Tuesday, September 27, 2011

vinveliyil ulaa

மீரா விண்மீனின் நிலை


விண்மீனின் வெப்பநிலை அதிகரிக்கும் போது, அதிலுள்ள கனிம
வேதிப் பொருட்கள் சிதைவுறுகின்றன. அதனால் வளிமண்டலம்
ஒளி உட்புகு தன்மையைப் பெறுகிறது. குளிர்ச்சியுறும் போது இந்த
வழிமுறை பிற்போக்காக நடைபெறுகிறது. விண்மீன் பெருமப்
பிரகாசத்தில் இருக்கும் போது வெப்ப மிக்க ஹைட்ரஜன்
அதன் புற மண்டலத்தில் விண்மீனால் உமிழப்பட்டு, விண்மீனின்
பிரகாசத்தை அதிகரிக்கச் செய்கிறது.இவை நிறமாலையில்
பிரகாசமான உமிழ் வரிகளை ஏற்படுத்தக் காரணமா யிருகின்றன.
மீராவின் புறப் பரப்பின் துடிப்பு, அதன் புறப் பரப்பிலிருந்து
எல்லாத் திசைகளிலும் 20 கிமீ/வி என்ற வேகத்தில்
வீறிட்டெழும் புழுதிக் காற்றினால் விண்மீனின் மூலப்பொருள்
தடையின்றி வெளியே விரவிச் செல்ல துணை செய்கிறது.
இது விண்மீனை விட்டு நெடுந் தொலைவு கடந்து சென்ற பின்,
குளிர்ந்து திண்மமாக உறைகிறது. .விண்மீனின்
சேர்மானப் பொருளைப் பொறுத்து இது மக்னீசியம் அல்லது
இரும்பு சிலிகேட்டாக இருக்கலாம். புகையில் உள்ளது
போலத் தூள் வடிவக் கார்பனாகவும் இருக்கலாம். இவை
அங்கு ஒரு மறைப்பூடகமாக நிலைபடுவதால்
சில காலத்திற்குப் பிறகு ஒளிரும் எஞ்சிய விண்மீனின்
உள்ளகத்தை மறைத்து விடுகிறது. மீராவின் இந்நிலையை
பரிணாம வளர்ச்சிப் படிகளின் மூலம் விளக்கியுள்ளனர்.விண்மீனின்
ஹைட்ரஜன் எரிபொருள் தீர்ந்த பின் அதன் கட்டமைப்பில்
குறிப்பிடும்படியான மாற்றங்கள் அடுத்தடுத்து ஏற்படுகின்றன.
ஈர்ப்பால் சுருங்கி மையம் சூடாகின்றது . போதிய
சூடடைந்தவுடன் ஹீலியம் அணு எரிபொருளாகப் பயன்படத்
தொடங்குகிறது .
ஆனால் உள்ளகத்தைச் சுற்றியுள்ள புற அடுக்குகளில்
ஹைட்ரஜன் தொடர்ந்து ஹீலியமாக மாறுகிறது.
அப்போது புற அடுக்கு தீவிரமாக விரிவடைந்து குளிர்ச்சியடைகிறது . இந்நிலையில் இருக்கும் மீரா
பெருஞ்சிவப்பு விண்மீனாகக் காட்சிதருகிறது. இது நமது
சூரியனின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை எடுத்துக்
காட்டுவதாக இருக்கிறது .

மீராவின் உள்ளகத்தில் ஹீலியம் பிணைவுற்று கார்பனாக மாறிக் கொண்டிருக்கிறது .ஒரு சில காலத்திற்குப் பின்
இது மஞ்சள் நிறப் பெரு விண்மீனாக உருமாறும். புறவோட்டுப்
பகுதியில் ஹைட்ரஜனே இன்னும்
எரிபொருளாகக் கொள்ளப் படுவதால் விண்மீனின் விரிவாக்கம்
அதனால் ஓரளவு கட்டுப்படுத்தப் படுகிறது.
அங்கு ஹைட்ரஜன் தீர்ந்தவுடன் விண்மீன் மேலும் விரிவுற்று
பெருஞ்சிவப்பு விண்மீனாகும். அப்போது
அதன் ஒளிர் திறன் இன்னும் அதிகமாக இருக்கும் .ஹீலியம்
மையத்தில் தீர்ந்த பின் ,ஹீலியம்
புறவோட்டுப் பகுதியில் தொடர்ந்து எரிந்து கார்பனாகும் .இந்த
நிலையில் மீரா இப்பொழுது உள்ளது என ஆராய்ச்சி
யாளர்கள் கூறுகின்றார்கள்.
இந்நிலைக்குத் தள்ளப்பட்ட மீரா இன்னும் நீண்ட காலம் வாழ வாய்ப்பில்லை .அழிவை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருக்கும்
ஒரு விண்மீன் மீராவாகும். துடிப்பின் மூலம் பெருமளவு
மூலப்[பொருளை இவ் விண்மீன் வெளியில்
உமிழ்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் 10000 ஆண்டுகள் இதன்
புற வோட்டுப்பகுதி முழுவதும் வெளியேறி
பரந்த புகைப்படலமாக அதைச் சுற்றி நெடுந் தொலைவு வரை
விரவி இருக்கும். அப்போது இது கோளவடிவ
நெபுலாவாகக் காட்சி தரும் . நம்முடைய சூரியன் இன்னும் 5000
மில்லியன் ஆண்டுகளில் ஏறக்குறைய
இதே வழிமுறையைப் பின்பற்றி கோளவடிவ நெபுலாவாக
உருமாறலாம் என்று கூறுகிறார்கள் .

No comments:

Post a Comment