Sunday, April 21, 2013

Philosophy


அணுவும் உலகியல் வாழ்க்கையும்

மனிதர்களுக்கு உலகியல் வாழ்க்கையின் மெய்ப்பொருளை உணர்த்துவதற்குத்தான் இப்பிரபஞ்சமெங்கும் அணுவைப் படைத்தானோ என்று எண்ணத் தோன்றுகின்றது. அண்டத்தை மட்டுமல்ல மனிதர்களின் உறவுகளையும் ,உணர்வுகளையும் கூட இந்த நுண்ணிய அணுவுக்குள் புகுத்தி அதன் மூலம் மனிதர்களுக்கு உலகியல் வாழ்க்கைத் தத்துவத்தை சுட்டிக்காட்டப் இயற்கை பயன்படுத்திக்கொள்கிறது என்பதை அணுக்களின் செயல்பாடுகளைக் கொண்டு அறிந்து கொள்ள முடிகிறது.

ஒவ்வோர் அணுவும் இப்பிரபஞ்சத்தில் மற்ற அணுக்களைச் சார்ந்தே இருக்கின்றன .ஒரு குறிப்பிட்ட வகை அணுக்கள் ஒரு குறிப்பிட்ட வகை அணுக்களுடன் சேர்வதும்,விலக்கிக் கொள்வதும் அணுக்களிடம் காணப்படுவதால் உயிரற்றவையாய் இருந்தாலும் அவைகளுக்குள்ளும் எதோ ஒரு வகை உணர்வு இருப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. அணுக்களால் ஆன மூலக்கூறுகளுக்கு உணர்வுத்திறன் தனி அணுக்களைக் காட்டிலும் பன்மடங்கு அதிகம். மனிதர்களின் உணர்திற ன் என்பது உயிரியல் மூலக்கூறுகளின் உணர்திறனே.

அணுக்களெல்லாம் அடிப்படைத்துகள்கள்(Elementary particles) எனப்படுகின்ற மூலத்துகள்களால்(Fundamental particles) ஆனவை.இவையாவும் ஆற்றலிலிருந்து இயற்கை விதிக்கு உட்பட்டு உண்டானவை.ஆற்றல் என்பது பரம்பொருள் .எங்கும் நிறைந்தவை .எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி இருப்பவை .எல்லாப் பொருட்களும் ஆற்றலிலிருந்து தோன்றுகின்றன .பின் அழிந்து ஆற்றலோடு ஐக்கியமாகின்றன மனித வாழ்க்கை போல.

இறைவன் ஒருவனே என்பதைப் போல ஆற்றலும் ஒன்றுதான் .ஆற்றலில் பிரிவுகள் இல்லை. ஆற்றல் மூலங்களில் வேண்டுமானால் பிரிவுகள் இருக்கலாம்.

ஆற்றலிலிருந்து உண்டான அடிப்படைத் துகள்கள் அப்படியில்லை .ஒன்றையொன்று நேசிக்கின்ற நேர் மற்றும் எதிர்மின் துகள்களாக இருக்கின்றன.நெடுந்தொலைவு விலகியிருந்தாலும் அவை ஒன்றையொன்று இனமறிந்து கொள்கின்றன.வாழ்கையின் அடிப்படை அன்பு என்பதையே இது போதிக்கின்றது.

அணுக்கள் மொத்தத்தில் மின்னூட்டமற்றவை .மின் நடுநிலையில் உள்ளன .இருப்பினும் அவை ஒன்றையொன்று மென்மையாக நேசிக்கின்றன (Newton’s gravitational law) .எந்தவொரு அணுவும் எந்தவொரு அணுவையும் வெறுத்து விலக்கிக் கொள்வதில்லை.மனித நேயத்தைச் சுட்டிக்காட்டத்தான் இந்த அணு நேயமோ .தான் படைத்த இந்த உலகில் மனிதர்கள் எப்படிவாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்குத்தான் இந்த அணுக்களைப் படைத்தானோ.

ஒரு சில குறிப்பிட்ட இன அணுக்கள்(ஹைட்ரஜன் ,ஆக்சிஜன் ) தன் இன அணுக்களோடு கெட்டியாக ஒட்டிக் கொள்ளும்..இது உயிரினங்களின் இன ஒற்றுமையைக் குறிப்பிடுவதாக இருக்கின்றது .சில குறிப்பிட்ட இன அணுக்கள் வேறு சில குறிப்பிட்ட இன அணுக்களுடன் பிணைத்துக் கொள்ளும். இது மனிதர்களின் உலகியல் வாழ்க்கையைச் சுட்டிக் காட்டுவதாக இருக்கின்றது.சுகங்களைப் பரிமாறிக் கொண்டு இல்லறத்தில் ஈடுபடுவதே இனிய வாழ்க்கை என்பதை தன் எலெக்ட்ரான்களை பரிமாற்றிக் கொள்வதால் அணுக்கள் ஏற்படுத்திக் கொள்ளும் பிணைப்பு  போன்றதே இந்த வாழ்க்கை ஒப்பந்தம் என்பதைத் தெரிவிப்பதற்குத்தானோ.மற்றொரு வகையான பந்தமொன்றும் இருக்கின்றது என்பதைச் சகப் பிணைப்பு(Covalent bond) மூலம் இதே அணுக்கள் சுட்டிக் காட்டுகின்றன . அது சமமாக ஈந்து சமமாகப் பகிர்ந்து கொள்வதால் வரும் பந்தம் .இது மக்களின் சமுதாயக் கடமைகளை உணர்த்துவதாய் இருக்கின்றது .சாகாத சமுதாயத்திற்கு தம் பங்கிற்கு ஒவ்வொருவரும் உழைத்து தம் சமுதாயக் கடமைகளைச் செய்து அதன் பலனைச் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளவேண்டும் என்பதைச் சொல்லாமற் சொல்கிறது . அப்படிப்பட்ட சமுதாய வாழ்கையே இயற்கை விரும்பும் வாழ்க்கை என்பதை அறிவுறுத்துகின்றனவோ இந்த அணுக்கள்.

No comments:

Post a Comment