Sunday, August 4, 2013

Vethith thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள் ஆண்டிமோனி (Antimony)-கண்டுபிடிப்பு 
17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆண்டிமோனியை அதன் கூட்டுப் பொருட்களின் பயன்களினால் மக்கள் அறிந்தனரே ஒழிய அதை ஓர் உலோகமாக நினைக்கவில்லை .இது பூமியில் அதிகமாகக் கிடைக்கவில்லை எனினும் 100 க்கும் மேற்பட்ட கனிமங்களில் சிறிதளவு சேர்ந்துள்ளது .இயற்கையில் மிக அரிதாக தனி உலோகமாகவும் கிடைக்கின்றது .சிடிப்னைட்(Stibnite) என்ற கந்தகக் கலப்புக் கனிமமாகவும்,ஆண்டிமோனி புளூம்(Antimony bloom) என்ற ஆக்சைடாகவும் பல கன உலோகங்களின் ஆண்டிமோனைடாகவும் கிடைக்கின்றது .போர்னியோ,ஜப்பான் நாடுகளில் அதிகம் கிடைக்கின்றது.

இத் தனிமத்தின் பெயர் 'தனிமையின் எதிரி 'என்ற பொருள்படும் கிரேக்க மொழிச் சொல்லான ஆண்டிமோனோஸ் (Antimonos),இலத்தீன் மொழிக்கு ஆண்டிமோ னியமாக உருமாறி அதிலிருந்து நிலைபெற்றது.

கிராபைட் குப்பியில் இரும்புக் கழிவுகளுடன் சிடிப்னைடைப் பொடித் தூளாக்கிக் கலந்து சூடுபடுத்த உருகிய பெரஸ் சல்பைடு உருகிய ஆண்டிமோனியின் மீது மிதக்க அவற்றைத் தனித்துப் பிரித்தெடுக்க முடிகிறது .கார்பன் மூலம் ஆக்சிஜனிறக்க வினையைத் தூண்டி ஆண்டிமோனி ஆக்சைடிலிருந்து ஆண்டிமோனி உலோகத்தைப் பெறமுடியும் .சிறிதளவு பொட்டாசியம் நைட்ரேட் டுடன் மீண்டும் உருக்கி  அதிலுள்ள ஈயம் மற்றும் கந்தகம் போன்ற வேற்றுப் பொருட்களை ஆக்சிஜனேற்றம் செய்து ஆண்டிமோனியைத் தூய்மைப் படுத்த முடியும் .
பண்புகள் 
இதன் வேதிக் குறியீடு Sb ஆகும் .இதன் அணுவெண் 51 ,அணுநிறை 121.75 அடர்த்தி 6620 கிகி/கமீ .உருகு நிலையும்,கொதி நிலையும் முறையே 903.7 K ,1713 K  ஆக உள்ளன .இது வெள்ளியைப் போன்று வெண்மையாகப் பளபளக்கிறது .இது எளிதில் உடைந்து நொறுங்கக்  கூடியதாகவும் இருப்பதால் எளிதாகப் பொடியாக்கிக் கொள்ள முடிகின்றது .அறை வெப்ப நிலையில் நிலையானது என்றாலும் பழுக்கச் சூடாக்கும் போது ஒளிர் விட்டு எரிந்து மணமற்ற ட்ரை ஆக்சைடு வெண் புகையை எழுப்புகின்றது .கந்தகத்துடனும் ஹாலஜன்களுடனும் நேரடியாக இணைகிறது .குளோரின் அடைக்கப்பட்ட ஜாடியில் தீப் பொறிகளைப் பொழிகிறது .நீர்த்த அமிலங்கள் ஆண்டிமோனியைப் பாதிப்பதில்லை .ஆனால் சூடான அடர் மிகு அமிலங்களினால் அரிக்கப்படுகின்றது .பாஸ்பரஸ் ,ஆர்செனிக் ,வெள்ளீயம் போல ஆண்டிமோனி யும் பல வேற்றுருக்களைக் கொண்டுள்ளது .இயல்பான ஆண்டிமோனியை b -ஆண்டிமோனி என்றும் மஞ்சள் நிறங் கொண்டதை a -ஆண்டிமோனி என்றும் கரு நிறங் கொண்டதை கருப்பு ஆண்டிமோனி என்றும் கூறுவர்.இதில் b -ஆண்டிமோனி மட்டும் உலோக வடிவில் உள்ளது .மற்றவை இரண்டும் படிக உருவமற்றவை .

ஆண்டிமோனி வெப்பத்தையும் மின்சாரத்தையும் அரிதிற் கடத்துகின்றது .இதன் கடினத் தன்மை 3-3.5 ஆக உள்ளது .(வைரத்தின் கடினத் தன்மை -10 ,கடினத் தன்மையின் பெரும மதிப்பும் இதுவே) ஆண்டிமோனியும் அதன் பல கூட்டுப் பொருட்களும் நச்சுத் தன்மை கொண்டவை .காற்று  வெளியில் ஆண்டிமோனி துகள்கள் இருக்கக் கூடிய பெரும வாய்ப்பு 0.5 மி.கி / மீ ஆகும்  


No comments:

Post a Comment