Saturday, September 24, 2011

vinveliyil ulaa


மீராவின் பிரகாசம் 332 நாட்களுக்கு ஒரு முறை ஏற்றத்
தாழ்வுடன் ஒளிர்கிறது..இது ஏறக்குறைய ஒவ்வொரு
ஆண்டிற்கும் ஒரு மாதம் முன்னதாக வரும். மீரா அடிவானத்தில்
இருக்கும் போது பகல் பொழுதில் மட்டுமே
பிரகாசமிக்க நிலை ஏற்படுவதால் நீண்டகாலம் இது கண்களுக்குத்
தென்படாமல் தப்பி வந்தது .1993 ஜூன்
17 ல் சூரியோதையத்திற்கு முன்னர் மீரா காட்சி தந்த பின் சில
காலம் காண முடியாத நிலையில் இருந்து விட்டு மீண்டும் 1998
ல் காட்சி தந்தது .
நேரடித் தோற்றப் பிழை யிலிருந்து மீரா 220 ஒளி ஆண்டுகளுக்கு
அப்பால் இருப்பதாக கணக்கிட்டுள்ளனர் .1925
ல் எப் .ஜி பீஸ் (F .G .Pease ) என்பார்,பெரிய ஒளிக் குறுக்கீட்டு
விளைவு மானியைக் கொண்டு ,இதன் கோண விட்டத்தை
அளவிட்டறிந்து இதன் விட்டம், சூரியனின் விட்டத்தைப் போல
400 மடங்கு இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளனர் . பெருமப்
பிரகாச நிலையில் இதன் விட்டம் இன்னும் கூடுதலாக 500
மடங்கு சூரிய விட்டமாக இருக்கலாம் என்றும் சிறுமப் பிரகாசத்தின்
போது இது 200 மடங்கு இருக்கலாம் என்றும் மதிப்பீடுகள்
தெரிவித்துள்ளன .இதன் நிறை சூரியனின் நிறையைப்போல 2
மடங்குதான்.இதன் அடர்த்தி சூரியனை விடப் பல
மடங்கு குறைவு .கட் புலனறி ஒளியில் இதன் பிரகாசம்
சூரியனைவிடச் சிறிதளவே குறைவு.பெருமப்
பிரகாசத்தின் போது இது சூரியனை விட 250 மடங்கு
கூடுதலாகப் பிரகாசிக்கிறது .

மீரா மற்றும் மீரா போன்ற மாறொளிர் விண்மீன்களின்
நிறமாலைகள் சற்றேறக் குறைய ஒன்று போல இருக்கின்றன .
இவற்றின் நிறமாலையில், டைட்டனியா ,சிர்கோனியா போன்ற
பல்வேறு கனிம வேதிப்
பொருட்களின் செழிப்பான உட்கவர் பட்டைகள் அடங்கியிருக்கின்றன.
இக் கூட்டுப் பொருட்கள் ,வெப்ப நிலையில்
ஏற்படும் சிறிய ஏற்றத் தாழ்வுகளுக்கு உணர்வு நுட்ப மிக்கதாக
இருப்பதால் உட்கவர் பட்டைகளின் செறிவும்
மாறொளிர்தலின் அலைவுக் காலச் சுற்றுக்கு ஏற்ப மாற்றம்
பெறுவதைக் காண முடிகிறது. நீண்ட
காலச் சுற்றுக் காலத்துடன் கூடிய மாறொளிர் விண்மீன்களின்
பிரகாசத்தில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு ,கட்புலனறி
ஒளி நெடுக்கையில் அதிக வீச்சுடன் இருப்பதற்கும் ஆனால்
விண்மீன் உமிழும் மொத்தக் கதிர் வீச்சு குறைவான
மாற்றத்துடன் காணப்படுவதற்கும் இதுவே காரணமாக அமைகிறது.
பெருமப் பிரகாசத்தின் போது மீராவின் நிறமாலையில்
ஹைட்ரஜன் மற்றும் சில உலோகங்களின் பிரகாசமான
உமிழ் வரிகள் தென்படுகின்றன. ஆனால் சிறுமப் பிரகாசத்தின்
போது அவை உட்கவர் வரிகளாக மாற்றம்
பெறுகின்றன ,நிறமாலையில் காணப்படும் இந்த அலைவு
கால நிலைப்[ பெயர்ச்சி ,நீண்ட கால சுற்றுக் காலத்துடன்
கூடிய மாறொளிர் விண்மீன்கள் எல்லாம் சிபிட்ஸ் வகை
விண்மீன்களை போல தம் புறப் பரப்பை விரிந்து
சுருங்கச் செய்கின்றன என்பதைத் தெரிவிக்கக் கூடியதாக
இருக்கிறது.(ஆனால் சிபிட்ஸ் வகை விண்மீன்களில்
இத் துடிப்பு அதன் புற படலத்தின் ஒளியியல் பண்பை
மாற்றுவதில்லை)

மீராவின் பிரகாச மாற்றத்திற்கு நம்ப முடியாத பல காரணங்கள்
பல காலகட்டங்களில் பலரால் சொல்லப்பட்டன .இது விரைவாகச்
சுழலும் ஒரு மங்கலான பெரிய கோள வடிவங் கொண்டிருந்தாலும்,
பிரகாசமான சிறிய உள்ளகத்தைப் பெற்றிருக்கிறது என்று சிலர்
இதற்குக் காரணம் கூறினார் , வேறு சிலர் இது நீட்சி யுற்ற
கோளமாக உள்ளது என்றும் இதை வெவ்வேறு கோணங்களில் பார்க்கும்
போது வெவ்வேறு பிரகாசமுடையதாகத்
தோன்றுகிறது என்றும் கூறினார். சர் வில்லியம் ஹெர்ஷல் என்பார்
1777 - 1780 ல் மீராவை நுணுகி ஆராய்ந்து ,அதற்கு சனி வளையம்
போல வளையங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார் .இது சில சமயங்களில்
பரந்த முகப் பரப்புடனும்,சில சமயங்களில் குறுகிய விளிம்புத்
தோற்றத்துடனும் காணப்படுவதாகவும்
தெரிவித்துள்ளார் .எனினும் 1926 ல் சர் ஆர்தர் எட்டிங்டன் இதற்கு,
இந்த விண்மீனின் துடிப்பினால் அதன் புறப்படலம் உருமாற்றம்
பெற்று பிரகாசத்தின் மாறுதலுக்கு காரணமாகிறது எனக் கூறினார் .
எனினும் இந்த விளக்கம் சிபிட்ஸ் போன்ற குறுகிய கால மாறொளிர் விண்மீன்களுக்கு மட்டும் ஏற்புடையதாக இருக்கிறது. மீரா போன்ற
நீண்ட கால மாறொளிர்
விண்மீன்களுக்கு இணக்கமாக இல்லை .மீராவில் அதன் புற
அடுக்கு மட்டுமே விரிந்து சுருங்குகிறது .
இதற்கான காரணம் சரிவரத் தெரியவில்லை.

No comments:

Post a Comment