Tuesday, May 28, 2013

Creative Thoughts


Creative thoughts

செயல்கள் செயல்களுக்காகச் செய்யப்படாத வரை செயலின் முழுப் பயனைப் பெறமுடிவதில்லை .செயல்கள் செயல்களாகச் செய்யப்படுவதில்லை .பெரும்பாலும் செயல்களை அப்படிச் செய்தால் மற்றவர்கள் நம்மை உயர்வாக மதிப்பார்கள் என்பதற்காகவே செய்யப்படுகின்றன .

பல்லாயிரக் கணக்கான மனிதர்களின் வாழ்கையை நுணுகி அறிந்து ,ஆண்டுக்கணக்கில் ஆராய்ந்து ,ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கை எப்படியிருந்தால் அவனும் அவனோடு சேர்ந்த சமுதாயமும் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை மிகத் துல்லியமாக நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்திருக்கின்றார்கள் .வாழ்கையை அறிவியலாகப் பார்த்து  அறிவியல்  விதிகள் போல வாழ்க்கை இலக்கணங்களை வகுத்திருக்கின்றார்கள் .அதில் சிறிய திருத்தங்கள் வேண்டுமானால் இருக்கலாம் ஆனால் பெரிய மாற்றங்கள் இருக்க முடியாது .
பெரியவர்களால் திட்டமிடப்பட்ட சராசரி வாழ்க்கையின் போக்கை அனுசரித்து வாழ்கின்ற மக்கள் தம் வாழ்நாளில் தடம் புரண்டு வீழ்வதற்கு வாய்ப்பேயில்லை .நாம் செய்யும் நாகரிக மாற்றங்கள் வாழ்வியல் ஒழுக்கங்களில் ஒழுங்கீனத்தை உட்புகுத்துகின்றதா அல்லது ஒழுக்கத்தை மேலும் மேம்படுத்துகின்றதா என்பதில் இன்னும் தெளிவில்லாமல் இருப்பதால் எல்லோரும் தத்தம் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு விளக்கத்தைக் கொடுத்து விட்டு நாகரிக மாற்றங்களைச்  செய்து வருகின்றார்கள் 

சரியாக முன் திட்டமிடாமல் எவ்வளவு முறை செயலைச் செய்தாலும் அதனால் முழுப் பயனைப் பெறவே முடியாது .பலர் தங்களுடைய பயனுறுதிறன் எவ்வளவு குறைவாக இருந்தாலும் அதற்காக வருத்தப் பட்டுக் கொள்வதில்லை.ஏனெனில் அவர்களைக் காட்டிலும் மோசமானவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள் என்ற உண்மை தரும் ஆறுதல் தான் .

இயந்திரங்கள் சுழல்வதால் கெட்டுப் போவதில்லை .உராய்வதால்  தேய்ந்து போய் பழுதடைகின்றன .வாழும் மனிதர்களே சமுதாய இயந்திரத்தை இயக்குகின்றார்கள் .இணைந்து செயல்பட்டால் சுழன்று ஓடும் .இல்லாவிட்டால் சமுதாயமும் இயந்திரம்போல உராய்ந்து தேயும். 

செலவு செய்வது எளிது .எதிர்பார்த்த பலன் கிடைக்காத போது அதைச் செய்திருக்க வேண்டாமே என்று நொந்து கொள்வார்கள் .முன் திட் டமிடுதல் துல்லியமாக இல்லாத போது இது போன்ற நிலை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது .செய்யும் செயல்களை ஒற்றையா இரட்டையா விளையாட்டைப் போலச் செய்யும் நிலையில் மாற்றம் ஏற்படும் வரை இது தொடரத்தான் செய்யும் 

நான் யார்,நான் ஏன் பிறந்திருக்கின்றேன் என்பதை நீ முழுமையாக உணராவிட்டால் வாழ்க்கையை வாழ்க்கைக்காக வாழும் நிலையும் முழுமை பெறுவதில்லை. 

தொடர்ந்து வாழ்வது என்பது உடலியக்கத்திற்குத் தேவையான ஆற்றலைத் தேடுவதுதான் மக்கள் தொகை பெருகப்பெருக ஆற்றல் பங்கீடுகளில் முறைகேடுகள் வர,அதுவே வாழும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் எதிரியாகிவிடுவதற்குக் காரணமாகின்றன . பங்கீடுகளில் ஏற்றத்தாழ்வு என்பதைவிட கூடுதல் ஆற்றலை எதிர்காலத் தேவைக்கென மறைமுகமாகச் சேமித்து வைத்துக் கொள்வதே பகைமையை வலுவூட்டுகின்றது .

மனித குலத்திற்குச் சேவை செய்வதற்குத்தான் உயிர் வாழ்க்கை. சேவையில்லாத வாழ்க்கை தேவையில்லாத வாழ்க்கை .

எல்லோருக்கும் பேராசையின் அளவு இன்றைக்கு வெகுவாக உயர்ந்துள்ளது .ஒரே முயற்சியில் உலகப் பெரும் பணக்காரனாகி விடவேண்டும் என்றே நினைக்கின்றார்கள் முயற்சியின் அளவு குறைவாகவும்,நேர்மையற்றதாகவும், திறமையற்றதாகவும் இருப்பதால்  பேராசைகள் நிறைவேறுவதில்லை.பெரும்பாலும் குறுக்கு வழியாக இருப்பதால் வாழும் பிறருடன் ஏற்படும் குறுக்கீடுகளினால் எதிரிகளைத்தான் அதிகம் சம்பாதித்துக் கொள்கின்றார்கள்    

No comments:

Post a Comment