Wednesday, May 29, 2013

Mind without Fear


Mind without Fear

வியாபாரத்தில் தாங்கவொண்ணா இழப்பு ,பொறுக்க முடியாத கடன் தொல்லை,வரவுக்கு மேல் கட்டுப்படுத்த இயலாத செலவு  போன்ற பல தெரிந்த மற்றும்  தெரியாத காரணங்களுக்காக சிலர் தற்கொலை செய்து கொள்கின்றார்கள்.இவர்கள் மாணவர்களைப் போல அல்லது இளம் காதலர்களைப் போல வாழ்கை அனுபவம் இல்லாதவர்களில்லை.குறைபாடான அனுபவத்தின் மீது குறையாத நம்பிக்கையை வளர்த்துக் கொண்டதின் விளைவுவே  இதுபோன்ற விபரீதங்கள்.

ஒருவர் விரும்பினால் இன்றைக்கு எந்த வியாபாரத்தையும் தொடங்கலாம் .நிதி உதவி ,நிர்வாக மற்றும் வர்த்தக ஆலோசனைகள் பெறுவதில் யாருக்கும் எந்தச் சிக்கலும் இல்லை வியாபாரம் கொள்கை அளவில் சாத்தியமாக இருந்தாலும் நடைமுறையில் அதற்குப் பின்னால் பல நுட்பமான விஷயங்கள் இருக்கின்றன.அவற்றை சுய அனுபவத்தினால் பெறாமல் எளிதாக எடை போட்டவர்களே பின்னல் இதுபோன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றார்கள் எந்த வியாபாரத்தைத் தொடங்கப் போகின்றோமோ அதன் நெளிவு சுழிவுகளைப் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.கச்சாப் பொருட்களை த் தடையின்றி பெறுவதற்கும்,மக்கள் தேவையுடன் சந்தைப் படுத்துவதற்கும்,உற்பத்திச் செலவுகளைக் குறைக்க நவீன வசதிகளைப் புகுத்துவதற்கும்,விற்பனையை அதிகரிக்க பொருளின் தரத்திலும், புதுமையிலும் மாற்றங்கள் செய்வதற்கும்  உள்ள வாய்ப்புக்களைத் தெரிந்திருக்க வேண்டும் .
வியாபாரம் என்றாலே வரவு செலவு பணக் கணக்குத்தான்.இதில் ஆழமான அறிவும் அனுபவமும் ஓரளவாவது அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.இவற்றையெல்லாம் விட வியாபாரத்தில் நேர்மை மிகமிக முக்கியம்.தொழில் நேர்மை ஒன்று மட்டுமே ஒருவரை வியாபாரத்தில் நிலைத்திருக்கச் செய்யும்
இன்றைக்குப் பலர் வியாபாரம் தொடங்கிய மறுநாளே அளவில்லாத ஆதாயம் பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.இதனால் பொருளின் விலையைப் பல  மடங்கு உயர்த்தி விற்க முயல்வார்கள்.ஒரு சிலர் புதிய கடை என்று பொருளின் உண்மை விலை தெரியாமலேயே அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்வார்கள். ஆனால் அவர்களுடைய காலங்கடந்த அதிருப்பதி,சமுதாயத்தில் வலிமையாக ஊடுருவும் போது வியாபாரம் விரைவில் மந்தப்படும். அப்போது அதிரடியாக விலையைக் குறைத்து விற்கத் துணிந்தாலும் நுகர்வோர் பெரும்பாலானோர் தங்கள் பழைய எண்ணங்களை மாற்றிக்கொள்வதில்லை.குறைந்த லாபத்துடன் வியாபாரத்தில் நிலைத்து நிற்கத் தெரியாமல்,நேர்மையற்ற வியாபாரத்தில் சிக்கி நிலை குலைந்து போய்விடுகின்றார்கள் .
கடன் வாங்கி வியாபாரம் தொடங்கியவர்கள் வட்டிக்குப் பயந்து நேர்மையற்ற வியாபாரத்தில் விழுந்து விடுகின்றார்கள்.பிற எந்தக் காரணத்தைக் காட்டிலும் நேர்மையின்மையே ஒருவரை வியாபாரத்தில் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்குகின்றது.இதற்கு அடிப்படைக் காரணம் அவராகவே இருப்பதால் யாரும் இந்த உண்மையை உணர்வதில்லை .
 ஒரு வியாபாரத்தைத் தொடங்குவதற்கு அனுபவம் அதிகம்  தேவையில்லை ஆனால் வியாபாரத்தில் நிலைத்து நிற்பதற்கு அனுபவம் தேவை. இதை வியாபாரம் செய்துகொண்டே காலப் போக்கில் ஒருவர் கற்றுக்கொள்ள முடியும்.அவசரப் பட்டவர்களே சிக்கல்களில் சிக்கிக் கொண்டு விடுபட முடியாமல் தற்கொலை செய்து கொண்டு விடுகின்றார்கள். இவர்கள் பெரும்பாலும் அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டோ,துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டோ ,வீட்டில் தூக்கிலிட்டுக் கொண்டோ தற்கொலை செய்து கொள்கின்றார்கள் .இவர்கள் தன்னை அழித்துக் கொள்வதோடு தன் மனைவி மக்களையும் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டுவார்கள் அல்லது நிர்கதியாக விட்டுச் செல்வார்கள் .
பொதுவாக இது போன்ற தற்கொலைகளைத் தவிர்க்க நேர்மையான வியாபாரத்தின் அனுகூலங்களைப் பற்றிய விஷயங்களை வியாபாரம் தொடங்கும் முன்னர் தெரிந்து கொள்ள கட்டாயப்படுத்த வேண்டும் .

No comments:

Post a Comment