Monday, September 5, 2011

vinveliyil ulaa


ஏரிஸ் Aries
மேஷ ராசி மண்டலமும் அண்டை வட்டாரங்களும்









மேஷ ராசிக்குரிய விண்மீன் கூட்டமான ஏரிஸ் ஒரு பொன்னிற ஆடு தரையில் அமர்ந்திருப்பதைப் போன்று காட்சி தரக்கூடிய ஒரு விண்மீன் கூட்டம் .இது ஒன்மையில் ஒரு வட்டார விண்மீன் கூட்டமாகும் .ஏப்ரல் -18 முதல் மே- 14 வரையிலான காலத்தில் சூரியன் இந்த விண்மீன் கூட்டத்தைக் கடந்து செல்கிறது. இது பிஸ்சஸ் மற்றும் டாரஸ் வட்டார விண்மீன் கூட்டங்களுக்கு நடுவில் உள்ளது. இதில் ஆல்பா ,பீட்டா காமா ஏரிடிஸ் என மூன்று ஓரளவு பிரகாசமான விண்மீன்கள் ஏறக்குறைய ஒரே கோட்டில் இருப்பது போல அமைந்துள்ளன . இதில் இருக்கும் அந்த மூன்று விண்மீன்களும் பிரகாச வரிசைப்படி ஆல்பா-பீட்டா-காமா ஏரிடிஸ் என காணப்படுகின்றன. அதாவது ஆல்பா ஏரிடிஸ் பிற இரு விண்மீன்களை விடப் பிரகாசமிக்கதாகவும் பீட்டா ஏரிடிஸ் காமா ஏரிடிஸ் சை விடப் பிரகாசமிக்கதாகவும் இருக்கின்றன .இது ஆண்ட்ரோமெடா அண்டத்திற்கு அருகாமையில் உள்ளது.
உணர்வு நுட்ப மிக்க தொலை நோக்கியால் இக் கூட்டத்தைப் பார்க்கும் போது.அந்த மூன்று விண்மீன்களும் மிகச் சரியாக ஒரே நேர் கோட்டில் அமையாததும் .காமா ஏரிடிஸ் சற்று விலகி ஒரு சிறிய முக்கோணம் போல தெரிவதும் தெரிய வந்தன. மேலும் ஆல்பா ஏரிடிஸ் இக்கு சற்று தள்ளி ஏறக்குறைய அதே நேர் கோட்டில் ஓரளவு மங்கலாக லாம்ப்டா எறிடிஸ் புலப்பட்டுத் தெரிந்தது .சக்தி வாய்ந்த தொலை நோக்கிகள் இக் கூட்டத்தில் ஒளிபொளிவெண் 6 க்கும் அதிகமாக, அதாவது மங்கலான விண்மீன்கள் 50 இருக்கலாம் எனக் காட்டியுள்ளன .ஒளிப் பொலிவெண் என்பது தோற்றப் பிரகாசத்தை அளவிடும் ஒரு மதிப்பாகும் .குறைந்த ஒளிபொளிவெண் அதிகம்மான தோற்றப் பிரகாசத்தைக் குறிக்கும் .
எனினும் சிறப்புத் தன்மை கொண்ட விண்மீன்கள் இக்கூட்டத்தில் ஏதுமில்லை.
ஆல்பா ஏரிடிஸ் 66 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது. இதன் சார்பிலா ஒளிப் பொலிவெண் 0 .48 ஆகவும் (சார்பிலா ஒளிப் பொலிவெண் விண்மீனின் உண்மைப் பிரகாசத்தை அளவிட்டுக் கூறுகிறது.
தோற்ற ஒளிப் பொலிவெண் 2 .01 ஆகவும் உள்ளன .இந்த விண்மீனை வானவியலார் ஹாமல் (Hamal) எனப் பெயரிட்டு அழைக்கின்றனர் பீட்டா
ஏரிடிஸ் 60 ஒளி ஆண்டுகள் தொலைவில் 1.33 என்ற சார்பிலா, 2.64 தோற்ற ஒளிப் பொலிவெண்ணுடன் இருக்கிறது. இதன் பெயர் செராட்டன் (Sheratan) நம்மவர்கள் இதற்கு இட்ட பெயர் அசுபதி .இவ் வட்டாரத்தில் உள்ள 41 எரிடிஸ் என்ற விண்மீனைப் பரணி என அழைக்கின்றார்கள்

மெசார்தீம் (Mesarthim ) என அழைக்கப்படும் காமா எரிடிஸ் ,கண்ணுக்கு ஒரு விண்மீனாகக் காட்சி தந்தாலும் உண்மையில் இது ஓர் அகன்ற இரட்டை விண்மீனாகும். இவையிரண்டும் 8 செகண்டு கோண விலக்கத்துடன் விலகி உள்ளன .ஒரு செகண்டு என்பது ஒரு டிகிரியில் 3600 ல் ஒரு பங்கு ஆகும். சாதாரணத் தொலை நோக்கியால் இவற்றை பகுத்துப் பார்க்க முடியும். இவை இரண்டும் ஏறக்குறைய நீலங் கலந்த வெண்மை நிறத்துடன் ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றன . இவற்றின் சராசரி ஒளிப்பொலி வெண் 4 .6 இவை இரண்டும் ஏறக்குடைய சமமான புற வெப்ப நிலையாக 11000 டிகிரி கெல்வின் நெடுக்கையைப் பெற்றுள்ளன. இது நமது சூரியனைக் காட்டிலும் 2 மடங்கானது. தொலை நோக்கி மூலம் இனமறியப்பட்ட முதல் இரட்டை விண்மீன் காமா எரிடிஸ் ஆகும். இதை இங்கிலாந்து நாட்டின் இயற்பியல் வல்லுநர் இராபர்ட் ஹூக் என்பார் 1664 ல் கண்டுபிடித்தார். ஹூக், அழுத்தம்-திரிபு (Stress -strain ) இவைகளுக்கிடையேயான தொடர்பைக் கண்டறிந்தவர். இது இன்றைக்கு ஹூக் விதி எனப்படுகிறது. இவர் ஒரு பொழுதுபோக்கு வானவியலார் ஆவார். கூர்மையாகப் பார்த்தால் காமா எரிடிஸ் இவர் பார்வையில் சிக்கியது.

லாம்டா ஏரிடிஸ் என்ற விண்மீனும் ஓர் இரட்டை விண்மீனே. இதிலுள்ள இரு விண்மீன்களும், காமா ஏரிடிஸ் சில் உள்ளதைவிட சற்று கூடுதலாக விலகியும்,இரண்டும் ஓரளவு மங்கலாகவும் உள்ளன. இதில் ஒரு விண்மீனின் ஒளிப் பொலி வெண் 5 ஆகவும் மற்றொன்று 8 ஆகவும் உள்ளன .இவையிரண்டும் 38 செகண்டு கோண விலக்கத்துடன் விலகிக் காணப்படுகின்றன. 1781 லிருந்து அவற்றின் சார்பு அமைவிடத்தை ,அதாவது அவை இரண்டிற்கும் உள்ள இடைவெளியை அளவிட்டறிந்த போது
அவையிரண்டும் மாறாதிருப்பது போல மாயத் தோற்றத்தை ஏற்படுத்தின . அதனால் அவை தனி விண்மீன்களோ என்ற குழப்பம் கூட ஏற்பட்டது. ஆனால் உண்மையில் அவையிரண்டும் புலவெளியில் ஒரே திசையில் சமமான திசைவேகத்துடன் நகர்ந்து செல்கின்றன. அவற்றின் வட்டச் சுற்றியக்கத்தை நீண்ட காலச் சுற்றுக் காலத்தின் காரணமாக உணரமுடியா திருக்கிறது.

ஏரிஸ் இராசி மண்டல வட்டார விண்மீன் கூட்டங்களுள் முதலாவதாகக் கொள்ளப்பட்டுள்ளது. முற்காலத்தில் இளவேனில் காலத்தில் தெற்கிலிருந்து வடக்காக நகரும் சூரியன், பேரண்ட நடுவரைக் கோட்டைக் கடக்கும் போது ஏரிஸ் வட்டார விண்மீன் கூட்டம் இருக்கும் பகுதியில் அமைகிறது. பூமியின் தற்சுழற்சி ஆச்சு, சுழலும் பம்பரம் போலத் தள்ளாட்டம் செய்வதால் , பேரண்டக் காட்சிகளும் அதற்கு ஏற்ப இடப்பெயர்வுக்கு உள்ளாகின்றன. அதனால் சூரியனின் கதிர் வீதியும் இடம் பெயர இப்போது சூரியன் நடுவரைக் கோட்டைக் கடக்கும் போது பிஷ்ஷாஸ் வட்டார விண்மீன் கூட்டம் இருக்கும் பகுதியில் அமைகிறது. எனினும் ஏரிஸ் வட்டார விண்மீன் கூட்டமே சூரியன் தமிழாண்டின் தொடக்க்கத்தில் சந்திக்கும் முதலாவது விண்மீன் கூட்டமாகக் கொள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் தொடரும் பூமியின் தள்ளாட்டத்தால் ஒரு கால கட்டத்தில் சூரியன் ஏரிஸ் வட்டார விண்மீன்கூட்டம் உள்ள பகுதில் இருக்கும் போது பேரண்ட கோளத்தின் நடுவரைக் கோட்டைக் கடக்கும்.

No comments:

Post a Comment