Monday, May 6, 2013

Eluthaatha Kaditham


எழுதாத கடிதம் 
இலக்கணம் மாறுதா ,மீறப்படுகின்றதா ?
இந்திய அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர்க்கு அரசியல்வாதியாக எந்தத் தகுதியும் இருப்பதில்லை.எந்தத் தகுதியும் இல்லாமல் ஒருவர் உயர் பதவியும் ,அதிக சம்பளமும், தற்காலிய மதிப்பும்,வசதியும் அடைய முடியும் என்றால் அது இந்திய அரசியல் மட்டுமே.இது உண்மையில் மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி .இதைவிட வருத்தத்திற்குரியது என்னவென்றால் மக்களில் பெரும்பாலானோர் அது பற்றி எந்தக் கவலையும் கொள்ளாதிருப்பதுதான் .
அரசியல் படித்து அரசியல்வாதியாக யாரும் உருவாவதில்லை. அதாவது கொள்கை வழியில் உருவாவதைவிட மரபு வழியிலேயே உருவாகின்றார்கள்.அதனால் பழைய அனுபவத்தில் ஒரு புதியவரே அரசியலில் நுழைகின்றார்.ஒரு எதிர்காலஅரசியல்வாதி முதலில் ஒரு மூத்த அரசியல்வாதிக்கு எடுபிடியாக உள்ளே நுழைகின்றான்.வெள்ளைச் சட்டை வெள்ளை வேட்டிக்கு மாறுகின்றான்.அப்புறம் கரையில் அக்கறை காட்டுகின்றான்.அரசியல் கூட்டமென்றால் போஸ்டர் ஓட்டுவது,ஆள் உயரத் தட்டி வைப்பது, கொடி கட்டுவது,கூட்டம் சேர்ப்பது,கூச்சல் போடுவது ,நிதி வசூலிப்பது,மூத்தவர் பின்னாலேயே நடப்பது என அவருக்குச்  சேவைசெய்து கிடப்பதே தன் தலையாயக் கடமை என்றிருப்பார்.சொத்து வாங்குதல்,சுகங்களை வாங்குதல் என  சிலர் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு மூத்தவருக்கு வேண்டிய அந்தரங்க வேலைகளில் தன்னைடுபடுத்திக்கொள்வார்.தன் நிலையை அவர் தயவில் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்திக் கொள்ள இதுஉதவும்.மூத்தவருக்கு நம்பிக்கை ஏற்பட்டு விட்டால் அவர் அவனுக்கு கொஞ்சம் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பார் .முதலில் சின்னச் சின்ன வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கும் .அதில் மூத்தவருக்கு பங்கு கொடுத்தால் மட்டுமே பெரிய பெரிய வாய்ப்புகள் கிட்டும். பின் அரசு மேற்கொள்ளும் திட்டங்களில் ஒப்பந்தக்காரராகி தவறான முறையில் பொருள் திரட்ட துணிவுகொள்கிறார். பின் தேர்தலில் நின்று முதலில் சிறு பதவி பின்னர் பெரும் பதவி என முன்னேற்றம் காண்கிறார்.இந்த முன்னேற்றம் அவர் மூத்த அரசியல்வாதிகளை எப்படிக் கவனித்துக் கொள்கிறார் எனபதைப் பொறுத்தே அமைகிறது. இதற்கு அவர் தவறான வழியில் சேர்த்த பணத்தை தவறான முறையில் செலவழிக்கின்றார். அவருக்கு மட்டுமே தெரியும் ஓர் உண்மை ,அது சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கின்ற வேலையென்று . இப்போது அவரைச் சுற்றி எப்போதும் அடியாட்கள் ஏழெட்டுப் பேர்.எங்கு போனாலும் பின்னாலே ஒரு கூட்டம் ,குவாலிஸ் மாதிரி பெரிய கார்கள் ஒரு ரயில் வண்டித் தொடர் போல.
இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் செம்மையாக உருவாகாத சாலைகளை மீண்டும் மீண்டும் போட்டுக் கொண்டே இருப்பார்கள் .தேவையில்லாமலேயே கட்டங்களை எழுப்புவார்கள் .எல்லாம் அரசின் நிதியை ஜீரணித்து முடிக்கும் வரைதான் . இதுதான் அவர்களுடைய அரசியலில்  வாழ்நாள் சாதனை.மக்கள் நேயத்துடன் சுய நலமின்றி ஒரு காரியம் கூடச் செய்ய மாட்டார்கள் .மக்களுக்காக அரசின் நிதியைச் செலவழிக்கும் ஒவ்வொரு நிலையிலும் தம் பங்கிற்கு கமிஷன் எதிர்பார்பார்கள்.மக்கள் ஒருவேளை விழிப்புற்று அரசியல் வாழ்கையே அஸ்தமித்துப் போய்விட்டால் என்ன செய்வது என்பதை முன் கூட்டியே திட்டமிடுவதில் மிகவும் வல்லவர்கள் .பொறியியல் ,கல்வியியல் ,மருத்துவக் கல்லூரிகள் ,தொலைக் காட்சி நிலையங்கள் ,திரைப்படம் தயாரித்தல் ,தொழில் மற்றும் வர்த்தகம்,நிதி நிறுவனங்கள் ,தாங்கும் விடுதிகள் ,பொழுது போக்கு மையங்கள் ,நகர் மையங்களில் விலை மதிப்பு மிக்க இடங்களை குறைந்த விலைக்கு வங்கிப் போடுதல் பண்ணைத் தோட்டங்கள் ,எஸ்டேட்டுகள் ,பங்களாக்கள் ,வெளிநாட்டு வங்கிகளில் பணம் போட்டு வைத்தல் என பல்வேறு வழிகளில் பாதுகாப்பு நடவடிக்களை எவ்விதக் குறைவுமின்றி மேற்கொள்வார்கள். காற்றுள்ள போதே தூற்றிக் கொண்டவர்கள் .தங்கள் நிலையை உயர்த்திக் கொள்வதற்காக அரசியல்வாதியாக உருவானவர்கள் ஒருநாளும் மக்களுக்கு நல்லதைச் செய்ய மாட்டார்கள் .இந்தியர்களின் தூரதிர்ஷ்டம் இன்னும் இவர்களை நம்பியே ஆட்சியை ஒப்படைக்க வேண்டியிருக்கின்றது .
இங்கே இலக்கணம் மாறுகின்றதா இல்லை மீறப்படுகின்றதா ? இலக்கணம் மாறினால் அது எல்லோராலும் மறைமுகமாக மனத்தால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது என்று பொருள் .மீறப்பட்டால் அது அரசியல் வாதிகள் மட்டும் செய்யும் தவறு.தனது அதிகாரத்தாலும்,பண பலத்தாலும் எப்பேர்ப்பட்ட தவறுகளையும் மூடி மறைத்து விட முடியும் என்ற தைரியத்தால் இந்தத் தவறுகள் மீண்டும் மீண்டும் அரங்கேறி வருகின்றன .இலக்கணம் மாறினாலும் அல்லது மீறப்பட்டாலும் அது தடுத்து நிறுத்தப் படவேண்டும் .அதற்கு முகாந்திரம் இப்போது இல்லை .இனி எப்போதும் இல்லை என்று நினைக்கும் போதுதான் கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது .

No comments:

Post a Comment