Friday, May 11, 2012

நைட்ரஜனின் பயன்கள் 19ll ல் லார்டு ரலே என்பார் வினை திறமிக்க நைட்ர ஜனைக்(active nitrogen)கண்டறிந்தார்.தாழ்ந்த அழுத்தத்தில் நைட்ரஜன் வழி மின்னிறக்கம் செய்ய,அது மஞ்சள் நிற வெப்போளிவைத் (thermo luminescence)தருகிறது.இது வினை திறமிக்கதாய் இருப்பதால் பெரும்பாலான உலோகங்கள் ஆலோகங்களுடன் நேரடியாகக் கூடுகிறது .வெள்ளைப் பாஸ்பரஸ் சிவப்பாகவும் ,அயோடின் நீலப் புகையாகவும் மாற்றம் பெறுகின்றன. இதையே வினை திறமிக்க நைட்ரஜன் என்பர். ஓரளவு மந்தமான வளிமம் என்றாலும் நைட்ரஜன் பல ஆயிரக்கணக்கான வேதிச் சேர்மங்களில் இணைந்திருக்கின்றது. இது விவசாயத்தில் உரமாகவும்,தொழில் துறையில் உணவுப் பொருளுற்பத்தி மற்றும் அவை கெடாமல் பாதுகாக்கவும் ,வெடி மருந்து,நஞ்சுப் பொருட்கள்,நைட்ரிக் அமிலம் போன்ற வேதிப் பொருட்களின் உற்பத்திக்கு மூலப் பொருளாகவும் விளங்குகிறது. அமோனிய உப்புக்கள் உரமாகப்பயன் படுகின்றன,அமோனியாவை ஆக்சிஜனேற்ற வினைக்கு உட்படுத்தி நைட்ரிக் அமிலத்தையும் உற்பத்தி செய்ய முடியும் . நீர்ம நைட்ரஜன் உணவுப் பொருட்களின் குளிர்பதனப் பாதுகாப்புக்கும்,உயிர் பொருட்களைப் பாதுகாத்துப் பிற்பாடு பயன்படுத்திக் கொள்வதற்கும் பயன் தருகிறது.எடுத்துக் காட்டாக மனிதர்கள் மற்றும் விலங்கினங்களின் விந்துக்களை நீர்ம நைட்ரஜனில் முக்கி வைத்து பிற்பாடு செயற்கையாகக் கருத்தரித்தலுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். மிகவும் தீவிரமாக வினையில் ஈடுபடக் கூடிய வளி மண்டல வளிமங்களிலிருந்து,அதனால் பாதிக்கப்படும் புதிய உற்பத்திப் பொருட்களை விலக்கி வைக்க நைட்ரஜன் வளிமத்தை மூடு திரையாகப் பயன்படுத்துகின்றார்கள்.
டிரான்சிஸ்டர்,டையோடு போன்ற மின்னணுவியல் சாதனங்களை உற்பத்தி செய்யும் போது அவை வளி மண்டலக் காற்றால் பாதிக்கப்படாதிருக்க இவ் வழிமுறையைப் பின்பற்றுகின்றார்கள்.மது பானங்கள் ஆக்சிஜனேற்றம் பெறுவதைத் தடுக்க புட்டிகளில் நைட்ரஜனை இட்டு நிரப்புவார்கள்.பழங்கள் அழுகி விடாமல் பாதுகாக்கவும் நைட்ரஜன் வளிமம் பயன் தருகிறது. ஆப்பிள் பழங்களை தாழ்ந்த வெப்ப நிலை மற்றும் நைட்ரஜன் வெளியில் 30 மாதங்கள் வரை பாதுகாக்க முடியும்.
எண்ணைய்க் கிணறுகளில் நைட்ரஜனை அழுத்தி குழாய் வழியாக பூமிக்கு அடியில் செலுத்த,அது அங்குள்ள எண்ணையை எக்கி வெளிக்கொண்டு வருகிறது.இதையே கூடுதல் எண்ணெய் உற்பத்தி (enhanced oil production) என்பர். இதற்கு வளி மண்டலக் காற்றை ப் பயன்படுத்துவதில்லை. ஏனெனில் இதிலுள்ள சில வளிமக் கூறுகள் எண்ணையோடு வினை புரிந்து வேண்டாத விளை பொருட்களை உற்பத்தி செய்து விடுகின்றன. நைட்ரஜனைக் கொண்டுள்ள பல சேர்மங்கள் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் உயிர் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றன. இவற்றுள் முக்கியமானவை புரோட்டீன்களும் நியூக்ளிக் அமிலங்களுமாகும் .

No comments:

Post a Comment