லை.சுயதொழில் ,கிராமப்புறக் கல்வி ,சுகாதாரப் பணிகள் இன்னும் எவ்வளவோ துறைகளில் நாம் மேம்பட வேண்டியிருக்கிறது . வெறும் பயிற்சி அளித்து விட்டால் மட்டும் போதாது அதை நடைமுறைப்படுத்தி பயனீட்ட களங்களையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்..மின்சாரம்,எரிபொருள் தட்டுப்பாடு,விரிவான சாலை போக்குவரத்து இல்லாமை,மலிவான மூலப் பொருள் அருகில் கிடைக்காமை,உற்பத்திப் பொருளைச் சந்தைப் படுத்த உதவி போன்றவை கிடைக்காதபோது வெறும் பயிற்சி மட்டும் நம்பிக்கையூட்டுவதில்லை.

 உழைக்கும் நாளெல்லாம் உறங்கும் நாளாகவும் ,உழைக்கும் நேரமெல்லாம் ஓய்வு நேரமாகவும் மாறிவரும் சூழலில் இந்தியா மேலும்  விழுந்து விடாமல் இருந்தால் சரி. மக்கள் மனதில் உண்மையான எழுச்சியை ஏற்படுத்தி மக்களோடு மக்களாக நின்று,சமுதாயத் சீர்திருத்தங்களை செய்யவேண்டிய கடைசிக் கட்டம் இது. இதையும் விட்டுவிட்டால் காட்டில் இருக்கும் புதை குழியில் சிக்கிக் கொண்ட உயிரினம் போல மெல்லமெல்ல அமிழ்ந்து போகவேண்டியதுதான்.நான் மட்டுமில்லை நீயும்தான்.

No comments:

Post a Comment