Saturday, August 31, 2013

Eluthahta Kaditham

எழுதாத கடிதம் 

ஸ்ரீலங்காவின் போர் குற்றங்கள் பற்றி .நா சபைதான் அவ்வப்போது தெரிவித்து உலக நலனுக்காக கண்டனக் குரல் செய்கின்றது..நா வின் பிரதிநிதியாகச் சென்ற நவநீதம் பிள்ளையையே கேலி செய்து அனுப்பி வைத்திருக்கின்றார்கள் .இது அவர்கள் குற்றவாளிகள் என்று உறுதிசெய்வதற்குப் போதுமானதாகும்.ஆனால் இந்தியாவோ அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல பொறுமையாக இருந்துவருகின்றது. பொருளில்லாத பொறுமை. காந்தியடிகளின் அகிம்சையை வெளிநாட்டுப் பிரச்சனைகளில் காட்டுபவர்கள் உள்நாட்டுப் பிரச்சனைகளில் முற்றிலும் மாறுபட்டவர்களாக இருக்கின்றார்கள்.

இனப் படுகொலை,தமிழர்களின் உடைமை மற்றும் உரிமைப் பறிப்பு ,தமிழ்ப் பெண்களுக்கு பாதுகாப்பின்மை ,தமிழர்களை அடிமைகளாகப் பயன்படுத்துதல்,இராணுவத்தைக் கொண்டு அடக்குமுறை,போதிய உணவு,  குடிநீர் மற்றும் மருத்துவ வசதி வழங்காமை போன்றவை நீங்கலா இந்திய மீனவர்களுக்கு ஒவ்வொருநாளும் இழைக்கும் கொடுமைகள் எனப் பலப்பல 
குற்றங்களைச் செய்துவிட்டு ஏதுமறியாப் பிள்ளைப்போல ஸ்ரீலங்கா இருக்கின்றது.வல்லரசாகப் போகின்றோம் என வீர வசனம் பேசுகின்ற இந்தியா மௌனம் சாதிக்கின்றது.அவசரம் காட்டக் கூடாதுதான் அதற்காக ஏதும் செய்யாமல் சும்மா இருப்பதும் கூடாது.சும்மாவே இருப்பதும்,அவசரப்படாமல் இருப்பதும் ஒன்றல்ல.ஒரு தீயவனுக்கு தீய எண்ணம் கொண்டவன்தான் உதவி செய்வான் என்பார்கள் ,இது நாம் அரசியல்வாதிகள் விஷயத்தில் உண்மையாகி விடக்கூடாது.

இன்னும் .நா வால் அறிக்கை சமர்ப்பிக்கப் படாத நிலையில்
கூட சிரியாவின்  ராசாயன ஆயுதங்களால் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் இருக்கின்றது என்று அமெரிக்கா சிரியா மீது போர் தொடுக்க நினைக்கின்றது. ஸ்ரீலங்காவால் நாம் மீனவர்களின் வாழ் வாதாரமே கேள்விக்குறியாகி விட்டபோதும் இந்தியா மௌனமாய் இருப்பது வேடிக்கையாக இருக்கின்றது.

இராணுவம் அரசியல்வாதிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கும் சுதந்திர தினம்,குடியரசு தினங்களில் வீரநடை  போடுவதற்கும்.நாட்டின்

எல்லையைக் காப்பதற்கும் மட்டுமில்லை.நாடு முக்கியம், நாட்டு மக்கள் அதைவிட முக்கியம்.நாட்டு மக்களை விட்டுவிட்டு நாட்டை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகின்றீர்கள் ?

Friday, August 30, 2013

Creative thoughts

Creative thoughts

குற்றம் நடந்துவிட்டால் யார் குற்றவாளி என்று கண்டுபிடிப்பது இருக்கட்டும் .குற்றத்தைப் பதிவு செய்வதற்கே பல தடைகள் இருக்கின்றபோது நாட்டில் குற்றங்கள் பெருகாமல் எப்படி இருக்கும் ?

குற்றவாளிகளைப் பிடித்து தண்டனை வழங்குவதை விட குற்றவாளி கொள்ளையிட்ட பொருளிலிருந்து பங்கு பெறுவதிலேயே காவலர்களும் அரசியல்வாதிகளும் அதிக அக்கறை காட்டி வருகின்றார்கள்.

நான் இந்தியாவில் பிறந்ததைப் பெருமையாகக் கருதுகின்றேன். ஆனால் இங்கே வாழும் போது அந்தப் பெருமையை இழந்துவிட்டேன் என்று பலருடைய எண்ணங்களில் கேளாஒலியில் ஓர் அவல ஓசை ஒலித்துக் கொண்டுதானிருக்கின்றது. கேளாஒலி என்பதால் கேட்கவில்லை என்பதற்காக அவலத்தை மறுத்து விடமுடியாது .
நான் மீண்டும் இந்தியாவிலேயே பிறக்க விரும்புகின்றேன் என்று பெரும்பாலானோர் மனப்பூர்வமாகச் சொன்னால் அதுதான் இந்தியா உண்மையிலேயே ஒரு சிறந்த நாடு என்று ஒப்புக் கொள்ளத் தகுந்த சான்றாகும்.
  
மக்களை மக்களே ஏமாற்றிப் பிழைக்கத் துணிந்து வருகின்றார்கள் என்றால் மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு பலவீனமாகி வருகின்றது என்று பொருள்.

இந்தியர்கள் செய்த தவறுகளுள் ஒன்று கடவுளை வெளியில் தேடுமாறு மக்களைப் பழக்கப் படுதித்தியதுதான்.கடவுளைத் தேடித் தேடி அப்படியொன்றும் வெளியில் இல்லையென உறுதி செய்துகொண்டவர்கள் மெல்லமெல்ல குற்றங்களைச் செய்ய துணிவுக்கொள்கின்றார்கள்.அதனால் ஒரு காலத்தில் சமுதாயத்திற்கு பாதுகாவலாயிருந்த ஆன்மிகம் இன்றைக்குப் பயனின்றிப் போய் குற்றங்கள் பெருகிவருகின்றன.

மனம் இருப்பது மனிதனுக்குள்ளே என்றாலும் மனவெளி பிரபஞ்சத்தை விடவும் பரந்தது அதன் நிலைகட்ட வெளியில் (Phase space) எண்ணற்ற எண்ணங்களைப் பதிவுசெய்து நிரப்ப முடியும்.அதில் தேவையான எண்ணங்களை விட தேவையில்லாத எண்ணங்களே அதிகம்.மனம் மனிதனின் செயல் அலுவலமாக இல்லாது எண்ணங்களின் குப்பைத் தொட்டியாக மாறி வருவதால் மனிதர்களின் தரம் குன்றி வருகின்றது 


Mind without fear

Mind without fear
நம்முடைய எதிர்காலத்தை நாமே ஏன் முடக்கி வைக்கவேண்டும்? தலைவிதியின் காலடியில் மண்டியிட்டு அடிமையாக ஏன் இருக்கவேண்டும்? உண்மையான எதிர்பார்ப்புகள் நம்முடைய எதிர்காலத்தை சிறப்பாக அமைக்குமே .

தலைவிதி என்றால் உன் வாழ்க்கையை ஊர் பேர் தெரியாத அடையாளம் காணமுடியாத ஒருவரிடம் அடமானம் வைத்துவிட்டாய் என்று பொருள்.தலைவிதி மனிதனின் சோம்பல் ,முயற்சியின்மை.  அதனால் முன்னேற்றம் தாமதப்படுவதுடன் இல்லாமலும் போய்விடலாம். எதிர்பார்ப்புகள் எண்ணங்களின் நாற்றாங்கால்.
புதிய வார்ப்புகளுக்கு உருவங் கொடுக்கக் கூடிய பட்டறை, நம்மை நாமே தூண்டிக் கொள்ள உதவும் நெம்புகோல். தலைவிதி என்றால் மாற்றமில்லாத பழைய,முன் திட்டமிட்ட மாற்றங்களுக்கு நீ, எதிர்பார்ப்பு என்றால் உனக்கு புதுப் புது அர்த்தமுள்ள மாற்றங்கள். தலைவிதியால் நொந்து கொள்பவர்கள் முன்னேற்றத் தடைகளை எதிர்க்கத் துணிவில்லாதவர்கள். தங்கள் தோல்விக்கு தலைவிதியே காரணம் என்று சமாதானம் கூறுவார்கள். தான் எதைச் செய்வதற்குத் தகுதியுடைவன் என்பதை முடிவு செய்வது தலைவிதியே என்பர்.என்ன முயன்றாலும் தலைவிதிக்கு மீறி எதுவும் செய்ய இயலாது என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வதோடு மற்றவர்களையும் தடுப்பார்கள். அரியணையில் அமர வேண்டிய முயற்சியை கீழே தள்ளிவிட்டு தானே அமர்ந்து முடி சூட்டிக் கொள்ள நினைக்கும் தலைவிதி ஒன்றும் நலங் காக்கும் காவலன் இல்லை.முயற்சி விட்டுக் கொடுத்ததால்தான் தலைவிதி முயன்று பார்க்கின்றது .

வாழ்வின் ஒரு பகுதியில் முக்கியமாகப் படித்து முடித்து விட்டு சம்பாதிக்கத் தொடங்கும் காலத்தில் நாம் கண்ணோட்டத்தை மாற்ற முடிந்தால் அதுவே மகத்தான தொடர் மாற்றங்களுக்கு ஒரு முன்னோடியாக அமையும்.