Thursday, September 15, 2011

vinveliyil ulaa

மீரா (Meera )

மீரா திமிங்கிலத்தின் தலைப் பகுதியில் அமைந்துள்ளது. செந் நிறமாய் ஒளிரும் இந்த விண்மீன் இது வரை இனமறியப்பட்ட
விண்மீன்களுள் மிகப் பெரிய உருவம் கொண்டது. இதை ஸ்டெல்லா மீரா ,ஓ சீடி(O -ceti ) கோலம் சீடி (Collum ceti ) என்று பல பெயர்களால்
அழைக்கின்றார்கள் . மீரா என்பதற்கு இலத்தீன் மொழியில் 'அற்புதமானது ' என்று பொருள்.
மீரா ஒரு மாறொளிர் விண்மீன் என்பதால் இதன் பிரகாசம் சீராக இல்லாது ஊர் அலைவு கால முறைப்படி தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது
உண்மையில் இப் பேரண்ட வெளியில் இது போல மாறொளிர் விண்மீன்கள் பல இருப்பினும் ,மீராவை அவற்றோடு ஒப்பிடமுடியாது .
ஏனெனில் மீரா சில நேரங்களில் விண்ணில்லுள்ள பிரகாசமிக்க விண்மீன்களுள் ஒன்று போலவும் ,வேறு சில சமயங்களில் பெரிய
தொலை நோக்கியால் கூட இனமறிந்து கொள்ள முடியாதவாறு மங்கலாகவும் தோன்றுகிறது .மீராவின் ஒளிவீச்சின் பெருமத்திற்கும்
சிறுமத்திற்கும் இடையே குறைந்தது 100 மடங்கு வேறுபாடு உள்ளது .நமது சூரியனும் இதுபோல கதிர்வீச்சு உமிழ்வால் ஒளிவீச்சில்
ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தினால் பூமியில் கரிம வளங்கள் யாவும் அழிந்து போய்விடும் .அதாவது உயிரினங்கள் ஏதொன்றும்
பூமியில் நிலையாக உயிர் வாழமுடியாது .இதனால் மீரா மற்றும் அது போன்ற விண்மீன்களின் குடும்பங்களில் உயிரினம் வாழ முடியாத
சூழல் நிலவும் கோள்களே இருக்க முடியும் என்று உறுதியாகக் கூறலாம் .
மீரா விண்மீனின் மா றோளிர்தலின் சராசரி சுற்றுக் காலம் 331 .62 நாட்களாகும். இதுவும் ஒவ்வொரு சுற்றிலும் சிறிது மாறுதலுக்கு
உட்படுகின்றது .அதனால் இதன் ஒளிப் பொலி வெண் -கால வரிபடத்தில் காட்டப்படும் பொதுவான மாற்றத்தில் ஏதும் மாற்றமில்லை எனினும்
பெரும மற்றும் சிறும ப் பிரகாச அளவுகளிலும் அலைவு காலங்களிலும் குறிப்பிடும் படியான நுண்ணிய அளவு மாற்றம் காணப்படுகிறது .
சிபிட்ஸ் வகை மாறோளிர் விண்மீன்கள் தன நீண்ட கால அலைவு காலத்தால் மட்டுமின்றி அதில் ஏற்படும் மாற்றத்தாலும் வேறுபட்டிருக்கின்றன.
மீராவின் சராசரி பிரகாசம் அல்லது ஒளிப் பொலிவெண் 3 .4 மற்றும் 9 .3 என்ற நெடுக்கையில் இருக்குமாறு ஒளிர்கிறது .பெருமப்
பிரகாசத்தின் போது இதுவே சீடஸ் வட்டார விண்மீன் கூட்டத்தில் மிகவும் பிரகாசமானதாக இருக்கிறது .சிறுமப் பிரகாசத்தின் போது
10 .1 என்ற ஒளிப் பொலி வெண்ணுடைய விண்மீ னாகவும் தோற்றம் தருகிறது. 1779 ல் இது 1 என்ற ஒளிப் பொலி வெண்ணைப் பெற்றிருந்ததாக பதிவுகள் தெரிவிக்கின்றன .
சிறுமப் பிரகாச நிலையில் மீராவின் புறப்பரப்பு வெப்பநிலை 1900 டிகிரி கெல்வினாகவும் ,பெருமப் பிரகாச நிலையில் 2600 டிகிரி கெல்வினாகவும்
உள்ளது.இதன் தகவு 1 .37 ஆகும். ஒரு விண்மீனின் புறப்பரப்பிலிருந்து வெளியே உமிழப்படும் ஆற்றலை ஸ்டீபன் விதிப் படி மதிப்பிடலாம் .இதன்படி ஒரு சதுர மீட்டர் புறப் பரப்பிலிருந்து
கதிர் வீச்சாக வெளியேற்றப் படும் மொத்த ஆற்றல் ,புறப் பரப்பின் வெப்ப நிலையின் நான்காவது மடிக்கு நேர் விகிதத்தில் இருக்கும் எனலாம் .
எனவே பெருமப் பிரகாச நிலையில் மீரா விண்மீன் (1 .37 )^4 = 3 .52 மடங்கு சிறுமப் பிரகாச நிலையில்; உமிழும் கதிர் வீச்சை விட அதிகமாக
உமிழ்கிறது . இது மீராவின் பிரகாசத்தில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு விகிதம் 100 மடங்கு இருக்கவேண்டும் என்றும் அதாவது அதன் ஒளிப் பொலி வெண்ணில
ஏற்படும் மாற்றம் 5 - 6 என்ற நெடுக்கையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறது .இதற்கான விளக்கம் அனுமான அடிப்படையில் பலவாறு
கூறப்பட்டுள்ளது .
முதலாவது குளிர்ச்சியான பெருஞ் சிவப்பு விண்மீனான மீரா அகச் சிவப்பு கதிர்களை அதிகம் உமிழ்கிறது. அகச் சிவப்பு கதிர்கள் என்பன வெப்பக் கதிர்
வீச்சுகள், கட்புலனறி ஒளியின் அலை நீளத்தை விட அதிக அலை நீளமும், அதிர் வெண்ணை விட க் குறைந்த அதிர்வெண்ணும் கொண்டுள்ளன .
இவை கண்களால் உணரப்படுவதில்லை . மீராவின் வெப்ப நிலை அதிகரிக்கும் போது ,கட்புலனறி கதிர்வீச்சின் அளவும் மிகுதியாக அதிகரிக்கின்றது
ஆனால் அகச் சிவப்பு கதிர் வீச்சில் குறிப்பிடும் படியான மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை .அதனால் அகச் சிவப்பு அலை நீள நெடுக்கையில் ஏற்படும் பிரகாச மாற்ற்டம் கட்புலனறி ஒளி அலை நீள நெடுக்கையில் ஏற்படுவதை விட மிகவும் குறைவு .
இரண்டாவது ஒரு விண்மீனின் பிரகாசம் அதன் ஆரத்தையும் பொருத்திருக்கின்றது. அதனால் மீராவின் ஆரம் 20 சதவீதம் குறையும் போது ,பிரகாசத்தில் மாற்றம் ஏற்படும் என்றாலும் ,இது அதன் பிரகாசத்தில் ஏற்படும் 40 சதவீதம் மாற்றத்திற்கு
மட்டுமே காரணமாக இருக்க முடியும் .இறுதியாக கட்புலனறி ஒளிக்கு விண்மீனைச் சுற்றியுள்ள புறப் படலத்தின் ஒளிரு உட்புகு தன்மையில் ஏற்படும் மாற்றம். இது அப்பகுதில் உண்டாகும் கார்பன் என்ற கரித் துகள்களால் தூண்டப்படுகிறது .இதுவும் மீராவின் பிரகாசத்தை மங்கச் செய்வதில் ஒரு பங்கேற்கிறது .
ஆனால் இப் படலத்தால் உட்கிரகிக்கப் படும் ஆற்றல் ,அகச் சிவப்புக் கதிர்களாக மீண்டும் வெளியே உமிழப்படுகிறது .இவை யாவற்றையும் கருத்தில் கொண்டால் ,மீராவின் விட்டம் சிறுமத்திற்கு
அருகாமையில் இருக்கும் போது ,பெருமப் பிரகாசத்துடனும் இருப்பது போலத் தோற்றம் தரும் எனலாம் .

No comments:

Post a Comment