Wednesday, September 28, 2011

vinveliyil ulaa

மீராவும் அண்மைக் கால ஆய்வுகளும்


மீராவின் நிறமாலையை நுட்பமாக ஆராய்ந்த போது அது பற்றி
வேறு சில உண்மைகளும் தெரியவந்தன.1919 ல் மீராவின்
நிறமாலையில் வெப்ப மிக்க வெண்ணிற விண்மீன் ஒன்றின்
நிறமாலையும் மேற்பொருந்தி இருப்பதை அறிந்தனர் .
இது ஒரு B 8 வகை விண்மீன் போலத் தோன்றியது .
இவ்வகை விண்மீன்களின் புறப்பரப்பு வெப்பநிலை 18000
டிகிரி கெல்வின் ஆகவும், சாதாரண ஹீலிய அணுவின்
நிறமாலை வரிகளையும் கொண்டதாக இருக்கும். ஏறக்குறைய
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ,மீரா சிறுமப் பிரகாசத்தில்
இருக்கும் போது அதற்கு மிக அருகாமையில் தோற்ற
ஒளிப்பொலிவெண் 10 - 12 உடைய ஒரு சிறிய விண்மீன்
இருப்பதை அட்கின் என்ற வானவியலார் சுட்டிக்காட்டினார் .
இது 9 செகண்டு அளவே மீராவிடமிருந்து அப்போது விலகி
இருந்தது.இவ்விண்மீன் மீராவை சில 100 ஆண்டுகளுக்கு
ஒரு முறை சுற்றி வருகிறது என்று கண்டறிந்துள்ளனர். இவ்
விண்மீனும் ஒரு வகையான மாறொளிர் விண்மீன் என்றும்
இதுவும் உருமாற்றத்தால் பிரகாச மாற்றம் பெறுகிறது என்றும்
ஆராய்ந்து தெரிந்து கொண்டனர் .

மீராவின் துணை விண்மீன் மீராவின் நிறையைக் கணக்கிட
உதவியாய் இருக்கிறது .துணை விண்மீனின் நிறை 2.5
சூரிய நிறை என்றும் ,மீராவின் நிறை 1.5 -2 சூரிய நிறை
என்றும் மதிப்பிட்டுள்ளனர் .இது மீராவின் சராசரி
அடர்த்தி சூரிய அடர்த்தியில் 2 x 10^-7 மடங்கு எனத்
தெரிவித்துள்ளது. இது சற்றேறக் குறைய வெற்றிடத்தின்
அடர்த்திக்கு ஒப்பானது.

நீல நிறங் கொண்ட துணை விண்மீன் வெப்ப மிக்க ஓர்
இடைநிலைக் குள்ள விண்மீனாகும்.இது சாதாரண விண்மீனுக்கும்
சிறு வெள்ளை விண்மீனுக்கும் இடையில் அமைந்திருக்கிறது .
இதன் விட்டம் சூரிய விட்டத்தில் 10 ல் ஒரு பங்கே .
அடர்த்தியோ 3300 மடங்கு .இதன் சுற்றுக் காலம் 260
ஆண்டுகள் .இது மீராவிலிருந்து 8 பில்லியன் கிலோமீட்டர்
தொலைவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது .துணை
விண்மீன் தொடர்ந்து குளுர்ச்சியடையும் போது மீரா நீண்ட
காலத்திற்குப் பிரகாசமாக உள்ளது. மீரா விண்மீன் வீசும்
அடர்த்தியான காற்று ,துணை விண்மீனின் பரப்பில் மோதி
பேரளவு ஆற்றலை உமிழ்கிறது. இந்த ஆற்றல் துணை
விண்மீனால் கதிர் வீச்சாக வெளியே வீசப்படுகிறது என்று
இப்போது கண்டுபிடித்துள்ளனர்.

டௌ சீடி என்ற விண்மீனின் தோற்ற மற்றும் சார்பிலா
ஒளி பொலி வெண் முறையே 3.49,5.68 ஆகும். இது
சூரியனைப் போல 0.62 மடங்கு பிரகாசிக்கின்றது .இதன்
நிறை 0.85 சூரிய நிறையாகும். இது மிகவும் உயரளவு
தனித்த இயக்கமுடையதாகக் காணப்படுகின்றது .
விண்வெளியில் ஓராண்டுக்கு இது 2 செகண்டு தொலைவு
கடக்கிறது. இந்த இயக்கத்தை நாம் தெளிவாக உணரக்கூடியதாக
இருப்பதால் இது பூமிக்கு அருகாமையில் உள்ளது எனலாம் .
இது 12 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாக
மதிப்பிட்டுள்ளனர். மிக அருகாமையில் இருக்கும் 20
விண்மீன்களுள் இதுவும் ஒன்று.

டௌ சீடி ஒரு மஞ்சள் நிற குறு விண்மீனாகும் .
சற்றேறக் குறைய நமது சூரியனை ஒத்திருக்கிறது .
என்றாலும் சூரியனை விட சற்று சிறியது ,குளிர்ச்சியானது .
இது இப்போது ஒரு A வகை விண்மீனாக உள்ளது. சூரியன்
ஓர் அச்சைப் பற்றி ஒரு மாத காலத்திற்கு ஒரு முறை
தனைத்தானே சுற்றி வருவதைப் போல ,இந்த விண்மீனும்
தற்சுழலுகிறது என்றாலும் சூரியனை விட விரைவாக
இயங்குகிறது .தூசி போன்று ஒரு படலம் இந்த விண்மீனைச்
சுற்றி காணப்படுகிறது. சூரியனுக்கு ஒரு குடும்பம்
இருப்பதைப்போல இதற்கு ஒரு குடும்பம் என்று அனுமானிக்க
இது இடம் தருகிறது. எனினும் என்று வரை எந்தக் கோளும்
இனமறியப்படவில்லை.

டௌ சீடி யின் நிறமாலை அதில் சிறிய அளவில்
உலோகங்கள் இருக்கலாம் என்பதை உணர்த்தியிருக்கிறது.
டௌ சீடி யின் உலோகத் தன்மையே ,அதற்கு கோள்
இருக்கலாம் என்ற ஐயத்தை ஏற்படுத்தியது. இந்த உலோகத்
தனிமங்கள் டௌ சீடி யால்உமிழப்பட்டு வெளியேறும் போது
கோளாக உறைந்து போக வாய்ப்பிருப்பதால்
வானாவியலார் அவ்வாறு உருவாகியிருக்கலாம் என நம்பினார் .
டௌ சீடி F வகை விண்மீனாகத் தொடங்கி அதன் தற்சுழற்சி
வீதம் திடீரென்று தாழ்ந்திருக்க வேண்டும் என்று
கொள்கையாளர்கள்கருத்துத் தெரிவித்துள்ளனர் .இதற்கு
அந்த குளிர்ந்த விண்மீனைச் சுற்றி வரும் கோள்களே காரணமாக
இருக்கலாம் .இக் கோள்கள் விண்மீனின் கோண உந்தத்தை
உள்வாங்கிக் கொள்வதால் விண்மீனின் சுழற்சி வேகம்
மட்டுப்படுத்தப்படுகிறது. நமது சூரியனைப் போல உயிரினம்
உள்ள கோள்களைப் பெற்றிருக்கலாம் என்று பொதுவாக
நம்பப்படுகிறது . அமெரிக்க விண்வெளி
ஆய்வாளர்கள் இந்த விண்மீனை நோக்கி சமிக்கை
அலைகளை அனுப்பி வைத்தார்கள்.ஆனால் அதற்கு பதில்
மொழியாக எந்த சமிக்கை அலைகளும் எதிரொளிக்கப்
படவில்லை. இது அங்கு உயிரினம் இல்லாததையோ
அல்லது உயிரினம் இருந்து செய்திப் பரிமாற்றம் பற்றிய நுட்பம் அறியாதவர்களாகவோ இருக்கலாம் என்பதைத் தெரிவிக்கிறது .


இவ் வட்டார விண்மீன் கூட்டத்தில் M 77 என்று பதிவு
செய்யப்பட்டுள்ள ஒரு சுருள் புய அண்டம் உள்ளது. இதன் பரந்த
முகப் பரப்பு தெரியுமாறு இது விண்ணில் விரவியுள்ளது .இது
மிகவும் பிரகாசமான மையத்தைப் பெற்றுள்ளது. இதை சைபெர்ட் அண்டம் (Seyfert galaxy ) என அழைக்கின்றார்கள் .

No comments:

Post a Comment