Friday, April 19, 2013

Mind without Fear


Mind without Fear

நம்மிடம் தோன்றும் எண்ணம்,தொடரும் ஆர்வம்,தொடங்கப்படும் செயல்கள் அனைத்தும் எப்போதும் முதன்மை நோக்கத்தை நோக்கியே பயணிக்குமாறு சிறிதும் சலனப்படாத மனதோடு உறுதியாக இருந்தால் வெற்றி எளிதாகக் கிடைக்கக் கூடியதாகிவிடும்.இடையிடையே வெவ்வேறு எண்ணங்களின் தூண்டுதலால் வெவ்வேறு பணிகள் இருந்தாலும்,அவையெல்லாம் துணைப் பணிகளே .முதன்மைப் பணிக்கு ஓய்வு கொடுத்துவிடாமல்,அல்லது மனதிலிருந்து நிரந்தரமாக அகற்றி விடாமல் துணைப் பணிகளின் தாக்கத்தை தாங்கிக் கொள்ள வேண்டும். முதன்மைப் பணிகள் தொடர்பான சிந்தனைகள் எப்போதும் எண்ணத்தில் வளருமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.துணைப்பணிகளே கூடாது என்பதில்லை,துணைப்பணிக்காக முதன்மைப் பணியின் முன்னேற்றத்தை நிறுத்திவிடக்கூடாது. இது எப்படியென்றால்,மலையில்பிறக்கும் நதியின் நீர் வளைந்து வளைந்து நெடுந்தொலைவு,மேடுபள்ளம் பாராது கடந்தாலும் எப்போதும் கடலை நோக்கியே பயணிப்பதைப் போன்றது .

கடலைச் சென்றடைவது நதியின் முதன்மைப் பணி .வழியில் குறுக்கிடும் நிலங்களை வளப்படுத்துதல் அதன் துணைப் பணி .துணைப் பணியையும் விடாது செய்துகொண்டே முதன்மைப் பணியைநிறைவேற்றிக்கொள்வது அதன் சிறப்பு . வற்றாத நதிநீர் போல துணைப் பணியையும் முதன்மைப் பணியோடு இணைந்து செல்லுமாறு செய்து கொண்டால்
வாழ்கையில் இரட்டிப்பு வெற்றிதான்.

எண்ணங்களை ஒருமுகப்படுத்தி சிந்திக்கப் பழகவேண்டும்.பல்வேறு எண்ணங்கள் பல்வேறு ஆசைகளின் எதிரொலிப்பு.முதன்மைப் பணியில் கொள்ளும் கவனத்தை இது சிதறடித்து விடும்.கணினியில் தேவையில்லாத பதிவுகளை அவ்வப்போது அழித்து விடுவதைப் போல, தேவையில்லாத எண்ணங்களை மீண்டும் மீண்டும் மேயும் பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும் .அப்படியொரு பழக்கத்தை கைவசப்படுத்திக் கொண்டால் வாழ்கையில் வெற்றிப் பயணத்தை பயமின்றித் தொடரலாம்- அமைதியான நதி போல.

 

No comments:

Post a Comment