Friday, August 9, 2013

Vinveliyil Ulaa

விண் வெளியில் உலா
  M.8 என்று பதிவு செய்யப்பட்ட லக்கூன்(Lagoon) நெபுலா ஏறக்குறைய 5200 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது .மேகக் கூட்டம் போல வளிமத்தாலும்,தூசியாலும் ஆன இது அதனுள் புதைந்துள்ள பல மில்லியன் ஆண்டுகள் பழைமையான விண்மீன்களில் (9 சாக்கிடாரி) ஒன்றினால் உமிழப்படும் புறஊதாக் கதிர்களினால் ஒளிர்கின்றது. இதில் எண்ணிறைந்த கரும்புள்ளிகள் பிரகாசமான பின்புலத்துடன் காணப்படுகின்றன .இவை துளை அல்லது வெற்றுவெளி இல்லை என்பதை வில்லியம் ஹெர்ஷல் என்பார் முதல் முதலாகக் கண்டறிவித்தார்.அவை ஒளியைத் தடுக்கும் தூசிகளால் ஆன மேகத்திட்டுக்கள் என பின்னர் அறிந்தனர்.  கருவரி ஒன்று இந்த நெபுலாவை இரு கூறாகப் பிரித்துள்ளது.M.8 க்கு அருகாமையில் M.20 என்றொரு நெபுலா அதைவிடச் சற்று குறைந்த தொலைவில் உள்ளது .ட்ரை பிட்(Trifid) நெபுலா எனப்படும் இதன் மையத்தில் மங்கலான ஒரு இரட்டை விண்மீன் உள்ளது .இதிலுள்ள கரு வரிகள் நெபுலாவை மூன்று துண்டங்களாகப் பிரித்துள்ளன.
இக் கூட்டத்தில் M .17 என்று பதிவு செய்யப்பட்ட உமேகா(Omega) நெபுலா ,கிரேக்க மொழி எழுத்தான உமேகா போல உள்ளது .இது 4800 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாக மதிப்பிட்டுள்ளனர் .
M.23 (NGC 6494),M.21 (NGC 6531),M.24 (NGC 6603),M.16 (NGC 6611),NGC 6520 போன்ற தனிக் கொத்து விண்மீன் கூட்டங்கள் இவ்வட்டாரத்தில் இக்குமங்குமாக சிதறிக்கிடக்கின்றன. M .23 ,2100 ஒளி ஆண்டுகள் தொலைவில் நீள் வட்ட வடிவில் செறிவு மிக்க விண்மீன்களுடன் உள்ளது .M.25 என்று பதிவு செய்யப்பட்ட தனிக் கொத்து விண்மீன் கூட்டம் 1900 ஒளி ஆண்டுகள் தொலைவிலும் M .21 ,5250 ஒளி ஆண்டுகள் தொலைவிலும் ,M .24 ,17500 ஒளி ஆண்டுகள் தொலைவிலும் ,M.16 ,6000 ஒளி ஆண்டுகள் தொலைவிலும் உள்ளன .
M.4 (NGC 6121),M.28 (NGC 6626 ),M.22 (NGC 6656 ),M.55 (NGC 6809 ),NGC 6723 போன்ற கோளக் கொத்து விண்மீன் கூட்டங்களும் இப்பகுதியில் நிறைந்துள்ளன .7800 ஒளி ஆண்டுகள் தொலைவில் M.4 ம் ,15600 ஒளி ஆண்டுகள் தொலைவில் M.28 ம்,10000 ஒளி ஆண்டுகள் தொலைவில் M.22 ம் 34000 ஒளி ஆண்டுகள் தொலைவில் NGC 6724 ம் ,20000 ஒளி ஆண்டுகள் தொலைவில் M.55 ம் அமைந்துள்ளன. இவ் வட்டாரத்த்திலுள்ள டெல்டா சக்கிடாரியையும் எப்சிலான் சக்கிடாரியையும் நம்மவர்கள் பூராடம் என்றும் நன்கி(Nunki) என்று அழைக்கப்படும் சிக்மா சக்கிடாரியை உதித்திராடம் என்றும் கூறுகின்றார்கள் .             

No comments:

Post a Comment