Monday, September 19, 2011

eluthaatha kaditham

எழுதாத கடிதம்

வளமான ஒரு நாட்டில் பிறந்து நலமாக வாழ முடியாது பரிதவிக்கும் மக்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது .
அவர்களில் நானும் ஒருவன் என்பதால் இந்நிலை கண்டு பெரிதும் மனம் வருந்தினேன்.

வயதாகி வயோதிகனாகவும் ஆகிவிட்டேன் .இருளகற்றும் அந்த ஒளி என் கண்களுக்கு இன்னும் தென்படவே இல்லை.

இந்தியாவில் வாழ்வோரை விட வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தாம் ஓரளவு மகிழ்ச்சியுடன்,குறைந்த அளவு செயற்கையுடன்,மனநிறைவாய்
வாழ்கின்றார்கள்.பழைய உறவுகளும்,மரபு வழியிலான பழக்க வழக்கங்களுமே இந்தியாவை அவர்கள் எண்ணத்தில் இன்னும் நிலைத்திருக்கச்
செய்திருகின்றன. பரிணாம வளர்ச்சியில் இவை தூக்கி எறியப்ப்படும்போதும்,பழைய உறவுகளுக்கு மாற்றாக புகுந்த நாட்டில் புதிய உறவுகளால் புதிப்பிக்கப் படும்போதும் இந் நிலைமையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுமோ?

ஒரு சில நாட்கள் வெளிநாடு சென்று வந்த ஒருவரே இந்தியாவோடு ஒப்பிட்டு வெளிநாட்டின் பெருமையை மேம்படுத்தி மணிக்கணக்கில் பேசுகின்றார் .
மக்களின் பொது ஒழுக்கம் மற்றும் சுமுதாயக் கட்டுப்பாடு அல்லது சுயக் கட்டுப்பாடு ,அதிகாரிகளின் நேர்மையான பணி,வர்த்தகர்களின் ஏமாற்றுதல்
இல்லாத வியாபாரம் மற்றும் பொழுதுபோக்கிற்கான விதவிதமான வசதிகள் ,வியப்பூட்டும் பெரிய பெரிய கட்டுமானங்கள் ,இயற்கையைப்
பாதுகாக்கும் மனப்பாங்கு,எல்லாம் அவை அப்படி பேசவைக்கிறது .
தன் கருத்தை வெளிப்படையாக எடுத்துச் சொல்லவும் முடியாமல் ,மனதுக்குள்ளே புதைத்து மூடி மறைக்கவும் முடியாமல் அவ்வப்பொழுது மனம் வெடித்துச் சிதறும் அவர்களுடைய
முணுமுணுப்புகளைச் சட்டெனப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் சுட்டெரிக்கும் வெப்ப மிக்க மூச்சுக் காற்று
அவர்களுடைய மனநிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
அயல் நாட்டைப் பார்த்துப் பார்த்து ஏங்கவும், நேசிக்கவும் மக்களின் மனநிலையில் ஒரு பரிணாம வளர்ச்சி ஏற்படுவதைக் காணமுடிகிறது. பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு என்பது நம்மை நாமே உயர்த்திக் காட்ட உலகிற்குச்சொன்ன வெறும் வாயளவுச் சொல்லாகிவிடுமோ என்ற அச்சமே மேலோங்கி வருகிறது.

வேலைவாய்ப்பு என்றாலும், நாயமான உற்பத்திப் பொருள் என்றாலும், வெளிநாட்டை நாடுகின்றார்கள்.அதுமட்டுமல்ல ,கொள்ளை யடித்த
கறுப்புப் பணமாக இருந்தாலும், அதைப் பாதுகாப்பாக வைத்திருக்கக் கூட அயல் நாட்டையே நம் மக்கள் விரும்புகிறார்கள்.
இந்த இழி நிலைக்குப் பல காரணங்களைக் கூறலாம். முதலாவது சீர்குலைந்து வரும் சமுதாயக் கட்டுபாடுகள்.சமுதாயத்தில் பெருகிவரும்
தண்டிக்கப் படாத குற்றங்களையும் ,அதிகரிந்து க் கொண்டே வரும் பாவச் செயல்களையும் சித்தரிக்கும் நாளேடுகளே இதற்க்கு வலுவான சாட்சிகள்

தடியெடுத்தவனெல்லாம் தண்டல் காரனாகிவருகிறான். யாரும் யாருக்கும் கட்டுப்படுவதே இல்லை. தன்னிச்சை யான போக்கினால் இந்தியாவின்
தலை எழுத்தே மாறிவிடும் போல் தோன்றுகிறது .பலவீனமான அரசே இதற்குக் காரணமாக இருக்கமுடியும் என்பதைக் கல்விச் சிந்தனையாளர்கள்
கூறுகின்றார்கள் .
அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிறிய அளவில் பிறந்த ஊழல் இன்றைக்கு எங்கெங்கும் பேரியல் அளவில் வளர்ந்து விட்டது. எதிர்த்தால்
அரக்கனாக எதிரே நிற்கிறான் . அளிக்க முனைந்தால் எல்லையில்லாமல் எங்கும் பரவி சிரிக்கிறான் .ஊழலை ஒருபோதும் ஒழிக்கவே முடியாது
என்று அரசியல்வாதிகள் மக்களுக்குச் சமாதானம் சொல்கிறார்கள் .உண்மையான அரசியல்வாதி ஒரு போதும் இப்படிச் சொல்லவே மாட்டான்..
ஊழலை ஒடுக்குவது என்பது அவர்கள் நோக்கமில்லை என்பதைத்தான் இது எடுத்துக் காட்டுகிறது.

No comments:

Post a Comment